பூ. பொன்னம்பலப்பிள்ளை
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைக் கிராமத்தின் ஒரு பகுதியாகிய கொல்லங்கலட்டி என்னும் ஊரே வித்துவான் பூ. பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் பிறப்பிடமாகும். விசுவநாதமுதலி கோத்திரத்திலே தோன்றிய பூதப்பிள்ளை எனபவரே இவரின் தந்தையாவார். தண்டிகைக் கனகராய முதலியின் வழித்தோன்றிய சுப்பு உடையாரின் மகன் சங்கரப்பிள்ளை என்பவரின் மகள் சின்னாச்சிப்பிள்ளையே வித்துவானின் தாயார் ஆவர்.
வித்துவான் அவர்கள் 1845ம் வருடம் பிறந்தவர் என அனுமானிக்கப்படுகின்றது. 1887ம் வருடம் மாவை இரட்டை மணிமாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்திலே வெளியிட்டார். 1889ம் வருடம் மாவை யமக அந்தாதியை பாடிய இவர் அதனை சென்னையிலே அச்சிடுவித்து வெளியிட்டார். இவர் சித்திரக்கவிகள் பாடுவதிலும் மிகுந்த புலமையாளர் எனபதனை இவர் பாடி வெளியிட்ட இரட்டை நாகபந்தம்,தேர் வெண்பா, மாலைமாற்று ஆதியாம் செய்யுட்களால் அறியலாம்.
வித்துவான் பூ. பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலம் ஆறுமுக நாவலர் அவர்கள் சைவமும் தமிழும் வளர்த்துக்கொண்டிருந்த காலமாகும். இவர் யாரிடம் கல்வி கற்றார் என்பதனை அறியமுடியவில்லை. வித்துவானவர்கள் சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசலையில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்து நாற்பத்தைந்தாவது வயதில் 1890ம் வருடம் தில்லை நடராஜப்பெருமானின் திருவடி நிழலையடைந்தார்.