நெல்லைநாத முதலியார்
சிறுகுறிப்பு
உசாத்துணை : ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்நெல்லைநாத முதலியார் ஏறத்தாள 1780ஆம் வருடமளவில் யாழ்ப்பாணத்திலே தென்கோவையைச் சார்ந்த இருபாலை எனும் ஊரிலே இருந்தவர். வேளான் குடி மரபில் பிறந்தவர். ஞாபக சக்தியில் இணையற்றவர். இவர் ஞாபக சக்தியை குறித்து முன்னோர் ஒரு கதை கூறுவர். வணிகர்குல பெரும்பிரபுவும் வள்ளலுமாய் விளங்கிய வண்ணை வைத்திலிங்கச் செட்டியார் மீது ஒரு பிரபந்தம் பாடிக்கொண்டு வந்த செந்திக்கவி என்னும் வடதேசத்து புலவர் ஒருவர், செட்டியாரைக்கண்டு தன் கருத்தைத் தெரிவிக்க, செட்டியார் தம்மாற் கட்டுவிக்கப்பட்ட வண்ணை வைத்தீசுவர ஆலயமே அதனை அரங்கேற்றுவதற்குரிய இடமாக நியமித்து, யாழ்ப்பாணத்திலுள்ள பல வித்துவான்களுக்கும் திருமுகம் அனுப்பினார். அத்திருமுகத்தை நோக்கிய வித்துவான்கள் பலரும் அந்த மண்டபத்தே வந்து கூடினர். அப்பொழுது நெல்லைநாத முதலியாரும் அங்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த வித்துவான்களும், பிரபுக்களும், செட்டியாரும் எழுந்து இவரை உபசரித்தனர். வடதேசத்து புலவர் மாத்திரம் எழுந்து இவருக்கு உபசாரம் செய்யாது இறுமாந்திருந்தனர். பின் செட்டியர் ஆஞ்ஞைப்படி அவ் வடதேயத்துப் புலவர் பிரபந்தத்தை படித்தனர். அப்போது செட்டியார், அங்கிருந்த வித்துவான்களில் சிரேட்டராய் விளங்கிய இவரை நோக்கிப் பிரபந்தம் எப்படி என்று கேட்டனர். இவர் வடதேயப் புலவரின் இறுமாப்பை அடக்க நினைந்து, புலவர் பாடியது பழைய பாடலே, எனக்கு ஞாபகமே என்று அப்பிரபந்தச் செய்யுளை அப்படியே ஒப்பித்து விட்டனர். உடனே வடதேசப் புலவர் திகைத்து நாணி எழுந்து இவரை நமஸ்கரித்துத் தாஞ்செய்த குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டனர். பின் இவர் செட்டியாருக்கு உண்மை கூறி, அப்புலவருக்கேற்ற சன்மானஞ் செய்யும்படி கூறினார்.
இதனால் இவருடைய ஞாபகசக்தி எத்துணையதென்பது நாம் அறியக் கிடக்கிறது. இவர் எவரிடம் கற்றனர் என்பது தெரியவில்லை. சிலர் கூழங்கைத்தம்பிரானிடம் கற்றனர் என்பர். இவர் காலத்திலே இருபாலையில் ஒரு வித்தியாபீடம் இருந்தது. கற்போர் பலரும் அங்கேயே போய்க் கற்பர். கவியரங்கேற்றுவோரும் அங்கே போய் இவர் முன்னிலையிலே அரங்கேற்றுவர். இவர் காலத்திலே இருந்த யாழ்ப்பாணக் கச்சேரி முதலியார் மீது ‘இன்பகவி’ என்னும் ஒரு புலவர் பிரபந்தம் பாடிவந்த போதும், இருபாலையிற் சென்று இவர் முன்னிலையில் அரங்கேற்றினர் என்பர். இவர் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் இருந்ததன்றி, பாடுவதிலும் வல்லவராய் இருந்தார். இவர் இயற்றிய நூல்களாயினும், தனிச்செய்யுள்களாயினும் இப்போது கிடைத்தற்கரியனவாகிவிட்டன. இவரும் இவருடைய புதல்வர் சேனாதிராச முதலியாரும் வறிய மாணவர்களுக்கு அன்னமிட்டு கற்பித்தனர் என்றும் கூறுவர்.