திருஞானசம்பந்த உபாத்தியாயர்
யாழ்ப்பாணத்து சுழிபுரத்தில் செல்வநாயகச் செட்டியார் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்த உபாத்தியாயர். மணமுடித்த பின்னர் யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். ஆறுமுக நாவலரிடத்தே மாணாக்கனாக இருந்தவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் முதலிய இலக்கியங்களை நன்கு கற்றவர்.
பலருக்கும் கற்பித்தவர் என்பதனாலே உபாத்தியாயர் எனப் பெயர் பெற்றவர். இவர் பிரசங்கஞ் செய்யுந் திறமுங் கவிபாடுந் திறமுமுடையவர்.
மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காமவேலர் திருவருட்பா முதலிய பிரபந்தங்களும் சில தனிநிலைக்கவிகளும் செய்தவர். கதிர்காமவேலர் திருவருட்பாவில் ஒரு பாடல் பாருங்கள்.
பூவார் மலர்மிசைப் போதனு மாயனும் போற்றியினும்
நாவாற் றுதித்தற் கரிதாங் கதிரை நகருறையும்
மாவாரும் வள்ளிதெய் வானை மணாளற்கு மன்னுமருட்
பாவார் துதித்துணை மாணிக்க வைங்கரன் பாதங்களே.
இவர் 1905 அல்லது 1906ம் வருடம் இறையடி சேர்ந்தார்.