முருகேச பண்டிதர்
யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வேளாளர் குலத்தில் பூதத்தம்பிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தவர் முருகேச பண்டிதர்.
ஆண்டு விகாரிவரு மாவணிமூ வேழு செவ்வாய்
மாண்ட முதற்பிரத மைத்திதிமார்த் – தாண்டனான்
மூடுபெருங் கீர்த்தி முருகேச பண்டிதனார்
நாடுங் கதிக்குரிய நாள்.
முருகேச பண்டிதர் சிவசம்புப் புலவரிடத்துஞ், சங்கரபண்டிதரிடத்துஞ் சிலசில நூல்கள் கற்றவர். பாரதம், இராமாயணம், சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், அகப்பொருள் முதலிய இலக்கணங்களும் நன்கு பயின்றவர். பஞ்சலக்கணமும் வல்லவர். இவரது பஞ்சலக்கணப் பயிற்சியை புன்னாலைக்கட்டுவன் கணேசையர் அவர்களின் கட்டளைக்கலித்துறை புலப்படுத்தும்.
எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னு மிலக்கணங்கள்
பழுத்துள நாவினன் பாக்களொர் நான்கொடு பாவினங்கள்
வழுத்திடப் பாடு முருகேச பண்டிதன் வாதியெனத்
தொழத்தகு விற்பனன் சென்று பரகதி துன்னினனே.
முருகேச பண்டிதர் யாழ்ப்பணத்திலும், சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பற்றூர் முதலிய இடங்களிலும் தமிழ் உபாத்தியாயராக இருந்தவர். சித்தாந்தப்பிரசாரகர் சரவணமுத்துப்புலவர், முத்துத்தம்பிப் புலவர், குமாரசுவாமிப் புலவர் மற்றும் பலருக்கு ஆசிரியராய் இருந்தவர். முருகேச பண்டிதர் யாழ்ப்பாணத்தில் கற்பித்த இடங்களை பின்வரும் கொச்சகங் காட்டும்.
சுன்னைநகர் புன்னைநகர் சொல்லியதென் கோவைநகர்
மன்னுசிறுப் பிட்டியள வெட்டியொடு மல்லாகந்
துன்னியகல் வளைமுதலாந் தொன்னகர்வாழ் மாணவர்க்கு
பன்னுதமிழ் சொன்னவன்மன் முருகேச பண்டிதனே.
முருகேச பண்டிதர் பல்வகையழகுந் தொடைநயம் முதலியவைகளுடன் பொருந்த விரைந்து கவிபாடும் பெருந்திறனுமுடையவர். மடக்கு சிலேடை முதலிய கவிபாடும் வன்மையும் உடையவர். இதனை கீழ்வரும் கட்டளைக்கலித்துறையால் காணலாம்
விரும்பிய வாசு கவிக்கொரு காளநன் மேகமென்பார்
கரும்பியல் பாகப் பொருட்டொடை யாற்கவிக் கம்பனென்பார்
அரும்பொருள் கூறு மறிவிற் பரிமே லழகனென்பார்
வரம்பில் சீர்த்தி முருகேச பண்டித வள்ளலையே.
இவர் மயிலணிச்சிலேடை1 வெண்பா, ஊஞ்சல், பதிகம், சந்திரசேகரவிநாயகரூஞ்சல், குடந்தைவெண்பா2 , நீதிநூறு, பதார்த்ததீபிகை3 முதலிய பிரபந்தங்களும், பல தனிநிலைக்கவிகளும் பாடியவர்.
குடந்தை வெண்பாவில் ஒரு பாடல்
மாமியொடு கூடி மகிழ்ந்து மனைதொறுங்
கோமி யுறையுங் குடந்தையே – ஏமுனையில்
தாரணித் தேரார் தமையெரித்தார் பூமகனூர்
தாரணித் தேரார் தலம்கோமி – சரசுவதி. ஏ – அம்பு. தார் – கொடிப்படை. தேரார் – பகைவர். பூமகன் – பிரம்மா. தாரணி – பூமி.
நீதிநூறிலிருந்து ஒரு பாடல்
கள்ளொடு காமங் கடுங்கோபஞ் செய்தகுடி
தள்ளரிய துன்பந் தனில்வீழும் – பிள்ளைகளைப்
பெற்றாள தென்ன பெரும்பழக்க மன்னவர்க்குக்
கற்பிப்ப தேயரிது காண்.
முருகேச பண்டிதர் நிறைந்த புலமையிலார் நூலுரைகளிலே குற்றங்காட்டி வாதஞ் செய்யும் வழக்கமுடையவர். பத்திரிகைகளிலே வாத விடயமாக பல கடிதங்கள் வரைந்தவர். நாவலரவர்களையும் பிறரையும் வெல்லக்கருதித் தம்பத்திரிகையிலே சைவவிரோதமாகவும் பிறவுமாகப் பல விடயங்களை எழுதிய கத்தோலிக்க மதத்தை சேர்ந்த வித்துவான் அருளப்ப முதலியார் செய்த அலங்காரபஞ்சகம் என்னும் நூலிலே குற்றங்காட்டி அலங்காரபஞ்சகசண்டமாருதம் எனக் கண்டனம் ஒன்று வரைந்தவர். ஒன்று காட்டுதும்
அரும்பிரா மணத்தினிய கனியுதவு மருங்கொடி
பருதியும் பரத்தி
இருந்தரா சாத்தி கழுமொரு நீதியிறைமகள்
இணையறு மறத்தி
பொருந்தவெஞ் ஞான்று ஞானசக் கிலிச்சிபுல்லனை
யருள்கநன் குறத்தி
மருந்தெனப் புகழு மருத மடுவினில்வதிசெப
மாலைமா மரியே.அருங்கொடி இருந்தராசு என்னுந் தொடர்களை அரும்-கொடி இரும்-தராசு எனப்பிரித்தது ஏன்? இவற்றிற்கு மை இறுதி யாவதன்றி “இனமிகல்” என்பதனாற் றோற்றிய மகரவொற்றும் இறுதியாகுமா? மணத்தினியகனி என்பதற்கு வாசனையைக்கொண்ட இன்பமாகிய கனி என்றுரைத்தவர் மணத்து இனிய எனப் பதம் பிரித்தது என்னை? மணத்து என்னும் வினையெச்சம் வாசனையைக்கொண்ட என்னும் பெயரெச்சப் பொருளைத் தருமா? இனிய என்பதற்கு இன்பமாகியது எனப் பொருளுரைத்தது என்னை? இனிமைக்கு இன்பம் பிரதிபதமாகுமா? சக்கிலிச்சி என்பதில் இச்சி என்பதற்கு விரும்பி எனப் பொருளுரைக்க ஆன்றோர் வழக்கும் உண்டா?
முருகேச பண்டிதர் அவர்கள் 1900ம் ஆண்டில் சிவபதம் அடைந்தார்கள்.