அன்பினில் இன்பு

அன்பிலே இன்பம் விளையுமென்று ஆன்றோர் கூறுவர். அஃதாமாறு காட்டுதும்.

அன்பாவது: ஒருவருக்குத் தாங் கருதிய பொருட்கண் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. அந் நெகிழ்ச்சி அப்பொருட்குந் தமக்கு முண்டாகிய கலப்பினாலே முதிர அதனால் அவ்வுள்ளத்தின்கண் ஒரு சுகநிலை தோன்றுகிறது. அதுவே இன்பமெனப்படும். அவ்வின்பமும் இரண்டு வகைப்படும் சிற்றின்பமும் பேரின்பமுமென.

சிற்றின்பமாவது: தம்முட்டொடர்ந்த அன்பு காரணமாக ஒருவனு மொருத்தியும் எனப்பட்ட இருவர் தம்மிற் கூடியவிடத்து, அவ்விருவருள்ளத்தும் பிறந்த இன்பம். அவ்வின்பமும் அன்பு காரணமாகக் கலந்த அவ்விருவருள்ளத்தும் அவ்வன்பின் முதிர்ச்சியினாலே தோன்றியதொரு சுகநிலையேயாம். ஆதலின், அஃதும் அன்பின் விளைவெனப்படும். இதுபற்றியே “அன்பினைந்திணை” என இறையனாரும், “அன்பொடு புணர்ந்த ஐந்திணை” யெனத் தொல்காப்பியனாரும் கூறினார்கள். எப்பொழுது ஒருவரிடத்தே அன்பு முதிருகிறதோ அப்பொழுதே அவர் செய்யும் துன்பமும் இன்பமாகிறது. ஆதலி னன்பே இன்பங்கட்கெல்லாம் அடியாயுள்ளது என்பது நன்கு பெறப்படும்.

வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந்
தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம்

என்பது ஈண்டு நோக்கத்தக்கது. தலைவனுக்குந் தலைவிக்கு முண்டாய ஊடற்கண் தலைவி ஊடிச்செய்வனவும், அவனுக்கின்பமாகின்றதனானும் அன்பே இன்பாதல் பெறப்படும். ஊடலு மின்பாதலினன்றோ.

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தோடு
நீரியைந் தன்னாரகத்து

என்றும்,

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வியர்ப்பக்
கூடலிற் றோன்றிய வப்பு

என்றுந் தேவருங் கூறினார். இனித் தலைவனுந் தலைவியும் ஐம்புல வின்பங்களை ஆரத்துய்த்தலாலே இன்பமடைதலன்றி, ஒருவரையொருவர் தனியே காண்டற்கண்ணும் இன்பமடைவர்; ஒருவரையொருவர் தீண்டுதற்கண்ணும் இன்பமுறுவர்; கவவுக்கைகொண்டு அணைத்தற்கண்ணும் இன்பமடைவர்; ஒருவர்க்கொத்த உவமைப்பொருளை ஒருவர் காண்டற்கண்ணு மின்பமடைவர்; இவைகளெல்லாம் அன்பின் விளைந்த இன்பங்களேயாம். கண்ணால் நோக்கியவிடத்து இன்பமடைதலை, இராமபிரானைச் சீதாதேவி கண்ணால் நோக்கியவிடத்து அமுத மருந்தினவளை யொத்துத் தனது உடம்பு பூரித்தாள் என்னுங் கருத்தமைய

கருங்கடை நெடுங்கணொளி யாறுநிறை கண்ணப்
பெருங்கடலின் மண்டவுயிர் பெற்றினி துயிர்க்கும்
அருங்கல னணங்கரவி யாரமிழ் தனைத்தும்
ஒருங்குட னருந்தினரை யொத்துடல் தடித்தாள்

என்றும், இராமபிரான் சீதாதேவியை கண்டவிடத்து

அன்னவனை யல்லளென வாமென வயிர்ப்பான்
கன்னியமிர் தத்தையெதிர் கண்டகடல் வண்ணன்
உன்னுயிர்நி லைப்பதொர ருத்தியொடு ழைத்தாண்
டின்னமிழ்தெ ழக்களிகொ ளிந்திரனை யொத்தான்

