சந்திரசேகர பண்டிதர்
யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்த ஆதிசைவப் பிராமணர் குலத்தவராகிய நாராயணப்பட்டர் என்பவருக்கு 1785ம் வருடமளவில் புத்திரராக பிறந்தவர் சந்திரசேகர பண்டிதர். இலக்கண இலக்கியங்களிலே சிறந்த பண்டிதராயிருந்தவர். பழைய கவிகள் போல் பாடுவதில் சாமர்த்தியம் மிக்கவர். நல்லூர் கந்தசுவாமி மீது ஒரு கிள்ளைவிடுதூது பாடியிருக்கின்றார். இந்நூலை செவ்வந்திநாத தேசிகரின் சிறிய தந்தையார் ஆரிய திராவிட பண்டிதர் நமச்சிவாய தேசிகர் அவர்கள் பதிப்பித்திருக்கின்றார்கள். இந்நூலின் சிறப்புப்பாயிரத்தால் இந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு முதலியன அறியப்படலாம்.
ஆசிரிய விருத்தம்
சீர்செறி சகவாண் டாயிரத் தெழுநூற்
றெட்டெனச் செறிந்திட விரவும்
பேர்பெற மருவும் பராபவ வருடம்
பிறங்குதை மதியிரு பத்தோ
டேர்தரு மொன்பான் றிகதிபொன் வார
மிசைத்திடுஞ் சோதிநா ளிதனிற்
சார்தரு நல்லூர் முருகவே ளருளாற்
றருங்கிளித் தூதுசொன் னதுவேகட்டளைக்கலித்துறை
செந்நெற் பழனத் திருநல்லை வேன் முரு கேசருக்கு
வன்னப் பசுங்கிளித் தூதுரைத் தான்சது மாமறைதே
ரன்னத் தவனிகர் நாரா யணனரு ளாலுதித்தோன்
பன்னத் தருபுகழ்ச் சந்திர சேகர பண்டிதனே.
இனி, இவரது கவித்திறமுணர்வதற்காக அந்நூலின் காப்புச் செய்யுளை இங்கே தருதும்:
விந்தைசெறி நல்லூர் விரும்பியுறுங் கந்தன்பாற்
சுந்தரஞ்சேர் கிள்ளைவிடு தூதுக்குத் – தந்தவிசைச்
சீராம்ப லானனத்தான் சிந்திக்கு மோர்கோட்டுக்
காராம்ப லானனத்தான் காப்பு