மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்

யாழ்ப்பாணத்து உடுவிற் சின்னப்பு வள்ளியம்மை தம்பதியர்க்கு 1877ம் வருடம் பங்குனி மாதம் மாணிக்கத்தியகராசா பிறந்தார். ஆரம்பக்கல்வியை தன் தாய்மாமனிடம் பெற்ற பிள்ளை மேலே கற்கச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தனிப்பட்ட முறையிற் புலவரிடங் கற்ற இவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஏழாலையில் தாபிக்கப்ட்டுச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் தலைமையில் நடந்த சைவத்தமிழ்ப் பாடசாலைக்குஞ் சென்று இலக்கண இலக்கியங்களையும் சமய சாஸ்திரங்களையும் கற்றார். புராணங்கள் காவியங்கள் முதலியவற்றையும் கற்றுத் தேர்ந்துகொண்டார். அத்துடன் வண்ணார்பண்ணைக்கு அணித்தாகவிருந்த புத்துவாட்டியாரிடம் இசைத்துறையுடனாகித் தொடர்புகொண்டு சங்கீத ஞானத்தையும் வளம்படுத்திக்கொண்டார். சமஸ்கிருத மொழியினைக் கற்று வேதாகமங்களிலும் ஈடுபாடுடையவரானார்.
இனிய சரீர வளங்கொண்ட பண்டிதர் அட்சர சுத்தியோடு பாட வல்லவர். சமய சாஸ்திர உண்மைகளைப் புராணக் கதைகள் மூலம் விளங்கவைக்கும் ஆற்றல் நிறையப்பெற்றவர். அதனாற் சங்கீத கதாப்பிரசங்க வல்லுனர் ஆனார். கோயில்களிலும் சைவச் சார்புச் சபைகளிலும் அவர் சங்கீத கதாப்பிரசங்கம் இடம்பெறுவதாயிற்று. இலக்கிய சமயப் பேச்சுக்களும் தொடர்ந்தன. புராணபடன வித்தகர் என்ற பாராட்டுக்கும் உரியவரானார். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய உரைகளை விரித்துச் சொல்லும் வல்லாளர் என்ற புகழையும் பெற்றுக்கொண்டார்.
ஒருமுறை தென்னிந்தியா சென்ற பண்டிதர் இராமநாதபுரம் சேதுபதி மகாராசாவின் கௌரவிப்பையும் பெற்றுக்கொண்டார். இவர் தமிழப்புலமையைக் கண்டுகொண்ட மகாராசா பொன்னாடை போர்த்திப் பண்டிதர் என்ற கௌரவ விருதுங் கொடுத்தார்கள். கும்பகோணம் வீரசைவ பீடாதிபதிகளிடம் குரு அபிடேகமும் பெற்று இலிங்தாரி ஆயினார். அன்றுதொட்டு வீரசைவக்குரு மாணிக்கத்த தியாகராசப் பண்டிதர் ஆயினார்.
வண்ணை வைத்தீசுவரப் பெருமான் மீது வண்ணைச் சிலேடை வெண்பாவினையும் முன்னைநாதர் நவதுதிப் பாடல்களும் இவர் பாடியனவாம். இவர் கவித்திறம் அறிய வண்ணைச்சிலேடை வெண்பாவிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்
மின்னணையார் நாட்டியமும் மேதகைய மாமணியும்
மின்னரங்கஞ் சேருமெழில் வண்ணையே – பன்னரிய
மாதங்கங் கொண்டார் மலையரசன் பாலுதித்த
மாதங்கங் கொண்டார் மலை.
முன்னைநாதர் நவதுதிப் பாடல்களிலிருந்து ஒன்று.
நாயினுங் கடையே னாயினு முன்னை
நாதனே யுலகநா யகனே
தயினு மினிய கருணைவைத் தாளுந்
தற்பரா னந்தவா ரிதியே
வாயினும் மனத்து மிடைவிடா திருக்கும்
வாகையினை யருள்புரிந் தெப்போ
தாயினு மறவா வாழ்வுதந் தாள
வந்தருள் மால்விடை யெழுந்தே.
உடுவிலிற் பிறந்து சுன்னாகத்தில் வாழ்ந்த பண்டிதர் 1945ம் வருடம் ஆவணி மாதம் அமரத்துவம் எய்தினார்.