பஞ்சவிஞ்சதி விக்கிரகம்

வ்வப்பொழுது சிவபிரானால் ஆன்மாக்களை இரட்சித்தற்பொருட்டு கொள்ளப்பட்டதாய், மகேசுர பேதங்களாயுள்ள சந்திரசேகரமூர்த்தி முதலிய மூர்த்தங்கள் பஞ்ச விஞ்சதி விக்கிரகங்களாம். பஞ்சவிஞ்சதி – இருபத்தைந்து, விக்கிரகம் – மூர்த்தம்.

அவை, இலிங்கோற்பவமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகர், அர்த்தநாரீசுவரர், சோமாஸ்கந்தர், சக்கரப்பிரதமூர்த்தி, ஶ்ரீமூர்த்தி, அர்த்தாங்கவிட்டுணு, தக்கிணாமூர்த்தி, பிச்சாடந மூர்த்தி, கங்காளமூர்த்தி, காமசங்காரமூர்த்தி, காலசங்காரமூர்த்தி, சலந்தரசங்காரமூர்த்தி, திரிபுரசங்காரமூர்த்தி, சரபமூர்த்தி, நீலகண்டமூர்த்தி, திரிபாதமூர்த்தி, ஏகபாதமூர்த்தி, பைரவமூர்த்தி, விருஷபாரூடமூர்த்தி, சந்திரசேகரமூர்த்தி, நடராஜமூர்த்தி, கங்காதரமூர்த்தி, திரிமூர்த்தி மூர்த்தி என்னும் இருபத்தைந்துமாம்.

இலிங்கோற்பவ மூர்த்தி

இலிங்கத்திலுற்பவித்த மூர்த்தி, இம்மூர்த்தம் ஆன்மவர்கமெல்லாம் உற்பத்தியடையும்படி கொள்ளப்பட்டது.

சுகாசனமூர்த்தி

சுகமாகிய ஆசனத்தையுடைய மூர்த்தி. இம்மூர்த்தம் ஆன்மாக்களெல்லாம் வேறுபாடின்றி இல்லற விருப்பம் எய்தும் பொருட்டுக்கொள்ளப்பட்டது.

உமாசகமூர்த்தி

உமையம்மையோடு சமேதமாயுள்ள மூர்த்தி. இம்மூர்த்தம் ஆன்மாக்களெல்லாம் வாழ்க்கைத்துணைநலம் எய்தி வாழும்பொருட்டு கொள்ளப்பட்டது.

கலியாணசுந்தரமூர்த்தி

விவாகச்சிறப்புடைய மூர்த்தி. இம்மூர்த்தம் யாவரும் களத்திரசகிதராய் வாழும்பொருட்டுக் கொள்ளப்பட்டது.

அர்த்தநாரீசுவரமூர்த்தி

பாதிபெண்வடிவமாயுள்ள மூர்த்தி. இம்மூர்த்தம் யாவரும் மோகமடையும்படி கொள்ளப்பட்டது.

சோமாஸ்கந்தமூர்த்தி

உமையோடும் முருகபிரானோடும் கூடியமூர்த்தி. இம்மூர்த்தம் யாவரும் மக்கட்பேறடையும்படி கொள்ளப்பட்டது.

சக்கரப்பிரதமூர்த்தி

விட்டுணுவுக்கு சக்கரங்கொடுத்த மூர்த்தி. இம்மூர்த்தம் யாவர்க்கும் போகங்கொடுக்கும்படி கொள்ளப்பட்டது.

அர்த்தாங்கவிட்டுணுமூர்த்தி

பாதித்திருமேனியிலே விட்டுணுவையுடைய மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் இருவினையொப்பு வருமாறு கொள்ளப்பட்டது.

தக்கிணாமூரத்தி

தெற்குநோக்கியமூர்த்தி. இம்மூர்த்தம் யாவரும் தத்துவோபதேசம் பெற்று முத்தியடையுமாறு கொள்ளப்பட்டது.

பிச்சாடநமூர்த்தி

பிச்சைக்கு சென்ற மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் சுகதுக்கங்களை ஒடுக்கும்படி கொள்ளப்பட்டது.

