சும்மா இரு

“ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்”

தாயுமானவர் அருணகிரியாரைப் பாராட்டி வியப்படைகிறார். அருணகிரியார் சொன்ன மெய்யான சொல் யாது? “சும்மா இரு” என்பதாகும்.

“சும்மாஇரு சொல்அற என்றலுமே
அம்மா பொருள்ஒன்றும் அறிந்திலனே”

யோகசுவாமிகள் தம்மிடம் வந்த பக்தர்களுக்குச் செய்த அருளுபதேச மந்திரமும் இதுவேயாகும். சும்மா இருக்கும் சுகத்தை அருணகிரியார் அலங்காரத்தில் “சொல்லொயாதிந்த ஆனந்தமே” என்று குறிப்பிடுவார்.

“சொல்லுகைக் கில்லைஎன்று எல்லாம்இழந்து சும்மா இருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்டவா”

என்றுங் கூறுவார். இத்தகைய அனுபூதியை எண்ணியே

“ஆதாளியை ஒன்று அறியேலை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ”

என்றுங் கூறுவார்.

சும்மா இருப்பது என்பது என்ன? செயல் அடங்கி, பேச்சு அடங்கி, மனம் அடங்கி இருப்பதையே சும்மா இருத்தல் என்பர். இந்த மூன்றையும் காஷ்டமௌலம், வாக்குமௌனம், மனோமௌனம் என்று சொல்வர். ஆசையற்ற இடத்தில் பேசா அநுபூதி பிறக்கும் என்று கூறுவர்.

இறைவனுடைய அருளைத் தேடிச்செல்கின்றவர்கள் அதனைப் பெறுவதற்கு என்ன என்னவோ முயற்சி செய்கின்றார்கள். அதை அடைந்த மாத்திரத்தில் சொல்அடங்கி, செயல் அடங்கி, மனமடங்கி சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டு சும்மா இருக்கிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் பல பேசியிருக்கலாம். ஆனால், அநுபவத்தில் ஈடுபடும்போது எல்லாம் அடங்கிவிடும்.

யோகசுவாமிகள் இந்த சும்மா இருக்கும் சுகத்தை நன்கு அனுபவித்தவர்கள், ஆதலாலேதான் தாம்பெற்ற இன்பத்தை தம் அடியார்களும் பெறவேண்டும் என்ற கருணையினால் சும்மாஇரு என்ற அருளநுபவத்தைத் தம் பக்தர்களுக்கு உபதேசஞ் செய்தார். எங்கே மௌனம் தொடங்குகின்றதோ அங்கே ஞானம் நிறைவு அடைகின்றது. “மோனம் என்பது ஞான வரம்பு” என்று சொல்வார்கள். வாய் பேசுகின்றபோது அதனை “அநுபூதிநிலை” என்று சொல்ல முடியாது. அநுபூதி பெற்றவர்கள் மௌனமாக இருந்து, பிறகு உலகம் உய்யவேண்டுமென்று சிலவற்றைச் சொல்வார்கள். யோகசுவாமிகள் சும்மா இருக்கும் சுகத்தை அநுபவித்து அதிற் பெற்ற அருளனுபவத்தை மக்களுக்குக் கூறுவதற்காக மேல்நிலையில் இருந்து கீழிறங்கி நற்சிந்தனை உபதேசங்களை செய்தருளினார்கள்.

வெண்காயம் சாப்பிட்டவன் ஏப்பம் விடும்பொழுது வெண்காய வாசனை வருவது போலச் சும்மா இருக்கும் நிலையில் சுகம் அநுபவித்த சுவாமிகள் நற்சிந்தனை முழுவதிலும் அதனையே படரவிட்டுள்ளார்கள்.

“வாக்கிறந்த இன்பந் தந்தான்”
“நாமேநாம் என்றுரைத்தான்”
“தாமேதாம் என்றுரைத்தான்”

என்பனபோன்ற அருளநுபவங்கள் அவர்தம் சுருநாதனிடமிருந்து பெற்றுக்கொண்டவையாகும். சுவாமிகள் தாம் பெற்ற அனுபவங்களை யெல்லாம் குருநாதரிடமிருந்தே பெற்றுக்கொண்டதாகவே கூறுவார். சுவாமிகளுடைய குருநாதரை விசர்ச் செல்லப்பா என்றால்தான் பொதுமக்களுக்குப் புரியும். விசர்ச்செல்லப்பாவை ஒரு கடைக்காரர் ஒருநாள் ஒரு கொட்டிலுக்குள் கட்டிவைத்துவிட்டார். யோகசுவாமிகள் அந்தக்கொட்டிலையே தமது சாதனா மண்டபமாக்கிக் கொண்டார். உலக மக்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக மகான்கள் ஆடும் நாடகம் இதுவாகும். அவர்கள் சும்மா இருந்து அநுபவிக்கும் சுகத்தை இலௌகீகர்கள் கெடுத்துவிடுகிறார்கள், விசர்வேடம் பூண்டுவிட்டால் பொதுமக்கள் அங்கே ஒரு விசர்நாய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஒதுங்கிப் போய்விடுவார்கள். மகான்கள் தமது உண்மை நிலையைக் காட்டிவிட்டால் அவர்களது உடம்பிலுள்ள மயிர்களையே பிடுங்கிக்கொண்டுபோய்த் தீர்த்தம் ஆடவும் பின்னிற்கமாட்டார்கள்.

