சபாபதி நாவலர்
சிவபூமி என்று திருமூலராலே பாடப்பெற்ற இலங்கையின் வடபாகத்திலே யாழ்ப்பாணத்து வடகோவையில் சைவவேளான் மரபில் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சுயம்புநாதபிள்ளை எனும் சிவபக்தர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் தெய்வயானை. அவர்களின் இல்லறத்தின் அருந்தவப்பயனாய் சாலிவாகன சகாப்தம் 1766 (1846) இல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சபாபதி என்று பெற்றோர் நாமகரணம் சூட்டினர்.
அவர் தாய் தந்தையர் உரிய பருவத்திலே சபாபதிக்கு விதிப்படி வித்தியாரம்பஞ் செய்து வைத்தனர். அக்காலத்து வடகோவைப்பதியில் வடமொழி தென்மொழிக் கல்வியிற் சிறந்த பிரமஸ்ரீ ஜெகந்நாதையர்பால் ஆரம்பக்கல்வி பயின்ற சபாபதி பிறகு சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்த நீர்வேலி சிவசங்கரபண்டிதரிடம் வடமொழி, தென்மொழி இரண்டையும் கற்றுத்தேறினிர். ஆங்கில பாசையும் சிலகாலம் கற்று அம்மொழியிலும் விற்பத்தியுடையராயினர். செந்தமிழ்ப்புலமை தலைமைபூணும் பெருநோக்கத்தோடு கலைபயின்று வரும் நாளில் குனம்நோய் இவரைப்பிடித்துக்கொண்டது. வைத்தியத்தினாலும் அது தீர்ந்திலது. உணவுதானும் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவு நோய் அதிகரித்துத் துன்பத்தைக்கொடுத்தது. ‘இந்நோயினால் வருந்தி வாணாள் வீணாள் ஆவதிலும் உயிர் விடுதல் நன்று. அதிலும் சிவ சந்நிதானத்தில் உபவாசமிருந்து உயிர் துறத்தல் மிகவும் நன்று” என தீர்மானித்து உடனே நல்லூர் கந்தசுவாமி கோயிலையடைந்து முருகப்பெருமானை வணங்கி ‘புண்ணிய புராண முழுமுதல்வரான சண்முகநாதனே! சுப்பிரமணிய சுவாமீ! தமியேனைப்பற்றிய இந்நோய் தீர்ந்து அடிமை கொண்டருள வேண்டும்” என்று பிரார்த்தித்து, கந்தபுராண தோத்திரப்பாக்கள், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் என்னும் திவ்விய பிரபந்தங்களைப் பாராயணஞ்செய்து கொண்டு அங்கு சிலகாலம் இருந்தார்.
இவ்வாறு ஒரு மண்டலத்துக்கு மேல் அரிய உபவாசம் அநுட்டித்து வரும்போது ஒருநாளிரவு சொப்பனத்தில் அர்ச்சகர் பாயாசங் கொடுத்தருளப் பெற்றுண்டு ஆனந்த பரவசராய்த் துதி யெடுத்து
அந்தமி லொளியின்சீரா லறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் ணின்றும் வந்த வியற்கையாற் சத்தியாம்பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையாற் றனிவேற் பெம்மான்
கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம்
எனப் பலவாறு திருவருளின் திறத்தை வியந்து கந்தவேள் திருவடிப்பற்று மேன்மேலும் ஓங்கி வளர அப்பெருமான் இன்னருள் பழுத்த சந்நிதானத்தில் சிலபகல் தொண்டு செய்து வந்தார். நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் இவர் செய்த பிரபந்தங்களில் ஒன்றாகும். அது சுப்பிரமணியக் கடவுள் திருவிளையாடலை விளக்குவது. குருநாதனாம் முருகப்பெருமான் இவரது உபசனாமூர்த்தியாம். இவர் செய்த நூல்களில் சுப்பிரமணியப் பெருமானுக்கு பாடிய வணக்கச் செய்யுட்கள் இதனை விளக்கும்.
கற்பக நாட்டும் வைவேற் கந்தவே டுணைவிண் ணோர்க்குக்
கற்பக நாட்டில் வாழ்வு கண்டவ விடுவ சேனன்
கற்பக நாட்டி யத்திற் காதல வென்னிற் றில்லைக்
கற்பக நாட்டின் றேகுஞ் சமன்வலி கடப்பிக் கும்மே.
