யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சின்னத்தம்பி என்பாருக்கு மகனாக பிறந்தவர் சுவாமிநாத பண்டிதர். உரிய காலத்தே வித்தியாரம்பம் செய்யப்பட்டு, வண்ணார்பண்ணையிலிருந்த பாடசாலை ஒன்றில் அரம்பக் கல்வியனை கற்று வந்தார்.
இளமைக்காலத்தே இவர் இலக்கண இலக்கணங்களை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடத்தே கற்க விரும்பினார். வித்துவசிரோமணி அவர்கள் வண்ணார்பண்ணையிலிருந்த ஆறுமுகம்பிள்ளை சிவகுருநாதபிள்ளைக்கு அவர் வீட்டிலே கல்வி கற்பிக்க வருவதனை அறிந்தார். பொன்னம்பலப்பிள்ளை வருகின்ற நேரத்திலே சிவகுருநாதரின் வீட்டிற்கு சென்று அவர் பக்கத்திலே அமர்ந்து கொள்வார் சுவாமிநாதர். அவருக்கு கற்பிப்பதனை எல்லாம் கவனமாக கேட்டு கிரகித்துக் கொள்ளுவார். சிவகுருநாதபிள்ளையினை விடவும் சிறப்பாய், வந்திருக்கின்ற பிள்ளை இலக்கண இலக்கியங்களிலே தேர்ச்சி பெறுவதனையும், இனிய சரீர வளம் கொண்டிருப்பதனையும் அவதானித்து மகிழ்ந்த வித்துவசிரோமணியும், தாம் புராணபடணங்கள் செய்யச் செல்லும் ஆலயங்களிற்கும், மடாலயங்களிற்கும் சுவாமிநாத பிள்ளையினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார். புராணங்களிற்கு பயன் சொல்லுகையில் பொன்னம்பலப்பிள்ளையின் உரைச் சிறப்பினையும் சுவாமிநாதர் கிரகித்துக் கொண்டார். பொன்னம்பலப்பிள்ளை போன்றே இனிதுபட உரை சொல்லும் கலையையும் தனதாக்கிக் கொண்டார்.
காலியில் இருந்த சிவன் கோயிலிலே புராண படனம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அவ்வூர் மக்கள், நல்லூர் வந்து தம் விருப்பை பொன்னம்பலப்பிள்ளையிடத்தே தெரிவித்தார்கள். பொன்னம்பலப்பிள்ளை தமக்கு நேரமில்லை என்பதனால் தம் இடத்தே சுவாமிநாத பண்டிதரை அவர்களுடனாக்கி அனுப்பி வைத்தார்கள். சுவாமிநாத பண்டிதரும் மக்கள் மனம்மகிழ புராண படனம் செய்து மீண்டார்.
இந்நிகழ்வின் பின் இந்தியா சென்ற சுவாமிநாத பண்டிதர் அங்கேயும் ஆலயங்களில் புராண படனங்கள் செய்து நன்மதிப்பினைப் பெற்றார். நாட்டுக்கோட்டையிலேயே சிலகாலம் தங்கி அங்குகுள்ள பிள்ளைகளுக்கு இலக்கண இலக்கியங்களையும், சமயக் கல்வியினையும் கற்பித்து வந்தார். சென்னை, சிதம்பரம், திருச்செந்தூர், தருமபுரம் முதலான இடங்களிலிருந்த வித்துவான்களோடெல்லாம் பரீட்சயங்களை ஏற்படுத்திக் கொண்டார்.
சென்னையிலே ஒரு அச்சியந்திர சாலையினை தாபித்து சபாபதி நாவலரிடத்திருந்து அவர் நூலாய சிவஞானமாபாடியத்துட் சில பகுதிகளை பெற்று அங்கேயே அச்சிட்டு வெளியிட்டார். மூவர் தேவாரங்களையும் பல ஏட்டுப்பிரதிகளுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து பரிசோதனைகள் செய்து தூய பதிப்பாய் வெளியிட்டார். திருக்கோவையாருண்மை எனும் அரிய நூலும் இவரால் பதிப்பிக்கப்பெற்றது. திருச்செந்தூரிலே ஒரு பாடசாலையை நிறுவி சிலகாலம் நடாத்தியும் வந்தார். பாடல்கள் பலவும் இயற்றியுள்ளார்.
பகைவருக்கஞ்சாத இவர், புலோலி கதிரவேற்பிள்ளையுடன் நட்புடையவர்கள். கதிரவேற்பிள்ளையின் அருட்பா மறுப்பு வழக்கு சென்னை நீதிமன்றிலே நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு மிகவும் உதவியாய் இருந்தார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடத்தே மிகுந்த அபிமானமும் கௌரவமும் உடையவர்.
சபாபதி நாவலரின், திராவிடப் பிரகாசிகை நூலுக்கு சுவாமிநாத பண்டிதர் வழங்கிய சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றை அவர் கவித்திறன் நோக்க கீழே காணுங்கள்.
திராவிடநன் னூன்மாண்பு தேறாரும் தேற
திராவிடப்ர காசிகையைச் செம்மை – விராவிடச்செய்
தீந்தான் சபாபதியென் றேயிசைக்கு நாவலன்றான்
றீந்தேன் றமிழருமை தேர்ந்து.
இத்தகு பெருமைகள் வாய்ந்த சுவாமிநாத பண்டிதர் அவர்கள் 1937ம் ஆண்டிலே இறையடி சேர்ந்தார்.