ஒரு முயற்சியும் இன்றிப் பணம் நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்று பொதுமக்களில் பலர் விரும்புகிறார்கள். பாடுபட்டு உழைத்து அந்தப்பயனில் இன்பம் காணவேண்டும் என்று முயற்சிப்போர் மிகக்குறைவு. இதேபோலத்தான், வெளியே ஓடிச்செல்லும்போது ஒரு நிமிட நேரம் மகானைத் தரிசித்துத் தானும் மகானாகிவிட வேண்டும் என்று நினைப்பவர் அநேகர். மகான்கள் அந்தநிலையை அடைவதற்கு எவ்வளவு சாதனைகள் செய்தார்கள், எத்தனை சதசங்கங்கள் செய்தார்கள் என்று சிந்திப்பதே இல்லை. உள்ளத்திலுள்ள அழுக்காறு, ஆசை, கோபம் ஆகியவற்றில் எதையும் தியாகம் செய்யாமலே மகான்களாகி விடவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள்.

இன்றைய மக்கள் நீரில் இறங்காமலே நீச்சல் பழகவேண்டும் என்று விரும்புகின்றார்கள். வைத்தியனிடம் செல்லாமலே வைத்தியன் தங்கள் வீட்டுக்கு மருந்தை அனுப்பிவைக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதனை இல்லாமலே சாத்தியம் ஏற்படவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

“எண்ணம் யாவும் இறந்திட வேண்டும்”
“நிச சொரூபம் அறிந்திட வேண்டும்”
“ஊன்று பாதத் துறங்கிட வேண்டும்”
“தூண்டு சோதி விழுங்கிட வேண்டும்”
“எங்குந் தெய்வத்தை கண்டிட வேண்டும்”

என்பன விசர்ச்செல்லப்பா தனக்குத் தந்த சொத்துக்கள் என்று சுவாமிகள் கூறுவார்கள்.

வேதங்களின் சிகரமாய் அமைந்தவை உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களின் சாரமே சும்மாஇரு என்பது. ஜனகாதி நால்வரும் கற்கவேண்டியன எல்லாம் கற்றபின் தாம் கற்றது ஒன்றுமில்லை என்று முடிவுக்கு வந்தார்கள். இறைவனிடம் சென்றார்கள். இறைவனார் வாய்திறந்து ஓர் வார்த்தை பேசவில்லை. கல்லாலின்கீழ் தெட்சணாமூர்த்தியாக இருந்தார்கள். சீடர் நால்வரும் தெட்சணாமூர்த்தி சொல்லாமல் சொன்னதைத் தமக்குள்ளே ஆனந்தமாக அநுபவித்தார்கள்.

“கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்றகேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்”

என்று கூறியருளினார் பரஞ்சோதி முனிவர்.

எல்லாம் சிவமயமாக இருக்கும்பொழுது இறைவனைக் காட்டிலும் ஆத்மா வேறான தத்துவமாக இருக்க முடியாது. ஆத்மாவேதான் இறைவன். இறைவனேதான் ஆத்மா. இந்த இரகசியத்தைத் திருமூலர் “கடவுளும் நானும் ஒன்று” என்று அத்வைதஞானத்தைப் போதிக்கின்றார். வேதங்களும் சாத்திரங்களும் அத்வைத ஞானத்தில்தான் லயம் பெறுகின்றன. அந்த உயர்நிலை அடைந்தவன்தான் பிரம்மானந்த நிலையை அநுபவிக்கிறான். இறைவனே ஆத்மா என்ற தத்துவத்தை வேதம்,

“அயமாத்மா ப்ரஹ்மா தத்பமஸி” என்று குறிப்பிடுகின்றது.

இவ்வளவு கரடுமுரடான தத்துவத்தைச் சுவாமிகள் இனிய எளிய தமிழில் “சும்மா இரு” என்று அருளிச் செய்தார்கள்.

“அத்துவித பொருள் காப்பாம்”

“அத்துவிதப் பொருளை அறிவுக்கறி வானதொன்றைச்
சித்தத் திலேநீவைத்து – சின்னத்தங்கம்
சந்தேகம் தீர்த்திடடி”

“அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் காரமுதைச்
சித்தத்துட்கண்டு தெளியவா என்மனமே”

என்ற நற்சிந்தனைகள் அடிக்கடி நம் உள்ளத்தில் சிந்திக்க வேண்டியவைகளாகும்.

இக்கட்டுரை நா. முத்தையா அவர்களால் எழுதப்பட்டு யோகர் சுவாமிகளின் பிறந்ததின நூற்றாண்டு விழா மலரிலே வெளிவந்தது.