இது இவரியற்றிய சிதம்பர சபாநாத புராணத்தில் வரும் காப்புச் செய்யுள்.
சபாபதி நாவலர் அவர்கள் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுகநாவலர் அவர்கள் விரும்பியபடி சிலகாலம் தலைமைத் தமிழ்ப் போதகாசிரியராக அமர்ந்திருந்து அந்த வித்தியாலயத்தை அந்நாளில் நடைபெறச் செய்தார்.
அருளுபதேசம் பெற்றமை.
இவர் பின்னர் திருவாடுதுறையை அடைந்து அவ்வாதீனத்து பதினாறாவது மகாசந்நிதானமாய் விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அருளுபதேசம் பெற்று அவர்கள் முன்னிலையில் 12 வருடகாலம் ஞானநூல்களையெல்லாம் மரபாற் கற்று வல்லராய் இலக்கிய, இலக்கண, தர்க்க, வேதாந்த, சித்தாந்த சாகரமாய் அவ்வாதீன வித்துவசிகாமணியாய் விளங்கி மிக்க புகழும் தக்க வரிசையும் பெற்றார்.
நாவலர் பட்டம்
அவையோர் வியக்கச் சொல்லும் உரைவன்மையினையும், நிகழ்த்தும் சைவப்பிரசங்கப் பிரவாக மகிமையினையும், மாயாவதி முதலிய குதர்க்கர்களும் பிறரும் நாவடங்கச் செய்யும் நியாயவாதச் சொற்போர் வென்றினையும் குறித்துச் சுப்பிரமணிய யோகீந்திரர் இவருக்கு ‘நாவலர் என்னும் பட்டத்தினை மனமகிழ்ந்து அளித்தார். ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அதனை ஆசீர்வதித்தருளினார்கள்.
செய்த நூல்கள்.
சிதம்பர சபாநாத புராணம்
சபாபதி நாவலர் அவர்கள் சிதம்பரத்தை தம் வாசஸ்தலமாக கொண்டு வசித்துவரும் நாளில் பல தலபுராணங்களை ஆராய்ந்தார்கள். அதன்பயனாக அவர் சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூலை பாடினார்கள். இது சிதம்பர மான்மியம் ஐந்தனுள் ஒன்றான ஏமசபாநாதமான்மியத்தின் மொழிபெயர்ப்பாயுள்ளது. 893 செய்யுட்கள் கொண்ட இந்நூல் 1885 இல் வெளியிடப்பட்டது. இப்புராணத்திலே திருநாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசைப்படலம், புராணவரலாற்றுப்படலம், பிச்சாடனப்படலம், தேவதாருவனப்படலம், அனந்தப்படலம், புண்டரீகப்படலம், வியாக்ரபாதப்படலம், திருநடனப்படலம், ஏமவன்மப்படலம், தீர்த்தவிசேடப்படலம், யாத்திரோற்சவப்படலம் ஆகிய படலங்கள் காணப்படுகின்றன. இப்புராணத்துக் காப்புச்செய்யுள் வருமாறு.
ஞானமிக வளரினஃ றிணையவுயர் திணையாகு நவிலஞ்ஞான
வீனமிக வளரினுயர் திணையவஃ றிணையாகு மென்று தேற்றன்
மானவஃறிணைமேலு மாண்டவுயர் திணைகீழும் வடிவிறகாட்டித்
தேனமரும் பொழிற்றில்லைச் சிகரிவாழ் கற்பகத்தை வணக்கஞ் செய்வாம்.
சிவகர்ணாமிர்தம்.
அப்பய தீக்ஷித யோகிகள் வடமொழியில் செய்த சிவகர்ணாமிர்தத்தின் மொழிபெயர்ப்பாய் வசனகிரந்தத்தில் சபாபதிநாவலர் அவர்கள் சிவகர்ணாமிர்தம் என்ற நூலைச்செய்தார். இந்நூல் பூர்வபக்கம், சித்தாந்தமென இருபகுதியாய் சிவபரத்துவத்தை சொல்லுகின்றது. இந்நூலை திருப்பனந்தாட்காசி மடாதிபதி ஸ்ரீமத் குமாரசுவாமிச் சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி நாவலரவர்கள் இயற்றி 1885 ஆவணியில் வெளியிட்டனர்.
சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
இந்நூலைப்போலவே வடமொழியில் அரதத்தாசாரியர் இயற்றிய சதுர்வேத தாற்பரிய சங்கிரக மொழிபெயர்ப்பாய் வசனகிரந்தத்தில் சபாபதிநாவலர் அவர்கள் சதுர்வேத தாற்பரிய சங்கிரத்தை செய்தார். இந்நூல் பரமசிவனே நான்கு வேதங்களாலும் எடுத்தோதப்படும் பரம்பொருள் என்று சாதிக்கின்றது. நாவவரவர்கள் இதன் முதற்பதிப்பை தாது வருடம் சித்திரையிலும் இரண்டாம் பதிப்பை சர்வசித்து வருடம் வைகாசியிலும் (1887) வெளியிட்டனர். இந்நூல் பின்னர் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் இரத்தாட்சி வருடம் ஆவணியில் (1924) மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர். கழகப்பதிப்புரையில் இந்நூலின் மகிமையை கூறுமிடத்தில் வரும் விசேட குறிப்பு வருமாறு-
“இத்துணைச்சிறப்பு வாய்ந்த அந்நூல் வடமொழியில் இருத்தலின் அஃது அம்மொழிவல்லார்க்கே பயன்படுவதாகின்றது. வடமொழிக்கல்வி அருகி வரும் காலநிலையை கருதி அந்நூலைப் பல்லோர் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அவற்றுளெல்லாம் சிறந்ததும், முதனூற்பொருளைத் தெளிவு பெற விளக்கி தமிழச்சுவை ததும்பி நிற்பதும், திருக்கைலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனத்து மகாவித்துவானாய் இருந்த யாழ்ப்பாணம் வடகோவைச் சபாபதி நாவலரவர்கள் செய்த மொழிபெயர்ப்பே…..”
பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம்.
சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் போன்றே வடமொழியில் அப்பய தீக்ஷித யோகிகள் இயற்றிய பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் என்பனவும் இவராற் தமிழில் செய்யப்பட்டன. பாரதத்தாலும், இராமாயணத்தாலும் நுதலப்படும் பரம்பொருள் பரமசிவனென்று இவை அறிவுறுத்துவன. இந்நூல்களை நாவலரவர்கள் தாரண வருடம் (1884) இல் வெளியிட்டார்.
யேசுமத சங்கற்ப நிராகரணம்.
இந்நூல் யேசு மதத்தார் கொள்கை பூர்வபக்கமாதலைத் தருக்கத்தினாற் றெரிப்பது. இந்நூலுக்கு சிறப்புப்பாயிரமளித்த சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் சிறப்புப்பாயிரம் வருமாறு.
சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப்
பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப
மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனூல்
தெய்வஞா யிறொன் றெழுந்தெனத் திகழ்ந்ததையன்றோ.
நாவலரவர்கள் 168 செய்யுள்கள் கொண்ட இந்நூலினை பிரமாதி வருடம் (1879) இல் இயற்றினார். அதனைச் சித்திரபானு வருடம் (1882) வைகாசியில் நல்லூர் கைலாசபிள்ளை வெளியிட்டனர்.
இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு
இஃது இலக்கண விளக்கச் சூறாவளியின்மேல் சிலர் நிகழ்த்திய பழியை மறுத்து அதன் சிறப்பைக் கூறும் வசன நூல்.
வைதிக காவிய தூஷண மறுப்பு
இது பெரிய புராணம், இராமாயணம், தணிகைப்புராணம் என்னும் வைதிக காவியங்களை புறக்கணித்துச் சிந்தாமணி என்னும் அவைதிக காவியம் பாராட்டினாரை நியாயத்தினால் மறுத்து வைதிக காவிய மாட்சிநிலை நாட்டும் வசனகிரந்தம்.
ஞானசூடாமணி
இது சிரவணமாதி நான்கும் பராபர ஞானமாய் அடங்குமாறு நிரூபிப்பது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு துறைசையாதீனம் 19ம் வெளியீடாக வந்துள்ளது.
ஞானாமிர்தம்.
இது சமயங்களெல்லாம் முழுமுதற்கடவுள் ஒருவன் ஆணையிறறோன்றி அதிகாரி பேதம் பற்றித் தாரதம்மிய முற்று நிற்கும் முறைமையுணர்த்தும் வசன கிரந்தம். இந்நூல் கோலாலம்பூர் சைவசித்தாந்த சங்கத்தின் முதல் வெளியீடாக அக்ஷய வருடம் கார்த்திகை மாதம் (1926) பதிப்பிக்கப்பட்டது.
