வித்துவான் சிவானந்தையர்
சிறுகுறிப்பு
உசாத்துணை: புலியூர்ப்புராணம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்சைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார்.
பின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே வடமொழி தென்மொழி இரண்டையும் முறையாக கற்று வந்தார். சிவானந்தையரின் நுண்மதித்திறனைக் கண்ட புலவரவர்கள் தம்மாணாக்கர் பல்லோருள்ளும் இவர் பிற்காலத்தில் பெருந்திறமை பெற்ற புலவராய் விளங்குவர் என மதித்து, தாம் அவ்வித்தியாசாலையினை விட்டு நீங்கிய பின்னரும், தம் வீட்டிற்கு இவரை வரவழைத்து தருக்கம், வியாகரணம், சப்தம் முதலியனவற்றையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் நயம்படக் கற்பித்து வந்தனர்.
இதன்பின்னர் இந்தியாவிற்கு சென்ற ஐயரவர்கள், அங்குள்ள வியாகரண பண்டிதர்களிடம் கலந்து தாம்கற்ற வடமொழி நூல்களில் தமக்குத் தோன்றும் ஐயப்பாடுகளை களைந்து கொண்டார். திருவாடுதுறையாதீனத்திற்கு சென்று, அங்குள்ள புலவர் பெருமக்களால் உபசரிக்கப்ட்டாரென்றும், இவரது வாக்கு வல்லபத்தையும் கவிச்சாதுரியத்தையும், வடமொழி நூலில் இவருக்குண்டான திறனையுங் கண்ட ஆதீனத்தார் இவருக்கு வித்துவான் பட்டத்தினை அளித்தாரென்றும் கூறுவர். இராமநாதபுரம் சென்று அச்சமஸ்தானாதிபதியிடம் சன்மானமும் பெற்றனர்.
அப்பால் சிதம்பரத்தையடைந்து அங்குள்ள பச்சையப்பன் கலாசாலையில் ஆசிரியராயமர்ந்து நெடுங்காலம் கல்விகற்பித்து வந்தனர். அப்போது அவரது தந்தையார் இவரை இல்வாழ்க்கையிற் புகுத்தக்கருதி அனுப்பிய திருமுகத்தின்படி யாழ்ப்பாணத்தையடைந்து தந்தையார் அனுமதிப்படி இல்வாழ்க்கையை மேற்கொண்டனர். அக்காலத்தில் தருக்கசங்கிரகத்தின் உரைகளாகிய நியாயபோதினி, பதகிருத்தியம் என்பனவும், அன்னப்பட்டீயம் என்னும் உரைக்குரையாகிய நீலகண்டடீயமும் இவரால் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டன. சனிதுதி, நவக்கிரககவசம் என்பனவும் இவரால் இயற்றப்பெற்ற நூல்களாம்.
சிதம்பரத்திலிருந்து மீண்டு வந்தபின்னர் ஐயரவர்கள் தமது நண்பரான சட்டநூலறிஞர் தம்பையாபிள்ளையிடத்தில் தான் பாடிய புலியூர் யமகஅந்தாதி எனும் நூலை படித்துக்காட்டுவார். அந்நூலால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பிள்ளையவர்கள், சிதம்பரத்தின்மீது புலியூர்ப்புராணம் எனும் நூலை இயற்ற வேண்டினார். ஐயரும் தன் நண்பரின் விருப்புக்கிணங்கி புலியூர் புராணத்தை பாடினார்.
இவர் கவிச்சிறப்பு அறியப் புலியூர்ப் புராணத்துள் ஒரு கவியை இங்கே தருதும்:
ஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின ரழிப்பார்
தேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சிதைப்பார்
சாம்பு மெல்லியர் மகளீரென் றுரைப்பது சழக்கோ
நாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலோ நவிற்றீர்
தசகாரியம் என்னும் ஒரு நூலும் இவரால் பரிசோதித்து வெளியிடப்பட்டது. சிவானந்தையர் நாளொன்றுக்கு நூறு பாடல்களுக்கு மேல் பாடுவதில் திறமைவாய்ந்தவரென அவரிடம் கற்ற மாணாக்கர்கள் கூறுவர். இவர் யாத்த செய்யுள்களெல்லாம் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளுமுடையவையாய் கேட்போருக்கு இன்பம் பயப்பனவாகும்.
இவர் தனது 43வது வயதினில் 1916ம் வருடம் கூத்தப்பெருமான் கழலடைந்தார்.