சின்னத்தம்பிப் புலவர்
சிறுகுறிப்பு
உசாத்துணை : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்இப்புலவர் பெருந்தகையார் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நல்லூரிலிருந்தவரும், ஒல்லாந்த அரசினால் தேசவளமை என்னும் நூலைத் திருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் ஒருவராய் விளங்கியவரும், பெரும் பிரபுவுமாகிய வில்லவராய முதலியாருடைய அருந்தவப் புதல்வர். இவர் யாரிடத்தில் கல்வி கற்றனர் என்பது தெரியவரவில்லை. இவர் இளமையிலேயே பாடும் சாமர்த்தியம் உடையவர் என்றும், மாடுமேய்க்கும் பிள்ளைகளுடன் இவர் விளையாடிக்கொண்டு நிற்கும்போது, அவ்வழியாக வந்த புலவர் ஒருவர் இவரை நோக்கி ‘வில்லவராய முதலியார் வீடு எது?’ என்று வினாவியபோது, இவர் உடனே வாயிலிற் கொன்றைமரம் நிற்கும் வீடே அவர்வீடு என்பதைக் குறிப்பிட்டுப்,
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடை கொன்றை மரம்.
என்று ஒரு கவியினால் அப்புலவர் ஆச்சரியமுறுமாறு விடையிறுத்தா ரென்றும் முதியோர் சிலர் கூறுவர். அன்றியும் ஒரு நாள் இவர் தமது தந்தையார் ஒரு செய்யுளின் முதலடிகளிரண்டையும் பாடி, ஒரு ஏட்டிலெழுதி ஏனையீற்றடியிரண்டையும் செவ்வனே பாடி நிரப்பமுடியாது வைத்துவிட்டு அயலூர்க்குச் செல்ல, இவர் அவ்விரண்டடியையும் செவ்வனே பாடி நிரப்பி வைத்தாரென்றும், பின் தந்தையார் வந்து அவ்வேட்டையெடுத்து பார்த்தபோது தான் பாடிய செய்யுளின் ஈற்றடி இரண்டும் நிரப்பப்பட்டிருந்தல் கண்டு மகிழ்ந்து, அதனை நிரப்பி வைத்தவர் தம் புதல்வரே யென்றறிந்து, தம் சொற்படி பாடசாலைக்குச்செல்லாது விளையாட்டிற்குச் செல்லுதல் காரணமாக முன் இவர்பால் வைத்திருந்த வெறுப்பை நீக்கி, அன்றுதொட்டு இவரிடம் பேரன்புடையவராயினாரென்றும், இங்ஙனம் இவர் இளமையில் பாடத் தொடங்கியதற்குக் காரணம் இவர் பெற்றுக்கொண்ட சரஸ்வதி கடாட்சமே யென்றும் கூறுவர். இவர் புலமைக்குக் காரணம் யாதாயினும் ஆகுக. இவர் பாடுதலிலே மிகுந்த சாமர்த்தியமுடையவரெனபதில் தடையில்லை. இவர் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவரென்பது இவர் பாடிய பிரபந்தங்களால் நன்கு புலப்படுகின்றது. இவர் பாடிய பிரபந்தங்கள், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளைப் பள்ளு என்பன.
மறைசையந்தாதி
இது வேதாரணியேசுவரர்மேற் பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி திரு. அ. சிவசம்புப் புலவர் அவர்களும், மதுரை மகாவித்துவான் சபாபதி முதலியாரவர்களு முரையெழுதியுள்ளார்கள்.
கல்வளையந்தாதி.
இது யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளையென்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுள்மீது பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து வல்லுவெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் சிறீ. வைத்திலிங்கம்பிள்ளையவர்கள் உரையெழுதியுள்ளார்கள்.
கரவை வேலன் கோவை.
இது யாழ்ப்பாணத்துக் கரவெட்டியிலிருந்து பிரபு திலகராகிய வேலாயுதம்பிள்ளை மேற் பாடப்பெற்றது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாக அளிக்கப்பட்டது என்பர். இதனுள் பல செய்யுட்கள் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளையவர்களால் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில காட்டுதும்.
மாசால மோமயி வாய்நோகு மோநும் மரபியலின்
ஆசார மோவிர தத்தடை வோதிரை யாடைசுற்றுந்
தேசா திபர்மெச்சும் வேலன் கரவைச் சிலம்பனையீர்
பேசா திருக்கும் வகையின்ன வாறென்று பேசிடுமே.பூவென்ற மாலிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய
வாவென்ற வீரன் கரவையில் வேல மகிபதிமேற்
பாவென்ற வாணிப் பவளச்செவ் வாய்மடப் பாவையிவள்
ஏவென்ற காதள வோடிய பார்வை யிமைக்கின்றதே.
இக் கரவை வேலன் கோவை சிறந்த அரும்பதவுரையோடு, திரிபாஷா விற்பன்னரும், ஆரிய திராவிட சங்க ஸ்தாபகரும், வித்தியாதரிசியுமாகிய சிறீமாந்தி. சதாசிவ ஐயரவர்களால் இப்போது அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பறாளைப்பள்ளு.
இது யாழ்ப்பாணத்து பறாளாய் என்னுமிடத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுள் மீது பாடப்பெற்றது. இதன் கவிகள் மிகவுஞ் சுவையுள்ளன. சுவையுணரும்படி சில காட்டுதும்.
பகுத்த வந்தணர் சாலைக டோறும்
பயிலும் வேதத் தொலிபண்ணை மீதிற்
றொகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு
சோழமண்ணடல நாடெங்க ணாடேபண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப்
பாடும் பாவலர்க் கீந்திட வென்றே
யெண்ணிப் பொன்முடிப் புக்கட்டி வைத்திடு
மீழமண்டல நாடெங்க ணாடே.
இப்பள்ளு, சென்னை சிறீமாந் செ. வே. ஜம்புலிங்கம் பிள்ளையால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இவர் சிறப்புப்பாயிர கவிகளும் பாடியுள்ளாரென்பது வரதபண்டிதர் பாடிய சிவராத்திரி புராணத்திற்கு அளித்த சிறப்புக்கவியால் அறியக்கிடக்கின்றது. அதனால் இருவரும் ஒரே காலத்திருந்திருக்கின்றார்கள் என்பதும் பெறப்படும்.
சிவராத்திரி புராண சிறப்புப்பாயிரக்கவி வருமாறு.
மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ்
சராசனமு மலையாக் கொண்ட
சித்தனுயர் சிவநிசிமான் மியமதனைச்
செந்தமிழாற் றெரித்தல் செய்தா
னத்தகைய பாரத்து வாசகோத்
திரனரங்க னருளு மைந்தன்
சத்தபுரி களிற்காசி நகர்வரத
பண்டிதன்முத் தமிழ்வல் லோனே.வர ஆசனம் – மேலான ஆசனம், சராசனம் – வில்