கங்காளமூர்த்தி

கங்காளந்தரித்த மூர்த்தி. கங்காளம் – முதுகெலும்பு. இம்மூர்த்தம் பக்குவான்மாக்களுக்கு வைராக்கியங்கொடுக்குமாறு கொள்ளப்பட்டது.

காமசங்காரமூர்த்தி

மன்மதனைச்சங்கரித்த மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் காமவிச்சையை நீக்கும்படி கொள்ளப்பட்டது.

காலசங்காரமூர்த்தி

இயமனைச்சங்கரித்த மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் இயமவேதனை நீக்கும்பொருட்டுக் கொள்ளப்பட்டது.

சலந்தரசங்காரமூர்த்தி

சலந்தரனைச் சங்கரித்த மூர்த்தி. இம்மூர்த்தம் யோகிகளுடைய கோபம் நீங்குமாறு கொள்ளப்பட்டது.

திரிபுரசங்காரமூர்த்தி

முப்புரங்களையும் அழித்தமூர்த்தி – இம்மூர்த்தம் முக்குணங்களையும் அடக்குதற்கு கொள்ளப்பட்டது.

சரபமூர்த்தி

நரசிங்கத்தின் வலியடக்குமாறு எண்காற்பறவை வடிவங்கொண்ட மூர்த்தி. இம்மூர்த்தம் பக்குவான்மாக்களுக்கு மாயை, கருமம் என்னும் இருமலங்களையும் நீக்குமாறு கொள்ளப்பட்டது.

நீலகண்டமூர்த்தி

நஞ்சுண்டு கண்டத்திலடக்கிய மூர்த்தி. இம்மூர்த்தம் ஆணவமலம் நீங்கும்படிகொள்ளப்பட்டது.

திரிபாதமூர்த்தி

மூன்றுபாதமுடையமூர்த்தி. இம்மூர்த்திக்கு நான்கு கொம்பும் இரண்டு கழுத்தும் ஏழு கைகளுமுள. இம்மூர்த்தம் யாவருக்கும் சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றுங் கொடுத்தற்குக் கொள்ளப்பட்டது.

ஏகபாதமூர்த்தி

ஒருபாதமுடையமூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் ஞானங்கொடுத்தற்குக் கொள்ளப்பட்டது.

பைரவமூர்த்தி

இம்மூர்த்தம் சர்வசங்கபரித்தியாகம் யாவருக்கும் உண்டாதற்பொருட்டுக் கொள்ளப்பட்டது.

இடபாரூடமூர்த்தி

இடபத்திலேறிய மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் கிருபைசெய்தற் பொருட்டுக் கொள்ளப்பட்டது.

சந்திரசேகரமூர்த்தி

சந்திரனைத்தரித்த முடியுடைய மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் பிறப்பிறப்பு நீங்குமாறு கொள்ளப்பட்டது.

நடராஜமூர்த்தி

நடனத்திற்கு தலைமைபூண்ட மூர்த்தி. இம்மூர்த்தம் யாவருக்கும் பேரானந்தம் கொடுத்தற்காகக் கொள்ளப்பட்டது.

கங்காதரமூர்த்தி

கங்கையைத்தரித்த மூர்த்தி. இம்மூர்த்தம் யாவரையும் பேரின்பத்திலே அழுத்தும்பொருட்டுக் கொள்ளப்பட்டது.

திரிமூர்த்திமூர்த்தி

திரிமூர்த்தி வடிவங்கொண்ட மூர்த்தி. இம்மூர்த்தம் ஆன்மாக்கள் சாக்கிரகம் முதலிய முன்றவத்தாரூபங்களை அடைதற்குக் காரணமாகக் கொள்ளப்பட்டது.

இங்கே சொல்லப்பட்ட மூர்த்தங்களுள்ளே சில மூர்த்தங்கள் சிவரகசியம் முதலிய நூல்களிலே வேறாகக் காணப்படுகின்றன.

பஞ்சவிஞ்சதி விக்கிரகம் எனுமிவ்வாக்கம் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரினாலே எழுதப்பட்டு 1904ம் வருடம் விவேகபாநு பத்திரிகையில் வெளிவந்தது. ஐதிக படங்கள் சிவபராக்கிரமம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை.