சாணாக்கிய சதகம்

டமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல நீதிசாரங்கள் தமிழ் மொழியிலுள்ள நீதி நூல்களிலே காணப்படாதனவாகும். சில நீதி சாரங்கள் நீதிவெண்பா, வாக்குண்டாம், நான்மணிக்கடிகை, திருக்குறள் முதலியவற்றிலே காணப்படுவனவாகும். சுலோகங்கள் பெரும்பாலும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளுதற்கேற்ற இலகு நடையுடையன. நான்மணிக் கடிகை போல நான்கு விடயங்களை கூறிச் செல்லும் சுலோகங்கள் பலவாகும். இது இப்போது தமிழ் மொழியிலே பெயர்த்து வெண்பா யாப்பிற் பாடப்பட்டிருக்கின்றது. இதனை அச்சிட்டு வெளிப்படுத்தினால் தமிழறிஞர்களால் நன்கு மதிக்கப்பட்டு தமிழ் நாட்டுக்குப் பயன்படுமோ? என்பது காரணமாகச் சில வெண்பாக்கள் இங்கே எழுதப்பட்டிருக்கின்றன.

தருமவதிகாரி

மேவுங் குலஞ்சீல மிக்கோன் றருமநெறி
யாவும் விரும்பு மியல்புடையோன் – ஏவிக்
கரும முடிப்போன் கலைஞன் குணவான்
தருமவதி காரியெனச் சாற்று.

வைத்தியன்

ஆயுர்வே தப்பயிற்சி யாசை மிகுங்காட்சி
தாயனைய வன்பு தயைமுதலாய் – மேயகுணஞ்
சாற்றொழுக்க மென்பவைகள் சார்ந்தோ னெவர்களுக்கும்
ஏற்ற வயித்தியனென் றெண்.

எழுத்தாளன்

சொல்வ தோருமுறையிற் சோராமற் கொண்டெழுத
வல்லோன் கரவேகம் வாய்ந்துள்ளோன் – பல்பல நூல்
பார்த்துணர்ந்தோன் வல்விரைந்து பன்னு மெழுத்தறிவோன்
வாய்த்தவெழுத் தாளனென வை.

சேனாதிபதி

வீரன் பெலவான் விவேகி தருமநூற்
பாரங் கடந்தோன் பரிமுதலாம் – ஊர்திகளைத்
தானா நடத்தித் தகைசேர் புகற்பெற்றோன்
சேனா பதியென்று செப்பு.

தூதவன்

வாக்கின் மிகவல்லோன் வல்லறிஞன் மற்றொருவர்
நோக்கம் விரைந்து நுனித்தறிவோன் – மேக்குயரும்
தீர னினைவாளன் செப்புமொரு தூதுவனாஞ்
சாரமிகு வேந்தர் தமக்கு

வாலுவன்

பூணும் பெலமிகுந்தோன் புத்திரன்போற் பற்றுடையோன்
காணும் வலியமைந்த காயத்தோன் – பேணலுறும்
வாலுவநூல் கற்றோன் மதுரம் பெறச்சமைப்போன்
வாலுவனா மென்றார் மதித்து.

வாயிற்காவலன்

பெட்புமிகக் காண்போன் பெலவா னவதானி
கட்புருவ மாதியினாற் காணவரும் – உட்குறிப்பை
ஆயுமறி வாள னதிவீரன் வேந்தர்மனை
வாயிலுறுங் காவலனாம் வாயந்து

இயற்கை யறிவு

வாய்த்துத் தனக்கியல்பாய் வந்தவறி வில்லாற்குச்
சாத்திரங்க ளென்செய்யுந் தானாகப் – பாரத்துணருங்
கண்ணில்லாப் பாவிக்குக் கண்ணாடி யென்செய்யும்
எண்ணுங்கா லெல்லா மிருட்டு.

பருவச் செயல்.

பாலியத்திற் கல்வி பயிலவில்லை யௌவனத்திற்
சீல மிகும்பொருளுந் தேடவில்லை – சாலவதன்
பின்னறமுஞ் செய்யவில்லைப் பின்னர் நரைவருமேல்
என்னொருவன் செய்யு மியல்பு.

நித்திய சுகம்.

ஏரி னுழுவாருக் கென்றுமுண வுண்டுபிணிச்
சோர் வடையார்க் கென்றுஞ் சுகமுண்டு – வாரநெறி
தாங்கும் வனிதை தலைவன் பதியிலென்றும்
ஓங்கும் பெருமகிழ்ச்சி யுண்டு.

இது சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் அவர்களினால் எழுதப்பட்டு வித்தியாபாநு பத்திரிகையில் 1913ம் வருடம் வெளிவந்தது.