என்று கம்பர் கூறுதலானும், தீண்டற்கண் ணின்பமடைதலை, முருகபிரான் வள்ளிநாயகியை நோக்கி, நீ ஆடிய சுனையாயும், அணியுஞ் சாந்தாயும், சூடிய மலராயும் உன் மேனியைப் போருந்தப்பெற்றிலேன் என்று கூறியதாக

ஆடிய சுனையதாய் அணியுஞ் சாந்தமாய்
சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்

என்று கச்சியப்பர் கூறுதலானும், ஒருவரை அணைத்தற்கண் இன்பமுண்டாதலை, தலைவியும் தலைவனுமுடன் செல்லுங்காலத்து, இருவருந் தமக்குள்ள அன்பின் ஆராமையினாலே ஒருவர்தலையொடு ஒருவர்தலை பொருந்தவும், ஒருவருடைய ஒருகாலொடு ஒருவருடைய ஒருகால் பொருந்தவும், ஒருவர் மேனியொடு ஒருவர் மேனி பொருந்தவும், ஒருவரை யொருவர் கையா லணைத்துத் தழுவிக்கொண்டு செல்லுதல் பாதிவடிவு ஆணும் பாதிவடிவு பெண்ணுமாகிய சிவனுடைய அர்த்தநாரீசுவர வடிவம்போல இருந்ததெனக் கூறும்

சிலம்புஞ் சிறுநுதலும் சில்குழலும் பல்வளையு மொருபாற் றோன்ற
அலங்கலந் திண்டோளு மாடெருத்து மொண்குழையு மொருபாற் றோன்ற
விலங்கலரும் சுரத்து வேறுருவி னோருடம்பாய் வருவார்க் கண்டே
அலங்கலவில் சடையெம் மண்ணல் விளையாட்டென் றகன்றேம் பாவம்

என்னுஞ் செய்யுளானும், உவமைப்பொருளைக் காண்டலு மின்பமாதலை

ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தம னுழைய ளாகும்
சீதைதன் னடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் பூத்தான்
மாதவ டானு மாண்டு வந்து நீருண்டு மீளும்
போதக நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூந்தான்

என்று கம்பர் கூறிய செய்யுளாணும் அறியலாகும்.

இனித் தமது குழவியிடத்தே வைக்கும் அன்பின் முதிர்ச்சியிலே தந்தைதாயார்க்குப் பெரியதோ ரின்ப முண்டாகின்றது. அவ்வின்பத்தை சிறப்பித்து,

குழலினிது யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்

என்றும்,

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்

என்றும் திருவள்ளுவனார் கூறுமாற்றானு மஃது அறியப்படும். இவ்வின்பமெல்லாம் யாக்கையும் செவ்வியு முள்ள துணையுமே துய்க்கப்படுதலின் சிற்றின்பமாயின.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

என்னுங் குறளுரையில், சிற்றின்பம் நிலையில்லாத வின்பமென்றும், பேரின்பம் நிலையுடைய வின்பமென்றும் பரிமேலழகருங் கூறுதல் காண்க.

பேரின்பமாவது: பக்குவமமைந்த ஒருயிர்க்குப் பரம்பொருட்கண் உண்டாய அன்பு, அப்பொருட்கும் அவ்வுயிர்க்கு முண்டாகிய கலப்பினாலே முதிர, அதனால் அதனதறிவின்கண்ணே தோன்றுஞ் சுகநிலையேயாம். அஃது எக்காலத்தும் அழிவின்றி நிலைபெறுதலின் பேரின்பமெனப்படும்.

பக்குவமுடைய ஓருயிர், பரம்பொருளாகிய இறைவனிடத்தே அன்புசெய்து, அவனருள் பெற்று, அவனுந் தானுமாகிய பேதமின்றி, அவனே தானாய் நின்று வழிபட, இறைவனும் அவ்வுயிர் தன்பால் வைத்த அன்பின் முதிர்வை நோக்கித் தானும் அவ்வுயிர்க்கண் அன்புவைத்து, அதனன்பிலே இன்புருவாய்த் தோன்றியருளுந் நிலைமைபோலவே, ஒரு தலைவனும் ஒரு தலைவியிடத்தே அன்புசெய்து, அவளுடன்பாடு பெற்று, தனு மவளும் என்னும் வேற்றுமையின்றித் “தானே அவளாய்” ஒற்றுமைப்பட்டுக் கூட, அக்கூட்டத்து இருவருள்ளத்தும் உண்டான அன்பின் முதிர்விலே ஒரின்பம் பிறக்கும்மென்பதை விளக்குதற்கே

தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி யிருவயி னோத்தல்

என்று இறையனார் கூறியருளினார். இச்சூத்திரத்தில் தூலமாகச் சிற்றின்பப்பொரு ளமைந்துள்ளதேனும், சூக்குமமாகப் பேரின்பப்பொருளும் அமைந்திருத்தலை அறிஞர் நுணுகி ஆராய்ந்துணர்க். இவ்விருவகைப் பொருள்களும் திருக்கோவையாரினும் அமைந்துள்ளன. தேவார திருவாய்மொழிகளிலும் சிற்சில பதிகங்களில் அமைந்துள்ளன. அவற்றையெல்லம் ஈண்டு விரிப்பிற் பெருகும் எனினும், ஒன்று காட்டுதும்.

முன்ன மவனுடைய நாமங் கேட்டாள்
   மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யிவனிருக்கு மாரூர் கேட்டாள்
   பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையு மத்தனையு மன்றே நீத்தான்
   அகன்றா ளகலிடத்தா ராசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்
   தலைப்பட்டா ணங்கை தலைவன் றாளே.

இதனுள், ஆன்மாவைத் தலைவியாக வைத்தும் சிவத்தை தலைவனாக வைத்தும் சூக்குமப்பொரு ளமையக் கூறியிருத்தல் காண்க.

இங்ஙனம் அன்பினில் இன்பம் பிறத்தல் பற்றியே,

அன்பினில் விளைந்த ஆரமுதே

என்று மணிவாசகரும்

அன்புஞ் சிவமு மிரண்டென் பாரறிவிலார்
அன்பே சிவமா வதாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே

என்று திருமூலரும் கூறினார்கள் என உணர்க. ஈண்டு அமுது என்றது இன்பத்தினை.

இனி உயிர்களுக்கு இறைவனிடத்தில் வைக்குமன்பு எப்படி இன்பமாகுமோ, அப்படியே இறைவனுக்கும் உயிர்களிடத்தில் வைக்கு மன்பும் இன்பமாகும். அதனைச் சிவபெருமான், சிவகோசரியாருக்குக் கண்ணப்பருடைய அன்பின் பெருமையை எடுத்துக் கூறும்போது, அவர் செயலெல்லாம் தமக்கு இன்பமாகும் என்று கூறுதலானும் அறியப்படும் அதனை;

பொருப்பினில்வந் தவன்செய்யும் பூசனைக்கு முன்பென்மே
வருப்புறுமென் மலர்முன்னை யவைநீக்கு மாதரவால்
விருப்புறுமன் பெனும்வெள்ளக் கால்பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படியவ் விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்

உருகியவன் பொழிவின்றி நிறைந்தவவ னுருவென்னும்
பெருகியகொள் கலமுகத்திற் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவியுமிழு முயர்கங்கை முதற்றீர்த்தம்
போருபுனலி னெனக்கவன்றன் வாயுமிழும் புனல்புனிதம்

இம்மலைவந் தெனையடைந்த கானவன்ற னியல்பாலே
மெய்ம்மலரு மன்புமேல் விரிந்தனபோல் விழுதலாற்
செம்மலர்மே லயனொடுமான் முதற்றேவர் வந்துனை
யெம்மலரு மவன்றலையா விடுமலர்போ லெனக்கொளவா

வெய்யகனற் பகங்கொள்ள வெந்துனதோ வெனுமன்பா
னையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியி
லெய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய.

என்னுஞ் செய்யுள்களானறிக.

இனிச் சுவைபட இயற்றிய ஒரு கவியும் தன்கணுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை ஒருவன் நோக்கி அன்பு முதிர, அவ்வன்பிலே இன்பமாகின்றது. அவ்வின்பமே கவியின்ப மெனப்படும். அக்கவியின்பமும் தன்கண் அமிழ்ந்தினார்க்கு உண்மையில் ஒரு பரம சுகம் போலவே தோன்றும். அவ்வாறான இன்பக்கவிகள் செந்தமி ழிலக்கியங்களிற் றிகழ்வன பலவாயினும். அவற்றுட் சிலவற்றை யாவரு முணரும்படி காட்டுதும், இராமாவதாரத்தினுள் வரும்,

கவ்வி வீழ்ந்தென நாடக மயில்துயின் றென்னக்
கவ்வை கூர்தரச் சனகியாம் கடிகமழ் கமலத்
தவ்வை நீங்குமென் றயோத்திவந் தடைந்தவம் மடந்தை
தவ்வை யாமெனக் கிடந்தனன் கேகயன் றனயை.

