சரவணமுத்துப்புலவர்
சிறுகுறிப்பு
உசாத்துணை:தமிழ்ப்புலவர் சரித்திரம் - குமாரசுவாமிப்புலவர்
Tamil Plutarch - சைமன் காசிச்செட்டி
யாழ்ப்பாணத்து நல்லூரில் மானப்புலி முதலியாரிற்கு மகனாக 1802ம் வருடம் பிறந்தவர் சரவணமுத்துப்புலவர். இவர் சேனாதிராச முதலியாரிடம் மாணவனாயிருந்து இலக்கியலக்கணங்களும், வேதாந்த சித்தாந்தங்குளம் வேறு நுல்களும் நன்கு கற்றவர். இவர் வேதாந்தசுயஞ்சோதி, ஆத்துமபோதப்பிரகாசிகை என்னும் நூல்களையும் இயற்றினவர் என்பர்.
யாழப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகைப் பத்திரிகையில் இலக்கியலக்கண விடயங்களில் வேதகிரி முதலியாரோடும் வேறு புலவர்களோடும் வாதசாதனவுரைகளும் வரைந்தவர். வேறுவிடயங்களும் வரைந்தவர். அவற்றுள் சில காட்டுதும்.
தருமலிங்க சுவாமி பற்றி கூறியது.
முகாமைக்காரர்களே!
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருளொளி இருக்கையால் அதனுண்மையைப் போதிக்கவிரும்புகின்றவர்கள் அக்காலத்தில் நிகழ்ந்த சிற்சில அற்புதங்களை மாத்திரம் அத்தாட்சிப்படுத்திச் சாதிப்பதுபோல இக்காலத்திலும் வேதாரணியம் தருமலிங்கம் சுவாமிகளில் அவ்வருளொளி மகிமை விளங்குவதினால் அதிற் சந்தேக விபரீதங் கொள்ளாமற் சித்தசுத்தியுள்ளவர்களும், சத்திய சமாதானிகளுமாய் இருக்கின்ற நீங்கள் சகலசனங்களும் அறிந்து உய்யும்பொருட்டு உதயதாரகைப் பத்திரத்திற் பின்வரும் புன்கவியைப் பதிப்பித்துவிடும்படி உங்களை கேட்டுக்கொள்ளுகின்றேன்.சுத்திபெற லாம்புத்தி முத்திபெற லாம்பவுத்ர
சுகபுத்தி ராதி பெறலாந்
தொலையாத குன்மகய ரோகமுத னோய்களொரு
சொல்லிலே சுத்தி பெறலாம்
பத்திபெற லாங்குருடு கூன்செவிடு சப்பாணி
பரிசுத்த மாகை பெறலாம்
பயமேறு பூதப் பிரேதப் பசாசுகள்
பறந்தோட வெற்றி பெறலாம்
சித்திபெற லாஞ்சுத்த வித்தைபெற லாஞ்செயச்
சிற்சுரூப மகிமை பெறலாம்
சிவயோக மாதிபல வைகயோக சாதனச்
சிவபோக திர்ப்தி பெறலாம்
சத்திபெற லாஞ்சைவ தர்மலிங் கச்சாமி
சந்நிதி யடைந்து பணிமின்
சற்சங்க சகலசன சமயபரி பாலர்கான்
சத்தி யஞ்சத் தியமிதே.
சகத்துநிண்ணயத்துணிபுரை
கருத்தாவைப்போல் சிருட்டியும் அநாதி என வாதிப்பது காண்டல், கருதல் முதலிய பிரமாணங்களுக்கு விரோதம். நிமித்த காரணமாகிய கருத்தாச் சூக்குமயோசன சாத்த விகற்ப அந்தருத்திரேகத்தைப் பண்ணி இச்சாஞானங்களைக்கொண்ட “மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலாலனாலே – எண்ணிய வுருவமெல்லா மியற்றுவனீசன்” என்பதுபோலச் சகத்தைச் சிருட்டிக்க வேண்டுகையாற் கருத்தாவைப்போலச் சிருட்டி அநாதியன்று. ஆதி என்பதற்கு திருட்டாந்தம் சிவஞானசித்தியார் “இலங்கிய தோற்றநிற்ற லீறிவை யிசைத லாலே – நலங்கிளர் தோற்ற நாசந் தனக்கிலா நாதன் வேண்டும்” என்றும், “உலகமெல்லாந் தருபவனொருவன் வேண்டும்” என்றும், திருமந்திரம் “ஒருவனுமே யுலகேழும் படைத்தான்” என்றும் வருவனவற்றிற் காண்க.
சரவணமுத்துப்புலவர் 1845ம் ஆண்டு தனது 43ம் வயதில் இறைவன் திருவடி சேர்ந்தார்.