உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவர்
யாழ்ப்பாணத்து உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சேர்ந்த தனக்காரக் குறிச்சியில் 1831ம் வருடம் சித்திரை மாதம் நான்காம் திகதி, கல்வி செல்வங்களாலே சிறப்புற்று விளங்கிய வீரகத்தி மணியகாரன் வழித் தோன்றலாய் பிறந்தவர் இச் சின்னப்பு என பலராலும் அழைக்கப்பட்ட சின்னத்தம்பி. (நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர் வேறு இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் வேறு இவர் வேறு.) இவரது தந்தையார் தாமோதரம்பிள்ளை. தயார் வீரகத்தி மணியகாரன் பௌத்திரி, விதானையார் சுவாமிநாதர் புத்திரி.
சிறுவயதிலே அருளம்பல முதலியாரால் தாபகம் செய்யப்பட்டிருந்த பிரபல தமிழ் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று இலக்கண இலக்கியங்களிலே தேர்ந்து, தியாகராச பண்டிதரிடத்தும் அரிய நூல்களை கற்று பாண்டித்தியம் பெற்றார்.
இவர் இலக்கண இலக்கியங்களில் மட்டுமல்லாது, கணித சாஸ்திரம், நில அளவை சாஸ்திரம், சோதிட சாஸ்திரம் போன்றவற்றிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். நில அளவை சூத்திரம் என்கின்ற பெயரிலே நிலவை சாஸ்திரத்தை எல்லோரும் கற்கவென நூலாகச் செய்தார். சோதிட சாஸ்திரத்தினை சுருக்கி சோதிடச் சுருக்கம் எனறதொரு நூலினையும் செய்தார்.
மேலும் வீரபத்திரர் சதகம், விக்கிநேசுரர் பதிகம், வீரபத்திரர் பதிகம், வீரமாகாளியம்மன் பதிகம், வீரபத்திரரூஞ்சல், சிவதோத்திர கீர்த்தனை, புதுச்சந்நிதி முருகையன் பதிகம், மதனவல்லி விலாசம், இராமவிலாசம் என்னும் நூல்களையும் பல தனிப்பாக்களையும் பாடியுள்ளார். பாடும் வித்தை மட்டுமன்றி இராக தாளங்களிலும் வல்லவராகிய இவரது பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைகளாற் சிறந்திருந்தன.
இவர் செய்த விருத்தம் ஒன்றை கீழே பாருங்கள்.
ஏரேறு பரிதியுட னெழிலேறு மமரர்களு
மேழேறு முனிவருமலா
தியலேறு மதிமுதலா யிவரேறு துதிகள்செய
வினிதேறு கயிலைமலையில்
வாரேறு தனமதனின் மணியேறு பணியணியும்
வகையேறு மலைமகளுடன்
வயமேறு முலகதனி னயமேறு முயிர்கணிதம்
வாழ்வேற வீற்றிருக்கும்காரேறு கடுமிடறொ டேறேறு கடவுளது
கண்ணேறி வந்தபுலவர்
கழலேறு பதமதெனு நிழலேறி யெனதுதுயர்
கரையேற வருடருகுவாய்
தாரேறு கன்னலொடு செந்நெல்விளை நெல்வயற்
றங்குடுப் பிட்டிநகரிற்
சந்திர குளத்திலம ரெந்தையே வந்துனரு
டருவீர பத்ரதேவே.
சரஸ்வதி கடாட்சம் மட்டுமன்றி இலக்குமி கடாட்சமும் பெற்றிருந்த இவர், பிரமச்சாரிய விரதத்தை கடைப்பிடித்து, உடுப்பிட்டியிலே ஒரு தமிழ் வித்தியாசாலையினை தாபித்து வேதனம் பெறாது மாணக்கர்களுக்கு இலக்கண இலக்கியங்களையும் கணித சாஸ்திரத்தினையும் கற்பித்து வந்தார்.
தரும சிந்தையும் தெய்வ பக்தியும் மிக்க இவர், 1874ம் ஆண்டு சுரநோய் கண்டு இறையடி சேர்ந்தார்.