இச்செய்யுளிற் கம்பர், தான் குறித்த நினைவை முடிக்கும் படி தான் அணிந்திருந்த இழைகளையெல்லம் கழற்றிச் சிதறவிட்டுக் கூந்தலை விரித்துக்கொண்டு நிலத்திற் கிடந்த கைகேயிமேல் மூதேவியினியல்பை ஆரோபித்தற் கேற்ப, அவள் நகருக்கு வருங்காள் சீதேவியிருக்க வரமாட்டாள் அவள் நீங்கிய பின்னன்றோ வருவாள் என்னுங் கருத்தை உட்கொண்டு அச் சீதேவியினியல்பை சீதை மேல் ஏற்றி “சனகியாங் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கு மென்று” அதற் கேற்பக் கூறியது நோக்க நோக்க மிகவும் இன்பம் பயத்தல் காண்க. இதனுள் இழிப்புச் சுவை தோன்றலுங் காண்க. இன்னு மதனுள் வரும்:

ஊனெலா முயிர்கவர் வுறுங்காலனோய்ந் துலந்தான்
தானெலா ரையுமாருதி சாடுகை தவிரான்
மீனெலா முயிர்மேக மெலாமுயிர் மேன்மேல்
வானெலா முயிர்மற்று மெலாமுயிர் சுற்றி.

என்னும் செய்யுளில், இயமன், கிங்கரர்களுடைய உயிர்களைக் கவர்ந்து இளைத்தமையாலே பின் கவரா தொழிந்தனனன். அவனிளைத்தானென்று அனுமன் கொல்லுதலை ஒழிந்தானா? அவனுமோ ஒழிந்திலன். அங்ஙனமாயின் உடம்பை விட்டு நீங்கிய உயிர்கள் யாது செய்யும்? அவைகளெல்லாம் நட்சத்திர மண்டலங்களிலும் மேக மண்டலங்களிலும் ஆகாய வெளிகளிலும் பூமியிலுந் திக்குகளிலும் எங்கு மொரே விதமாக (மாரி காலத்தில் ஈயல்கள் எங்கும் பரந்தாற்போல) பரந்து கொண்டன வென்று கூறியதனால் கிங்கரரின் அழிவின் மிகுதியை உரைத்ததும், அதனாலே அனுமனுடைய வீரத்தைச் சுவைப்பித்ததும் மிகவு மின்பம் பயத்தல் காண்க. இன்னும் மேற்காட்டிய,

சிலம்புஞ் சிறுநுதலும் சில்குழலும் பல்வளையு மொருபாற் றோன்ற
அலங்கலந் திண்டோளு மாடெருத்து மொண்குழையு மொருபாற் றோன்ற
விலங்கலரும் சுரத்து வேறுருவி னோருடம்பாய் வருவார்க் கண்டே
அலங்கலவில் சடையெம் மண்ணல் விளையாட்டென் றகன்றேம் பாவம்

என்னும் பாட்டிலும், தலைவன் தலைவி யென்னும் இருவர்களுடைய ஈருடம்பும் ஓருடம்பா யியைந்தமையை விளக்குமாறு சிவனுடைய அர்த்த நாரீசுவர வடிவை ஒப்பாக எடுத்துக் கூறியிருத்தலும், அங்ஙன மொன்றாயியைந்த அவருடம்பிலே இருவேறு வடிவையும் புலப்படுத்துமாறு, அவ்வவ் வடிவிற்குரிய இருவேறு தன்மைகளையும் எடுத்தோதியிருத்தலும் மிகவும் இன்பம் பயப்பனவேயாம்.

இதுகாறுங் கூறியவற்றால் அன்பின் முதிர்வே இன்ப மென் பதூஉம், அன்பு மின்பும் வேறு பொருளன் றென்பதூஉம் பெறப்பட்டவாறு காண்க.

இக்கட்டுரை வித்துவசிரோமணி கணேசையர் அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாணம் கலாநிலையத்தாரின் ஞாயிறு சஞ்சிகையில் 1933ம் வருடம் வெளியாகியது.