செவ்வந்திநாத தேசிகர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரணவாய் என்னும் ஊரிலே திருஞானசம்பந்த தேசிகர் என்பாருக்கும் அவரது துணைவியார் சிவபாக்கிய அம்மையாருக்கும் 1907ம் வருடம் ஆனி மாதம் 23ம் திகதி மகனாகத் தோன்றியவர் செவ்வந்திநாத தேசிகர். இவருடைய தந்தையார் இளமையிலேயே இவருக்கு இரு வயதிருக்கும் போது இறையடி சேர்ந்தமையினால், சிறிய தந்தையாரான நமசிவாய தேசிகரிடம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கலக்கமற கற்றுவந்தார்.
இதன் பின்னர் சுன்னாகத்திலே திரிபாஷா விற்பன்னரும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க தாபகருமாகிய தி. சதாசிவஐயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிராசீன பாடசாலையில் இணைந்து மகாவித்துவான் கணேசையர் அவர்களிடம் தமிழிலக்கணங்களையும் சித்தாந்த நூல்களையும் வேதவிசாரதர் வி. சிதம்பரசாஸ்திரிகளிடத்தில் சமஸ்கிருதத்தினையும் முறையாகக் கற்றுப் பிரவேச பாலபண்டித பரீட்சைகளில் சித்தியெய்தினார் செவ்வந்திநாத தேசிகர். இவர் இளமைக்காலத்திலேயே கவி புனையும் வன்மை பெற்றிருந்ததுமன்றிக் கவியிதயம் தெள்ளிதிற் புலப்படுமாறு விளக்கிக் காட்டும் திறமையும் பெற்றிருந்தார்.
இவர் கரணவாயிலே வித்தியாவிருத்திச் சங்கம் ஒன்றினையும் வித்தியாசாலை ஒன்றினையும் தாபித்து நாடாத்தி வந்தார். அவ்வித்தியாசாலையில் மாதந்தோறும் பிரசங்கங்களும் செய்து வந்தார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலராவர். சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களின் பிரபந்தங்களையெல்லாம் தொகுத்து அச்செற்றியவரும் இவரேயாவர்.
செவ்வந்திநாத தேசிகர் மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணி மாலை ஒன்றினையும், நல்லூர்க் கந்தசுவாமி பேரில் கோவை ஒன்றையும், வசனகிரந்தமாய் தமிழ்மொழியாராய்ச்சி எனும் நூலையும் யாத்திருக்கின்றார்கள்.
மாவை மும்மணிமாலை யிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.
பொன்றிகழ் கொன்றைப் புதுமலர் குடைந்திடு
மென்சிறை அறுபதம் விரும்புபண் பாட
மண்டுதிரைத் தென்கடல் மாந்திய மைம்முகில்
கண்டுபெரு மயிலினம் களிப்புட னாடச்
சிறுகால் எறிதரும் சீரிள வேனில்
மகிழ்வுறூஉம் குயில்கள் வருந்தி மெய்வாட
விண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு
நலந்திகழ் காந்தள் நனைமுறுக் கவிழும்
மலிபெரும் செல்வ மாவையம் பதிவாழ்
ஒலிகழற் றிருத்தா ளொருபெரு முருகனைக்
கண்டிலார் கண்ணிணை புண்ணே என்றும்
கருதிலார் நெஞ்சகம் கல்லே பரிவுடன்
இறைஞ்சிலார் யாக்கை இயங்குறு மரமே.
நல்லைக்கோவையிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.
விடமன்ன நாட்டக் குறமகள் கேள்வன் விசும்புலவுந்
தடமன்ன வாறிரு தோணல்லை வாணன் றனிவரைவாயப்
படமன்ன வல்குற் றளவென்ன லாந்நகைப் பான்மொழிபொற்
குடமன்ன கொங்கைகண் மேவுது மம்ம குறையிரந்தே.
செவ்வவந்திநாத தேசிகர் அவர்கள் தனது 31வது வயதில் ஆவணி மாதம் 17ம் திகதி கற்றோரும் மற்றோரும் துயருற தேகவியோகமடைந்தார்.