சேனாதிராச முதலியார்
யாழ்ப்பாணத்திலே இலக்கண இலக்கியங்களிலே தேற்றம் பெற்றிருந்தவர்களில் சிரேட்டராய் விளங்கியவர் சேனாதிராச முதலியார். தெல்லிப்பழை பூர்வீக வேளாளர் குலத்திலே சிறப்புப்பெற்று விளங்கிய நெல்லைநாத முதலியாரே இவர் தந்தையாராவார். இவர் இருபாலையிலே 1780ம் வருடம் பிறந்தவர். கூழங்கைத்தம்பிரானிடம் இலக்கண நூல்களும், மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் இலக்கிய நூல்களும் கற்றுத்தேர்ந்த இவர், அக்கால அரசியல் நியாயப்பிரமாணங்களிலும் வல்லவராய் விளங்கி மாகாண நியாயஸ்தலங்களில் நியாய துரந்தரர்க்குரிய கடமைகளை ஆற்றி வந்தார்.
தமிழ் அகராதியை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நைற் தேசிகருக்கு அவர் பல உதவிகளையும் செய்து வந்தார். மானிப்பாய் இயந்திரசாலையில் அச்சடிக்கப்பட்ட தமிழ் அகராதிச் சாத்து கவியில் ‘தெல்லியம்பதியில்வரு நெல்லைநாதக் குரிசில் செய்தவமெனாவுதித்த – சேனாதிராசகலை ஞானதிராசனோடு” என்று பாடப்பட்டவர் இச்சேனாதிராச முதலியாரே. இவர் நல்லூர்க் கந்தசுவாமி பேரில் நல்லை வெண்பா எனப்பெயர்பெறும் நூறு செய்யுட்கொண்ட ஒரு பிரபந்தம் பாடினார். பொருட்சிறப்பு சொற்சிறப்புக்களில் இப்பாடல்கள் பேர்பெற்றது. நல்லை வெண்பா மட்டுமன்றி மாவிட்டபுரம் கந்தசுவாமி மீது ஊஞ்சல் இசையும், நல்லைக்குறவஞ்சியும் பாடியது இவரே. நல்லைக்குறவஞ்சியிலிருக்கும் ஒரு விருத்தம் வருமாறு.
கொடிவளருமணிமாடக் கோபுரஞ்சூழ் நல்லூரிற் குமரமூர்த்தி
அடியரகத்திருளகல வமரர்முக மலர வரவணிமானீன்ற
கொடியினொடும் பிடியினொடுங் குலவுமுடம்பிடியொடுங் கோதண்டமேந்தி
மிடியகல மயிலேறி விடியவந்த தினகரன்போன் மேவினானே.
சைவமும் தமிழும் வாழ வழிசெய்த ஆறுமுக நாவலர் போன்றோரின் ஆசிரியராய் இருந்த சேனாதிராச முதலியார் சார்வரி வருடத்துக்கு சரியான 1840ம் வருடம் தமது அறுபதாவது வயதில் தேகவியோகமாயினார். இவரது மரணச்செய்தி கேட்ட வல்லிபட்டி குறிச்சிக் குமாரசுவாமி முதலியார் செய்த கவி வருமாறு.
நானாதிராவிடமு நன்னிலக்கணாறுறச்செய்
சேனாதிராயவனையோ செத்ததென்றீர் – வானாதி
பொன்னிலத்துமுண்மை புகனூலுரைப்பதற்காய்
இந்நிலத்து விட்டெடுத்ததே.