நாகநாதபண்டிதர்
சிறுகுறிப்பு
ஈழநாட்டின் தமிழச்சுடர்மணிகள் நூலாசான் கணபதிப்பிள்ளை அவர்கள், நாகநாதபண்டிதர் 1814இல் பிற்ந்ததாக குறிப்பிடுகிறார். பாவலர் சரித்திர தீபகத்தில் சதாசிவம்பிள்ளை அவர்கள், நகாநாத பண்டிதர் 1884ம் வருடம் தன் 40வது வயதில் மறைந்ததாக குறிப்பிடுகிறார். சதாசிவம்பிள்ளை, நாகநாத பண்டிதரின் பள்ளித்தோழர் என்பதால் 1844ல் பண்டிதர் பிறந்தார் என்பதே சரியாயிருக்க வேண்டும்.யாழ்ப்பாணத்து சுன்னாகத்திலே சிங்க மாப்பாண முதலியார் மரபில் வந்த அம்பலவாணப்பிள்ளைக்கு 1844ம் வருடம் புதல்வராகத் தோன்றியவர் நாகநாதபண்டிதர். இவருக்கு தந்தையார் இட்ட நாமம் நாகநாதபிள்ளை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்விகற்று பின்னர் மல்லாகத்தில் இருந்த ஆங்கிப் பாடசாலையில் உபாத்தியாயராக கடமையாற்றினார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் சமஸ்கிருதத்தில் பெரும்புலமை வாய்ந்தவராக விளங்கியமையால் உபாத்தியாயர் வேலையை துறந்து முல்லைத்தீவிலும் கற்பிட்டியிலும் நீதிமன்ற பேச்சு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றினார்.
இவர் வடமொழி நூல்களான மானவ தரும சாத்திரம், பகவத்கீதை, மேகதூதம் முதலியனவற்றை தமிழில் பெயர்த்துச் சங்கரபண்டிதர் படித்துக்கொள்ளக் கொடுத்தவர். இதோபதேசம், சிசுபாலவதம் முதலிய சில காவியங்களையும் சில வியாகரணங்களையும் தமிழில் விளக்கிச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவருக்கு படிக்கக் கொடுத்தவர். இதைவிடவும் சாந்தோக்கியம் முதலாய உபநிடதங்கள் சிலவற்றையும் சாங்கிபத்தையும் தமிழில் மொழிபெயர்த்தளித்தவர். இதில் இதோபதேசம் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரினால் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. இவர் பாடிய பல தனி விருத்தங்கள் உதயதாரகைப் பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றது. இலங்காபிமானி பத்திரிகையிலும் இவர் பல கட்டுரைகள் எழுதியதுண்டு.
இவர் புலமை மாதிரியைக்காண, இவர்பாடிய செய்யுளொன்றை கீழே காணுங்கள்.
நீதி நெறிவிளக்க நேர்முறை யாராய்ந்து
போதவுரை செய்ய புலவோர்க்கு – மேதினியில்
ஆமோ வயிரவ நாதரரு ளாசிரியன்
தாமோ தரற்கன்றித் தான்
1884ம் வருடம் சுன்னகம் வந்திருந்தபோது சுகவீனத்தால் இவர் இறைவனடி சேர்ந்தார். இவர்பேரில் குமாரசுவாமிப்புலவர் பாடிய சமரகவியை கீழே காணுங்கள்.
சற்சுபானுபங்குனியிற் சார்முதலாந்தேதிபுதன்
பிற்பிரதமைமத்திதியே பேசுமத்தம் – சற்சனர்கள்
ஓதும்புகழாளனோங்கு சுன்னையூர்நாக
நாதன் கதியடைந்தநாள்.