மு. கதிரேசுப் புலவர்
யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் இருக்கின்ற கோயிற்பற்றில் வசித்து வந்த சோதிட சாஸ்திரிகளில் ஒருவரான முத்துக்குமாரு என்பார்க்கு 1804ம் வருடம் பிறந்த புத்திரர் தான் கதிரேசுப் புலவர். இவர் வராலாறு பெருமளவில் தெரியவராவிடினும், பாடுஞ் சக்தியில் இவர் சிறந்தவர் என்பது தெளிவு.
பதுமபூரணி நாடகம் என்னூம் ஒர் நூலையும், அச்சுவேலி இறையிலுள்ள நெல்லிஓடை அம்மன் பேரில் பல விருத்தங்களையும் பாடி உள்ளார். அவ்விருத்தங்களிலே ஒன்றை கீழே கண்டு சுவையுங்கள்.
முத்திக்கு வித்தான மோனத் தியானத்தி
முப்புவன தாபனத்தி
முப்புர மெரித்ததக னத்திமுக் கோணத்தி
மூலவோங் காரசித்தி
துத்திப் பணாமுடிச் சுத்தவா பரணத்தி
துய்யவே காவடத்தி
சூலத்தி திரிநேத்ர பாலத்தி கோலத்தி
சுமங்கள சோபனத்தி
பத்தித்த வத்திபர மேதத்தி மெத்தன்பு
பாலித்த வுப்புக்கனப்
பதிதங்கு நேசத்தி துத்தித்த வித்தகப்
பரமபா தாம்புயத்தி
சத்தப்பிர கீதத்தி நாதத்தி வேதத்தி
சந்திரோ தயானனத்தி
தத்துவவித் தகத்துவீரி நித்தநித் தனுக்கோர்பாரி
சத்திமுத்து மாரியம்மனே.
இந்தக் கழிநெடில் இப்புலவரின் வித்தாண்மைக்கு தகுந்த சாட்சியாம். இவர் 1844ம் வருடம் தன் 40 வயதில் அகால மரணமடைந்தார்.