க. மயில்வாகனப் புலவர்
சிறுகுறிப்பு
காலம் : 1875 - 1918தந்தையார் : கணபதிப்பிள்ளை
தொழில் : ஆசிரியர் மற்றும் நொத்தரிசு
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வருத்தலைவிளான் கணபதிப்பிள்ளை ஆசிரியருக்கு 1875 இல் புதல்வராக பிறந்தவர் மயில்வாகனம். அவ்வூரிலிருந்த அமெரிக்கமிஷன் தமிழப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர், பன்னிரண்டாம் வயதிலிருந்து அமெரிக்கமிஷன் ஆங்கில பாடசாலையிலே கற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்வகலாசாலை புதுமுக வகுப்பிற் சேர்ந்து கற்றார். ஓய்வு நேரங்களில் அக்கல்லூரி தலமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த ஶ்ரீ. அ . சோமாஸ்கந்தரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றும் வந்தார். விடுதலை நேரங்களில் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடத்தே சென்று தன் ஐயங்களைத் தீர்த்து வந்தார்.
1897 இல் தலயாத்திரையாக இந்தியா சென்ற புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரை அங்கே கண்டு அளவளாவி அவருடன் சேதுபதி மகாராசாவினை சென்று கண்டு வந்தார்.
1898 முதல் தெல்லிப்பழை அமெரிக்கமிஷன் ஆங்கிலப்பாடசாலையில் ஆசிரியராயமர்ந்த புலவர், பின்னர் மல்லாகம் ஆங்கிலப்பாடசாலையில் தன் பணியை தொடர்ந்தார். அக்காலத்தே நொத்தாரிசுமாருக்குரிய பிரவேச பரீட்சையில் சித்திபெற்ற இவர், தன் ஆசிரியத் தொழிலைத் துறந்து யாழ்ப்பாணம் சட்ட வல்லுநர் வி. காசிப்பிள்ளையிடம் சட்டப் பிரமாணங்களைக் கற்று இறுதிப் பரீட்சையிலும் சித்தியெய்தினார். இவர் நொத்தரிசாய் பதவியேற்க முன்னர், காங்கேயன்துறை ஆங்கில வித்தியாசாலையில் சில காலம் பணிபுரிந்தார். அக்காலத்திலேதான் மயிலை மும்மணி மாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், மயிலைச் சுப்பிரமணியர் ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப் பதிகம் முதலிய நூல்களினை இயற்றியுள்ளார்.
1908 ஆம் ஆண்டிலே வட்டுக்கோட்டைப் பகுதி நொத்தரிசுவாக நியமனம் பெற்ற இவர், அக்காலத்தே துணைவைப் பதிகத்தினைப் பாடினார். தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் மீது வினோத விசித்திர கவிப்பூங்கொத்து என்றொரு பிரபந்தமும் பாடியுள்ளார். தன் ஊருக்கு இடமாற்றம் கிடைக்க வேண்டும் என்று வேண்டியே இப்பிரபந்தத்தை பாடியதாய் பிரபந்தத்தின் முகவுரையில் புலவர் விளம்பியுள்ளார்.
1908 இல் மயிலிட்டிக்கு இடமாற்றம் பெற்ற இவர், தன் சுற்றாடலிலே இந்து பரிபாலன சபை என்ற பெயரிய சபை ஒன்றைத் தாபித்து தலைவராயிருந்து தொண்டு செய்து வந்தார். இக்காலத்தே இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி பாடினார் என்ப. அந்நூலினிருந்தும் ஒரு பாடல்
அறமே புரிந்து மறமே தவிர்ந்து மழகோடிருந்து நிதமு
நிறமே பொலிந்த மயிலே றுகந்த நிமலா சிறந்த விணுவைக்
குறமாது மும்பல் வளர்மாது மன்பு குறையா திருந்த புடையோய்
புறமீது முள்ளு நினையானி னைந்து புகழாவ ணங்க வருளே
நகுலேச்சுர விநோத விசித்திர கவிப்பூங்கொத்திலிருந்து ஒரு பாடல்
ஆறுதலை சேர்ந்தா ராறுதலை யீந்தா
ராறுதலை யார்தந்தை யைந்தலையார் – மாறினகர்
நங்கை தகுதி நரனல முதலிடையோ
டங்கடையி னென்றா ரறிந்து.
பெரும் புலமை வாய்ந்த மயில்வாகனப் புலவர் என அழைக்கப்பட்ட இந்த மயில்வாகனப்பிள்ளை தமக்குண்டான சுரநோய் காரணமாய் 1918இல் இயற்கை எய்தினார்.