வாக்கியத்தொடைநோக்கு

வாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல் வேண்டும். அவாய் நிலையாவது வாக்கியத்திலே தொடுக்கப்பட்டு நிற்குஞ் சொற்கள் தம்முள்ளே ஒன்றையொன்று விரும்பிநிற்குந் தன்மை. இயைபாவது வாக்கியத்திலே நிற்கும் சொற்களின் பொருள்கள் இடையறவுபடாது தம்முள்ளே இணங்கி நிற்குந் தன்மை. அண்மையாவது வாக்கியத்திலே நிற்குஞ்சொற்கள் இடையீடின்றி அடுத்து நிற்குந் தன்மை. இடையறவுபடாமல் உச்சரிக்குந் தன்மையும் அதுவேயாம்.

ஆற்றலில்லாத சொற்கள் கருதிய பொருளை வெளிப்படுத்த மாட்டா. “பாய்மாவிவர்ந்து” என்புழிப் பெறப்படும் பொருள் மாவிவர்ந்து என்புழிப் பெறப்படமாட்டாது; ஆற்றலில்லை. ஆற்றலுள்ளவாயினும் அவாய்நிலை முதலியனவும் வாக்கியம் எனப்படற்கு இன்றியமையாதனவாகும். கரி, பரி, தேர், காலாள் எழுந்தன என்னும் வாக்கியத்தைக் கரி, நரி, தோணி, கார் எழுந்தன என்றால் அது அவாய்நிலையில்லாதனவாகும். நெருப்பிலே சுடுக என்பதனை நெருப்பாலே நனைக்க என்றால் அவ்வாக்கியம் இயைபில்லாதனவாகும். மலைதீயுடையது; தேவதத்தனாலே உண்ணப்பட்டது என்பதனை மலையுண்ணப்பட்டது; தீயுடையது தேவதத்தனால் என்றால் அவ்வாக்கியம் அண்மையில்லாதனவாகும்.

வாக்கியங்களை எழுதுவாருடைய கருத்து யாது? தாம் கருதிய பொருளைக் கருதியவாறே பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதன்றோ! சொற்களும், சொற்றொடராகிய வாக்கியமும் தவறுறுமாயின்; அவர் கருதிய பொருள் கருதியவாறே பிறர்க்குப் புலப்படுமாறு எப்படி? ஆதலால் வாக்கியமெழுதுவோர் அறிவிக்கக் கருதிய பொருளை முன்னரே முறைப்பட மனதில் அமைத்துக்கொண்டு பின்னர் எழுதல் வேண்டும். எழுதியபின்னர் தம்வாக்கியத்திலே நிற்குஞ்சொற்களைப் பரீக்ஷித்து வழுச்சொற்களும், பிறபாஷைச் சொற்களும் தோன்றுமாயின்; அவைகளை விலக்கல் வேண்டும். அவாய் நிலை முதலியவற்றின் அமைவுகளையும் நோக்கல் வேண்டும். அப்பால் வாக்கியவியைபு, பொருளியைபு முதலியனவைகளையும் நோக்கல் வேண்டும். குற்றங்கள் பற்றியிருக்கும் வாக்கியம் நோக்குடையதாகாது.

இக்காலத்தில் செய்யப்படும் நூல்களுக்குள்ளே பெரும்பாலானவும், பாடசாலைப்புத்தகங்களும், மாசிகபஞ்சிக முதலியனவும் வாக்கியவடிவமாகவே எழுதப்பட்டு வருகின்றன. ஆதலால் வாக்கியங்களை பிழையற எழுதும் பயிற்சியும் அவசியம் வேண்டியதே. தமிழ்ப்பாஷையிலே முற்காலத்தில் வாக்கியரூபமாக நூல்செய்யும் வழக்கின்மையால் வாக்கியவடிவங்களை எழுதுதற்கு வேண்டும் விதிகூறும் நூல்களும் இலவாகின. வாக்கிய இலக்கணம் இக்காலநாகரிகத்திற்கு இயையுமாறு வாக்கியம் எழுதும் முறைகளைக்காட்டி “வசனத்தொடை” என்னும் பெயருடன் முதற்புத்தகம் ஒன்று நல்லூர் ஶ்ரீமான் த. கைலாசப்பிள்ளை யவர்களாலே எழுதி அச்சிடப்பட்டிருக்கின்றது. தமிழ்ப்பாசையிலே வாக்கியம் எழுதுவோர் யாவரும் அதனை வாங்கிக் கற்பது நல்லது. பத்திராதிபர்கள், பாடசாலைப் புத்தகம் எழுதுவோர்கள் முதலியோருக்கு அது விசேடமாக வேண்டியதேயாம்.

