சிவப்பிரகாசர்
சிவப்பிரகாசர் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி என்னுமூரிலே 1615ம் ஆண்டளவில் சைவாசாரம் பொருந்திய வேளாளர் குலத்தில் பிறந்தனர். ஆறுமுகநாவலர் இவர் வழித்தோன்றல் ஆவர். இவர் சீவகாருண்ணியமும் தரும சிந்தையுமுள்ளவர். குடிகளாகிய ஒவ்வொருவரும் முறை முறையாக ஒவ்வொரு பசு அரசாங்கத்துக்கு உணவின் பொருட்டுக் கொடுத்தல் வேண்டும் என்னும் பறங்கி யரசாங்கக் கட்டளைக்கு அஞ்சி, இந்தியாவிற்குச் சென்று, சிதம்பரத்திற்றங்கிச் சிவகாமசுந்தரியை உபாசனை செய்து அநுக்கிரகம் பெற்றுக் கௌடதேசஞ் சென்றனர். ஆங்கே ஓரிடத்திற் பிராமண சந்நியாசி ஒருவர் தருக்கம், வியாகரணம் முதலிய நூல்களைப் பிராணப் பிள்ளைகளுக்குக் கற்பித்துவந்தனர். இவர் தினந்தோறும் அங்கேசென்று தூரத்து நின்று அவற்றினைக் கேட்டு மனத்தமைத்துக் கொண்டு வந்தார். சந்நியாசி பிராமணப் பிள்ளைகளைப் பரீட்சித்தபொழுது அவர்கள் தகுந்தவிடை அளியாமையினால், யாங் கற்பித்தவற்றைத் தூரத்து நின்று கவனமாகக் கேட்டவன் தகுந்தவிடை அளித்தல்கூடுமென்று நினைத்து இவரை அழைத்துப் பரீட்சிக்க இவர் அவற்றிற்கெல்லாம் தகுந்த விடையளித்தனர். சந்நியாசி மகிழ்ந்து நீயே பிராமணன் என்று புகழுந்து, இவருக்கு தருக்கம், வியாகரணம் முதலியவற்றைக் கற்பித்து நீ தழிழ்நாட்டிற்குச் சென்று அங்குள்ளார்க்குப் பயன்படுவன புரிவாயாக என்று கட்டளை இட்டார். இவர் அக்கட்டளையை மேற்கொண்டு திருவண்ணாமலை ஆதீனத்தை அடைந்து சந்நியாசம் பெற்று ஆகமங்களையும், சைவசித்தாந்த நூல்களையும் கற்றனர்.
இவர் சமஸ்கிருத பாசையிற் சித்தாந்தசிகாமணி, பிரமாணதீபிகை, பிரசாததீபிகை, சிவயோகசாரம் என்னும் நூல்களுக்கு வியாக்கியானம் இயற்றியும் தமிழில் சிவஞானசித்தியாரின் சுபக்கத்துக்கு உரை இயற்றியும் உள்ளார். இவ்வுரை அரிதினுணரற்பாலது.
சித்தியுரை வணக்கம்.
சிவமுற நமக்கு முந்தித் தந்திவத் திரனை சிந்தித்
துவமையில் சிவனொப் பில்லா வுமைகுரு குலங்கண் மற்றென்
இவர்களை வணங்கி யின்பச் சிவஞான சித்திக் கேற்ப
நவமுறு முரையு ரைப்பா முன்னுரை நலங்கொ ளார்க்கே.
இவர் நடராச தரிசனம் செய்ய விரும்பித் திருவண்ணாமலையை நீக்கிச் சிதம்பரத்தையடைந்து ஞானப்பிரகாசம் என்னும் திருக்குளம் ஒன்றினை அமைத்துச் சிலகாலம் வசித்து அங்கே தேகவியோகமாயினர்.