வேலணை பேரம்பலப்புலவர்
யாழ்ப்பாணத்து வேலணையூரில் 1859ம் ஆண்டு தை மாதம் 21ம் திகதி கோணமலை சிவகாமியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்தான் பேரம்பலப் புலவர்.
ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற பேரம்பலம் சிறுவயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு செய்யுளியற்றுவதிலும் சிறப்புற்று விளங்கினார். 12ம் வயதில் நண்பன் ஒருவனிடம் இருந்து அகராதி ஒன்றை பெற விரும்பிய பேரம்பலம் இன்னுமொரு நண்பனூடாக செய்யுளால் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அச்செய்யுள் வருமாறு.
சாந்தலிங்கம் என்றிச் சகம்பழிச்ச வாழ்வுகூர்
சாந்தலிங்க சோதிடநற் சாகரமே – ஓர்ந்தும்
அகராதி தன்னை அனுப்புஞ் சிலசொல்
நாவமாக நானுணரத் தான்
பேரம்பலத்தின் கூரிய அறிவை யவதானித்த புலவர் கனகசபைப்பிள்ளை பேரம்பலத்தை வலிந்தழைத்து நிகண்டு, பாரதம், நைடதம், ஏனைய இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாவற்றையும் கற்வித்தார். கந்தப்பிள்ளை என்பாரிடம் தேவார திருவாசகங்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தார். சோதிடக்கலை வல்லாரிடம் சோதிடக் கலையையும் கற்றுணர்ந்தார். இவரின் புலமையை கண்ட நொத்தாரிஸ் முருகேசு என்பார் இவரையழைத்து தனது எழுத்தாளராக நியமித்துக்கொண்டார். அங்கே சிலநாட்கள் மட்டுமே பணிபுரிந்த பேரம்பலம் வேளான் தொழிலை செய்யத்தொடங்கினார். ஓய்வு நேரங்களில் தம்மிடங் கற்க வேண்டுமென விரும்பி வருபவர்களுக்கு பாடஞ் சொல்லிக் கொடுத்தார். அதே வேளை தமது ஊரை நெறிப்படுத்தி வளர்ப்பதிலுங் கருத்துச் செலுத்தினார்.
தனிப்பாடல்கள் பலவற்றை பாடிய பேரம்பலப் புலவர் இலந்தைக்காட்டு சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணைச் சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி முதலாய நூல்களையும் இயற்றியுள்ளார்.
பெரியநாச்சிப்பிள்ளை என்னும் மங்கை நல்லாளை மணம்முடித்த பேரம்பலப்புலவர் அவரின் மறைவின் பின் வள்ளியம்மை என்பாரை மணந்துகொண்டார்.
குமாரசுவாமிப்பிள்ளை, நமசிவாய தேசிகர், வண்ணை வைத்திலிங்கம்பிள்ளை முதலிய புலவர்களின் பாராட்டை பெற்ற பேரம்பலப்புலவர் தமது எழுபத்தாறாவது வயதில் 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் 18ம் திகதி சிவனடி சேர்ந்தார்.