சங்கர பண்டிதர்
சங்கர பண்டிதர் யாழ்ப்பாணம் உடுவில் கோவில்பற்றைச்சேர்ந்த சுன்னாகத்தில் வேளாளர் மரபில், விரோதி வருடம் (1829) சித்திரை மாதம் 21ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் சிவகுருநாதர் மற்றும் தெய்வயானை அம்மையார். யாழ்ப்பாணம் நீர்வேலியிலே வசித்து வந்த இவர் கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை என அழைக்கப்பட்ட நாகநாத பண்டிதரிடத்தே தமிழ் கற்றுத்தேர்ந்தார், நாகநாத பண்டிதர் இருபாலை சேனாதிராச முதலியாரின் மாணாக்கர். பின்னர் இவர் சமஸ்கிருத திராவிட விற்பன்னராகிய வேதாரணியம் வை. சுவாமிநாத தேசிகரிடம் சித்தாந்த உபதேசம் பெற்றார். சுவாமிநாத தேசிகரின் மைத்துனர் முத்துச்சாமி தேசிகரிடம் நிருவாண தீட்சையும் பெற்றார். சுன்னாகம் அ. நாகநாத பண்டிதரிடத்தும் சித்தாந்த உபதேசம் பெற்றவர். கந்தரோடை அப்பாப்பிள்ளையிடமும் மாணாக்கராக இருந்தவர்.
சங்கர பண்டிதரின் மகனே சிவப்பிரகாச பண்டிதர். கீரிமலைச் சபாபதிக்குருக்கள், முருகேசபண்டிதர் முதலியோருக்கு இவர் ஆசிரியராய் இருந்தவர்.
இவர் பிராணமரைப் போலச் சுதியோடு வேதமோத வல்லவராதலினால் வேதாரணீயம் சென்றிருந்தபோது சிலர் வேண்டுகொள்படி அவ்வாறு செய்தார் என்றும், அதனை கேட்ட பிராமணர்கள் வெட்கமடைந்து இவரைப்பாராட்டினார்கள் என்றுங்கேள்வி. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆகமசாத்திரங்களிலும் மகாநிபுணராய் விளங்கினார்.
நூல்களைத் தேடிக்கற்றலிலும், வட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தலிலும், தமிழில் நூல்கள் செய்தலிலும், மாணவர்க்குச் சங்கதமும் தமிழும் கற்பித்தலிலும், பரமதங்களைக் கண்டித்துச் சைவமதத்தை நாட்டிச் சைவப்பிரசங்கம் செய்தலிலும், பெரும்பான்மையுந்த தமது காலங் கழித்தவர். இவருடைய சைவப்பிரசங்கத்தை முருகேசபண்டிதருங் கட்டளைக்கலித்துறை ஒன்றிற் சுட்டிக் கூறியுள்ளார்.
சைவத்தை நாட்டிப் பரமத மோட்டத் தயங்குமொரு
தெய்வத்தைப் போல்வரு சங்கரபண்டித தேசிகர்தாம்
மெய்வைத்த கண்டிகை வெண்ணீற்றி னோடு விளங்கிடச்செய்
சைவப் பிரசங்க தெள்ளமு தென்றினிச் சார்குவமே.
சங்கர பண்டிதர் சைவப்பிரகாசனம், மிலேச்சமத விகற்பம், கிறீஸ்துமத கண்டனம், சிவதூஷண கண்டனம், அநுட்டான விதி, சிரார்த்த விதி, வருணாச்சிரம தருமம், சத்த சங்கிரகம் ஆகிய ஆகிய நூற்களை தமிழிலே செய்திருக்கின்றார். சிவபூசையந்தாதியுரை, அகநிர்ணயத் தமிழுரை முதலிய தமிழுரைகளையும் செய்தனர். இஃதன்றி சமஸ்கிருத பாலபாடம், சமஸ்கிருத இலக்கணம் ஆதியாம் வேறு சில நூல்களோடு சிலவற்றிற்கு உரையுஞ் செய்தனர். கிறீஸ்தவ மதத்திற்கு விரோதமாக இவர் பல ஆட்சேபங்கள் எழுதியிருந்தார். இவரது நிரியாணத்தின் பின் அவற்றில் சில பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையால் வெளியிடப்பெற்று வந்த சைவஉதயபானு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆறுமுக நாவலர் அவர்கள் கத்தியரூபமாக செய்த பெரிய புராணத்திற்கு இவர் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கின்றார். சங்கர பண்டிதர் வடதேச யாத்திரை சென்று திரும்பும்போது புதுச்சேரியில் பிரமோதூத வருடம் (1870) புரட்டாதி மாதம் 12ம் திகதி தனது 42வது வயதில் வைசூரிகண்டு தேகவியோகமானார்.