புத்துவாட்டி நா. சோமசுந்தரம்
சிறுகுறிப்பு
உசாத்துணை : இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் - பிரம்மஶ்ரீ அ. நா. சோமாஸ்கந்த சரமா - 1995ஈழத்துக்கு இசை வித்து இட்டவர்களில் ஒருவர் புத்துவாட்டி சோமு என்று அழைக்கப்படும் நா. சோமசுந்தரம் அவர்கள் ஆவார். புத்துவாட்டி என்பது பருத்தித்துறையின் ஒரு குறிச்சியின் பெயராகும். புத்துவாட்டி என்று கூறினால் ஒரு இசைப்பரம்பரைக்கு முத்திரை பதித்தவர்கள் என்று திட்டமாக கூறலாம்.
புத்துவாட்டி சி. இரத்தினத்தின் மூத்த தமையனாரும் பெரும் பிடில் கலைஞருமாகிய புத்துவாட்டி நாகலிங்கம் அவர்களின் மகனான சோமசுந்தரம் அவர்கள் 1885 இல் பிறந்ததாக சில மூத்த கலைஞர்கள் மூலம் அறிய முடிகின்றது. சோமசுந்தரம் அவர்கள் இசையில் பெருவிருப்புடையவராய் வயலின் கருவியை பயின்று அக்கருவியினை மேடைகளில் வாசித்து தனக்கென ஒரு புகழினைப் பெற்றார். அது மட்டுமன்றி சாரங்கி எனும் கருவியையும் தந்தையாரிடம் பயின்று அதனை பக்கவாத்தியமாக தேவார இசைக்கு வாசித்தும் வந்தார். (சாரங்கி கருவியை தேவார இசைக்கு சிறப்பாய் வாசிப்பதில் காசிவாசி செந்திநாதையர் மிகப்புகழ் பெற்றவர்.) அத்துடன் தேவார இசையில் நாட்டமுடையவராக பல தேவாரங்களை இசைக்குறியீடுகளுடன் அமைத்து சாரங்கியில் வாசித்ததாக அறியப்படுகின்றது.
புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்கள் தனது பதினொராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச் செய்ய ஆரம்பித்தார். இவரின் காலத்திலேயே ஈழத்தில் வாய்ப்பாட்டு இசையரங்குகள் இடம்பெற ஆரம்பித்தன. வயலின் முதன்முதலாக பக்கவாத்தியமாக 1900த்தின் ஆரம்பத்தில் இசையரங்குகளில் பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த வைத்தீஸ்வரக்குருக்கள், பரமேஸ்வரஐயர், சங்கரசுப்பையர் போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் சோமசுந்தரம் அவர்கள் வயலின் வாசித்துள்ளார்கள். அத்தோடு இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்களை ஈழத்துக்கு வரவழைத்து இசைக்கச்சேரிகள் நடத்தியும் வந்தார். இவர் இசைவல்லுனராக மட்டுமன்றி இறைபக்தி மிக்கவராயும் இருந்தமையினால் தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவற்றை இயற்றி பாடியும் வாசித்துமுள்ளார். இவற்றுள் “சாமி உன் சந்நிதியே தஞ்சம் என்று நம்பி வந்தேன்” எனும் கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. இவைபோன்றவை நூல்வடிவம் பெறாதிருப்பது இசையுலகிற்கு பெரும் துர்ப்பாக்கியமே.
சோமசுந்தரம் அவர்கள் இசைச்சேவையின் பொருட்டு யாழ். வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார்கள். ஈழத்தில் இவரிடம் வயலின் வாய்ப்பாட்டு என்பன பயின்ற வாரிசுகள் பலர் பெரும் பிரபலம் பெற்று விளங்கினார்கள். நடன நாடகக்கலைஞர் கீதாஞ்சலி நல்லையாவும் இவரது மாணாக்கரே. இவர் 60 வயதுவரை வாழ்ந்து பல இசைச்சாதனைகள் புரிந்து இறைபதமடைந்தார்.