திருச்சிற்றம்பல யமகவந்தாதி
திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.
மத்தியார்ச்சுனம் என்று சொல்லப்படும் திருவிடைமருதூர்க்குச் சென்று மகாலிங்கப்பெருமான் நன்முலை நாயகியை வணங்கி இப்பிரபந்தத்தை பாடினால். இதன் காப்புச் செய்யுள் வருமாறு.
மதிவளரு மணிமாட வரிசைதிகழ் தருமருத
பதிவளர்மா லிங்கசேர் பதமலரி னணிபாக்குத்
துதிவருளம் பதிற்றுப் தந்தாதி தொடுக்கமத
நதிவளருங் கரடகய முகப்பெருமா னடிநயப்பாம்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பு துறைசை ஆதீன வித்துவான் பார்வையில் திருவிடைமருதூர்க்கோயில் அதிகாரியாரால் 1952ல் வெளியிடப்பட்டுளது.
மாவையந்தாதி
சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக் கோவை
வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை
நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம்
வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம்
புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்
சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம்
திராவிடப்பிரகாசிகை
திராவிடப்பிரகாசிகையின் சிறப்புப்பாயிரத்தில் சபாபதி நாவலர் அவர்கள், “தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், அதனிலக்கிய மரபினையும், சாத்திரமரபினையும், நல்லாசிரியர் வழிநின்று தெளிதரற்குரிய நற்றவ அறிவு மாட்சியுடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாம் தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியினும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தானும் அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதைநீரார் அவற்றினை மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாரதம்மிய முறையினும் வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுசூழதலானுந் தமிழுலகமற்றவற்றின் உண்மைதேறி உறுதிப்பயன் எய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித் திராவிடப்பிரகாசிகை என்னும் பெயரினால் இவ்வசன கிரந்தம் இயற்றுவோமாயினோம்.”
தமிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப் போதிப்பது இத்திராவிடப்பிரகாசிகை. அருந்தமிழறிஞரால் மருந்தெனப்போற்றப்படும் இந்நூலை நாவலரவர்கள் தமது சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் சாலிவாகனம் 1821ல் செல்லாநின்ற விகாரி வருடம் கார்த்திகையில் (1899) பதிப்பித்து வெளியிட்டார்.
பத்திரிகைகள் வெளியிட்டது.
சபாபதி நாவலர் அவர்கள் 1891 இல் சென்னையில் நடாத்தி வந்த சித்தாந்த வித்தியா நுபாலன அச்சியந்திரசாலையைச் சிதம்பரத்தில் புதிதாக ஸ்தாபித்து ஞானாமிர்த பத்திரிகையை நாடாத்தி வந்தனர். அப்பத்திரிகை அரிய நூன்முறையாக நடைபெற்று வந்தது. ‘பிரமவித்தியா” பத்திராதிபர் தமது 2ம் புத்தகம் 12ம் பத்திரிகையில் “ஞானாமிர்தம் என்னுமோர் அமிர்தம், புத்தி என்னும் மந்திரத்தாற்கடைய ஓர் நாவலர் என்னும் திருப்பாற் கடலிற் பிறந்து உலாவுகின்றது. இப்பத்திரிகை உதித்து இத்தென்னாட்டை அலங்கரிப்பது எமக்குப் பரமானந்தமே. பத்திரிகாசிரியர் நற்றமிழ் கடந்த நாவலர். ஆரிய பாஷையின் வரன்முறை அறிவார்” என வியந்து கொண்டாடினார்.
மேலும் சபாபதி நாவலர் அவர்கள் சுதேசவர்த்தமானி என்னும் மாதப்பத்திரிகையைத் தொடங்கிச் சிலகாலம் நடாத்தினார். சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் பலநூல்களும் வெளியிடப்பெற்று வந்தன.
சிவனடி சேர்ந்தது.
சபாபதி நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் தங்கியிருக்கும்கால் 1903ம் வருடம் தனது 58ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
நீண்டுயர் சோலை வடகோவை நற்பதி மேவுதமிழ்
மாண்புடைச் சைவன் சபாபதி நாவலன் வான்சிறப்ப
ஆண்டுயர் சோபகிரு தானிமாத மமரபக்கம்
வேண்டிய பஞ்சமி வான்பதம் புக்கான் விருந்துகந்தே.