புத்துவாட்டி சி. இரத்தினம்
சிறுகுறிப்பு
உசாத்துணை : இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் - பிரம்மசிறீ அ. நா. சோமாஸ்கந்த சர்மா - 1995.ஈழ யாழ்ப்பாணத்து பருத்தித்துறையிலே புத்துவாட்டி என்னும் இசை மண்ணில் வசித்து வந்தவர்தான் புத்துவாட்டி இரத்தினம். இவர் தந்தையார் சின்னத்தம்பி என்னும் இசை விற்பன்னர் ஆவார். இவர்கள் பரம்பரையே இசைக்கலைஞர் பரம்பரையாகும். மூத்த சகோதரர் புத்துவாட்டி நாகலிங்கம் என அழைக்கப்படும் வயலின் இசைக்கலைஞர். இவர்கள் குடும்பத்தினர்தான் கர்நாடக இசையினை 19ம் நூற்றாண்டில் ஈழத்தில் வளர்க்க ஆர்வம் காட்டியவர்கள். இவர் இசையினை வளர்க்கும் நோக்கமாக யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்துள்ளார்.
புத்துவாட்டி இரத்தினம் அவர்கள் தனது சகோதரர்களின் வாய்ப்பாட்டு, வயலின், கதாப்பிரசங்கம் போன்றவைகளுக்கு மிருதங்கம் வாசித்து வந்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து இங்கே வருகின்ற இசைக்கலைஞர்களின் இசைக்கச்சேரிகளுக்கும் அவர்களுடன் வருகின்ற லய வாத்தியக் கலைஞர்களுடன் சேர்ந்து வாசித்து பெருமதிப்பு பெற்றுள்ளார். அக்காலத்துக் கலா ரசிகர்கள் இசையை இரசிப்பதில் மாத்திரமே ஆர்வமாக இருந்தனர். எனினும் இசையைத் தாமும் கற்று இசைக்கலையை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அக்காலத்தில் இருக்கவில்லை. இந்த நிலையிலும் இவரிடம் மிருதங்கக் கலையை ஒருசில மாணவர்கள் பயின்றனர்.
அவர்களுள் குறிப்பிடக்கூடியவர்கள் காலஞ்சென்ற மிருதங்க வித்துவான் தங்கம், நவாலி த. இரத்தினம் ஆகியோர்களாவர்.
வித்துவான் இரத்தினம் அவர்களது வாசிப்பானது, நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயமும் உடையதாக இருந்தன என அறியக் கூடியதாயுள்ளது. இவருடைய வாசிப்பானது கர்நாடக சங்கீதப் பாணிக்கே உரியதாக விளங்கியுள்ளது. எனவே அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வருகின்ற நாடக குழுக்களின் அரங்கிற்கு வரவேற்பாக இவர் மிருதங்க வாசிப்பு இருக்கவில்லை. எனினும் இவர் சுத்தமான கர்நாடக இசை மரபினைப் பின்பற்றியே வாசித்து வந்துள்ளார். மிருதங்கக் கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் இவர் ஆற்றியுள்ளார்.
இரத்தினம் அவர்கள் இசையுலகை விட்டு நீங்கிய காலம் திட்டமாக அறியமுடியவில்லை. ஏறக்குறைய தனது அறுபது வயதுவரை இசைச்சேவையுடன் வாழ்ந்து, மிருதங்க இசைக்கு பெருமைதேடியுள்ளார் என்றே கூறலாம். அக்காலத்து ஈழத்து முதற் கலைஞர் வரிசையில் இவர் திகழ்ந்தார் எனலாம். இவர் இசைத்தொண்டு யாழ்ப்பாணத்திற்கு பெரும்பெருமை சேர்ப்பதாயமைந்துள்ளது.