முற்காலத்திலே தமிழ்ப்பாசையிலே நூல்களெல்லாம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும்பாக்களாலே பெரும்பாலும் செய்யப்பட்டன. வெண்பாவாலும், ஆசிரியப்பாவாலும் செய்யப்பட்ட நூல்களே பெரும்பாலன. நூல்கள் மாத்திரமோ விஞ்ஞாபனம், கண்டனம் முதலியனவுஞ் செய்யுளிலே அமைக்கப்பட்டன. பிற்காலத்திலே விருத்தம், கட்டளைக்கலித்துறை முதலிய பாவினங்களால் செய்யப்படும் நூல்கள் பலவாயின. இக்காலத்திலே கலிப்பாவிலும், வஞ்சிப்பாக்களிலும் நூல்செய்வாரைக் காணல் அரிது. அந்தப்பாக்களைக் காண்லும் அரிது.

வடமொழியிலோ வாக்கிய வடிவமாகிய நூல்கள் முற்காலத்திலும் உள்ளன. வடநூலார் வாக்கியத்தை முத்தகம் என்றும், விருத்தகந்தி என்றும், உற்கலிகாப் பிராயம் என்றும் சூர்ணகம் என்றும் நான்காகப் பிரிப்பர். அவற்றுள்ளே முத்தகமாவது உருபு முதலியன தொக்குநிற்றலின்றி விரிந்துநிற்றலுடைய வாக்கியம். விருத்தகந்தியாவது செய்யுளின்பாகமும் இடையிடையே சேர்ந்துவரும் வாக்கியம். இவ்வாக்கியம் பரிமேலழகருரையிலும், சிவஞானபோத மாபாடியத்திலும் ஆங்காங்கு வருகின்றன. “அமிழ்தினுமாற்றவினிதே” என்னும் குறளுரையிலே “சிறுகையானளாவலாவது இட்டுந்தொட்டும் கௌவியுந்துளந்தும் நெய்யுடையடிசின் மெய்படவிதிர்த்தல்” என்பது விருத்தகந்தி. சிவஞானபோதத்திலே எட்டாஞ் சூத்திரத்திலே முதலாம் அதிகாரத்திலே “விழுச்சுடர்ச் செம்பொன் மேருமால்வரையைத் தலைப்படலுறுவாராய்” எனவரும் உரைவாக்கியமும் விருத்தகந்தி. உற்கலிகாப் பிராயமாவது உருபு முதலியவற்றின் தொகைமிகவரும் வாக்கியம். சூர்ணகமாவது தொகைமிக வருதலன்றிச் சொற்பமாகவரும் வாக்கியம்.

வாக்கியம் எழுதுதற்குப்பயில்வோர் யாவரும் பரிமேலழகருடைய உரைவாக்கியங்களையும், சிவஞான சுவாமிகளுடைய உரைவாக்கியங்களையும், ஆறுமுகநாவலரவர்களுடைய வாக்கியவடிவமாயுள்ள நூல்களையும் பலமுறை படித்துப் பயிலுதல் நல்லது. வாக்கியமானது நோக்கமையாது வழுப்படுமாயின்; அதனால் அறிவிக்கப்படும் பொருளும் தவறுறும்.

இக்கட்டுரை சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரினால் எழுதப்பட்டு வித்தியாபாநு பத்திரிகையில் 1910ம் வருடம் இது வெளிவந்தது.