பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை
யாழ்ப்பாணம் சங்கானையை பிறந்த ஊராகவும் ஊரெழுவை வாழந்த இடமாகவும் கொண்ட சைவவேளான் குல திலகர் சுப்பிரமணியபிள்ளைக்கு 1848ம் ஆண்டு மைந்தனாக பிறந்தவர் சரவணமுத்துப்பிள்ளை. இவர் பிற்காலத்தில் சரவணமுத்துப் புலவர் என அழைக்கப்பட்டார். இளமையிற் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த தமிழிலக்கியப் புலவராகிய சிவஸ்ரீ கதிர்காமையரிடம் தமிழிலக்கியம் கற்ற இவர், தொடர்ந்து சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் நன்னூல் யாப்பருங்கலகாரிகை என்னும் இலக்கண நூல்களையும், மற்றுஞ்சில இலக்கிய நூல்களையும், சித்தாந்த சாத்திர நூல்களையும் ஒழுங்காக கற்றார்.
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை என்போர் சமகாலத்தில் முருகேச பண்டிதரிடம் பாடங் கேட்டுள்ளனர். தெளிவான வசனங்களை உடையனவாக கட்டுரைகள் அமைத்தல், கவிதைகள் யாத்தல், பிரசங்கங்கள் செய்தல் என்பவற்றில் வல்லவராகவும் இவர் விளங்கினார்.
1898இல் யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்தின் புலமையாளர் குழுவில் இந்த மூவரும் உறுப்பினர்களாகி இருந்தனர் என்றுந் தெரிகின்றது. யாழ்ப்பாணம் சைவ சித்தாந்த சமாசத்திலும் இவர்கள் உறுப்பினர்களாய் இருந்திருக்கின்றனர்.
இளமையில் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டவர் சரவணமுத்துப்பிள்ளை. சைவசித்தாந்த சாத்திரங்களிலும் நியாயமான அளவு தேர்ச்சி பெற்றுகொண்டார். நாவலரை தன் ஞானகுருவாக வரித்துக்கொண்ட சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் நாவலர்வழி சைவப்பிரசாரகராகத் திகழ்ந்தார். வேண்டியவிடத்து தீவிர கண்டனக்காரராகவும் மாறிக் காட்சி தந்துள்ளார். சில பிரபந்தங்களைப் பாடியுள்ளார் என்றுந் தெரிகின்றது. தனிப்பாடல்களையும் கட்டுரைகளையுங் கூட எழுதியுள்ளார். அவர் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் கண்டனத்துடனாயவை மிகுந்த ஆற்றலுடையனவாகக் காணப்பட்டன.
சித்தாந்த சாத்திரங்களில் இவருக்கிருந்த புலமை காரணமாக இவரைச் சுத்தாத்துவித சைவசித்தாந்த பிரசாரகர் எனப் பலரும் புகழ்ந்து பேசுவர். இவர் கொழும்பு சைவபரிபாலன சபையிற் சிலகாலம் சைவப்பிரசாரகராகவும் இருந்திருக்கிறார்.
பத்திரிகைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் நாவலர் மறைவுக்கு பின், அடுத்து வந்த 1880ஆம் ஆண்டிலே சைவஉதயபானு என்ற பத்திரிகையைத் தொடங்கிச் சுமார் ஆறுவருடகாலம் வரை அதனை உற்சாகத்துடன் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இதழ் யாழ்ப்பாணத்திலும், மதுரையிலும் ஏககாலத்தில் வெளியிடப்பட்டது, நாவலர் அவர்களின் இலட்சியங்களைப் பிரசாரம் செய்வதாகவும், தொடர்ந்து நாம் செய்யவேண்டுவனவற்றை எடுத்துச்சொல்லும் கட்டுரைகளை உள்ளடக்கியதாகவும், எமது பணிகளை சுட்டி நிறைகாண்பதாகவும் அறிவுறுத்தல்களுடனாகி வெளியாகிக்கொண்டிருந்தது. இவ்வண்ணம் சைவஉதயபானுவில் எழுதுவதுமூலம் மக்களை உற்சாகப்படுத்தினார் சரவணமுத்துப்பிள்ளை. 1883 ஆனி மாத இதழொன்றிலே பத்திராதிபர் குறிப்பாக,
”ஐந்தாஞ் சைவசமய குரவரென்று விவேகிகள் பலராலும் நன்கு பாராட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவல சற்குருநாதசுவாமிகளது கல்வித்திறமை”
என்னுஞ் செய்தி காணப்படுகின்றது. சரவணமுத்துப்பிள்ளை அவர்களுக்கு நாவலர் மீதிருந்த அபரிமிதமான பற்றினை, பற்றின் அழுத்தத்தினை இந்தத் தொடர்கள் கொண்ட உணரமுடிகின்றது.
சைவஉதயபானு நின்றபின்னர், அது வெளிவருதற்கு ஆதாரமாயிருந்த சைவப்பிரகாச அச்சியந்திரசாலையிலிருந்து இந்துசாதனம் வெளிவரத்தொடங்கியது. பத்திராதிபர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சரவணமுத்துப்பிள்ளை எல்லாப்பத்திரிகைகளுக்கும் விடயதானஞ் செய்யத் தொடங்கினார். அவர் கட்டுரைகளை அன்றைய இதழ்களில் எல்லாங் காண முடிந்தது.
சரவணமுத்துப்பிள்ளை விரைவிற் பாடுஞ் சாமரத்தியம் வாயந்தவர். இராமநாதபுரத்து மகாராஜா பாஸ்கர சேதுபதி மீது பிரபந்தம் பாடிப் பரிசில் பெற்றவர். மதுரைத் தமிழச் சங்கத்தாபகர் தலைமைப்புலவர் பாண்டித்துரைத்தேவரைத் தலைவராகக் கொண்டு சபையிற் பிரசங்கஞ் செய்து அவர் பாராட்டை பெற்றார். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் புலவர்களுள் ஒருவராயிருந்தார். சேர் அம்பலவாணர் கனகசபைப்பிள்ளை, திருநாவுக்கரசு முதலியோர் இவரிடம் சித்தாந்த நூற் பாடங் கேட்டுள்ளனர். சரவணமுத்துப்பிள்ளை சித்திரக்கவிகள் பாடுவதிலும் திறமை வாய்ந்தவர்.
சங்கரபண்டிதர் இயற்றிய சைவப்பிரகாசத்திற்குச் சரவணமுத்துப் புலவர் அளித்த சிறப்புக் கவியை இங்கே காண்போம்.
கற்றார் புகழ்சைவ சித்தாந்தப் பாலின் கடல்கடைந்து
மற்றார் நினைக்கருஞ் சைவப்பிர காசன மாவமிழ்தை
நற்றா ரணிச்சைவ நற்புல வோர்க்கு நயந்தளித்தான்
வற்றா வறிவுடைச் சங்கர பண்டித மாதவனே.
உடுப்பிட்டி கு. கதிரவேற்பிள்ளை தொகுத்த அகராதி வேலைகளுக்கும் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவருடனாகி இவர் சிலகாலம் உதவியுள்ளார். இவ்வண்ணம் தமிழ் வளர்ச்சியில், தமிழர் வளர்ச்சியில் சமய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்த புலவராகிய பிள்ளை அவர்கள் 1916 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்கள்