இணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்

சிறுகுறிப்பு
புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை புகைப்படத்துடன் அனுப்பிவைத்து பேருபகாரம் செய்த தியாகராஜா இலம்போதரன் அவர்களுக்கு நன்றி.புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்கள் இணுவில் கிராமத்தில் 1914ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்தவர். இவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உளர்.
ஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராக இவர் கடமை புரிந்தார். இவரும் இவர்காலத்து தமிழாசிரியர்களும் நன்நூல் காண்டி உரையையே கரைத்துக் குடித்தவர்கள். எழுத்தெண்ணிப் படித்தவர்கள் என்று சொல்க்கூடிய பெருமைக்குரியவர்கள். தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடையார் என்பது அவர் ஓய்வுபெறும் வயதுவரும் வரை எவரக்கும் தெரியாமலே இலைமறைகாய் இருந்து வந்துள்ளது. ஓய்வுபெற்ற பின் சிற்றம்பலம் அவர்கள் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார். ஓசைநயம், பொருள்நயம், இலக்கணநயம் அமைந்து இவரது செய்யுள்கள் சிறப்புற விளங்குகின்றன.
இவர் செய்த சுவாமி விபுலானந்தர் நான்மணி மாலை மற்றும் நல்லூர் இரட்டை மணிமாலை என்பன தமிழறிஞர்கள் பலராலும் பெரும் பாராட்டுப்பெற்றதோடு கொழும்புத் தமிழச் சங்கத்தாரின் முதற்பரிசினையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இவர் பாடல்கள் தமிழறிவு பெரிதும் பெறார்க்கும் இலகுவாக விளங்கும் தன்மை வாய்ந்தவை. இவர்செய்த பண்டிதமணி நான்மணி மாலையிலிருந்து ஒரு பாடலை கீழே பாருங்கள்.
செந்தமிழர் செய்த சிறந்த தவப்பயனால்
வந்துதித்த பண்டித மாமணியைச் – சிந்தித்தே
நாவலராய்ப் பாரதியாய் நானேந்திக் கூடலுறை
தேவருமாய்ப் பாடுவேன் தேர்ந்து.
இந்த வெண்பா பதினான்கு தளைகளும் ஒருசேர கவிதை இலக்கண விதிக்கேற்ப அமைந்திருத்தலை காணலாம்.
புலவர் சிற்றம்பலம் அவர்கள் செய்த கட்டளைக் கலித்துறை ஒன்றை கீழே காணுங்கள்.
மதித்திடு நாவலர் மன்னிய வாழ்வில் – மயங்கிநின்றே
உதித்தெழுந் தேகற்ற வுண்மைப் புலவ – ருரைத்தவெலாம்
மதித்தனை யாழ்ந்து பரவினை யந்தகற் – பண்பிலுனை
துதித்தனன் யானுந் தொடர்ந்தென்றும் பாடச் – சுரந்தருனே
கட்டளைக் கலித்துறை ஒவ்வோரடியும் ஐந்து சீர்களால் அமைவது. எனினும் வெண்டளை தழுவி வர வேண்டுமென்பது ஒரு விதி. அடிகள் தோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காயாக அல்லது கருவிளங்காயாக அமைய வேண்டுமென்பது பிறிதோர் விதி. நேரசை முதலாகத் தொடங்கும் அடி பதினாறு எழுத்துக் கொண்டதாகவும் நிரையசை முதலாகத் தொடங்கும் அடி பதினேழெழுத்துக்கள் விலக்கப்படும். சீர்சிதைய வருவழி குற்றியலுகரம் குற்றியலிகரம் என்பன மெய்யெழுத்துப் போலக் கொள்ளப்படும் என்பது புலவனுக்கு ஒரு சலுகையாகக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு யாப்பிலக்கணங்கள் எல்லாம் அமைய இக்கட்டளைக் கலித்துறை அமைந்திருப்பதை கண்டு மகிழலாம்.
புலவர் அவர்களுக்கு 2002ம் வருடம் இலங்கை இந்து கலாச்சார திணைக்களம் கலாபூசணம் விருது வழங்கி கௌரவம் செய்து தானும் கௌரவரம் பெற்றுக்கொண்டது.