ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என வழங்கச் செய்து விட்டது. இயல்பாக பாடக்கூடிய திறன்வாய்ந்தவராயிருந்ததால் ஆசுகவி எனும் அடைமொமியும் அவர் பெயருடனாயது. இவ்வாறாக இவர் பெயர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்று வழங்கலாயிற்று.
சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியை பெற்ற பின்னர், ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காமையரிடமும் இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தார்.
கண்டனங்கள் எழுதுவதற்கு கண்டிப்பானவர் ஆசுகவி. தமக்கு பிழையெனப்பட்டதை தயங்காமல் சுட்டிக்காட்டுவார். தனது நாற்பத்திரண்டாவது வயதில் 1902 இல் “சுதேச நாட்டியம்” என்னும் பெயருடையதொரு பத்திரிகையை தொடங்கி நடாத்தத்தொடங்கினார் ஆசுகவி. அப்பத்திரிகை தொடர்ச்சியாக 32 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. அப்பத்திரிகையை நடாத்தவேண்டிய தேவையை ஆசுகவியே பின்வருமாறு சொல்கின்றார்.
எப்பிரபுக்களாயினும் எவ்வதிகாரிகளாயினும் எவ்வுத்தியோகத்தராயினும் எக் குருவாயினும் எந் நண்பராயினும் எக்கலாஞானியாயினும் நீதியற்ற கிரியைகளைச் செய்கின்ற வராய்க் காணப்படுவாராயின் அக்கிரியையினையும் அவர் கீழ் நடுநிலையையும் எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனுமஞ்சி எம்மனஞ் சிறிதாயினும் பின்நிற்கப்போகின்றதில்லை. இதுவே நடுவுநிலையும் பொதுநன்மையும் விருப்பும் பத்திரிகா லட்சணமுமாம்.
கொள்கைப்பிடிப்பில் உறுதியான ஆசுகவி மற்றோர் சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறுகின்றர்.
நாமிப் பத்திரிகையை ஒருவரைத் தூசிக்கும் நோக்கமாயல்ல. எமது நயத்துக்காயவும் பிறர்க்கு விசேச சற்புத்திகளையும் பிறதேச வர்த்தமானங்களையும் அறிவிக்கும் நோக்கமாகவுமே தொடங்கினோம்.
இப்படியா கொள்கை இவருக்கு சிறைவாழ்க்கையை பெற்றுத்தந்ததுமுண்டு. சிறையிருந்த காலத்திலொருபோது மவையில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் மீது பாடிய பாடலொன்றை பாருங்கள்.
என்முகம் பாரா திருப்பதற் கோழைநான்
என்னகுறை செய்த தந்தோ
யாதானு மொருகுறை இருப்பினும் மன்னிப்ப
தெந்தையுன் கடமை யலவோ
புன்புலால் மதுவுண்டு நிரயவழி மால்புகுது
புலையருற வன்றி ஞானம்
போதிப்ப வர்க்குநீ நண்புடைய னல்லனோ
போந்தமுன் வினைவ சத்தால்
என்பையெனி லச்சுமை சுமந்திறக் கிக்கடைத்
தேறுநா ளெந்த நாள்தான்
எவருக் குரைத்தழுவ திக்கலி யுகத்தினீ
பேயிறைவ னென்கி லையா
பொன்குலவு தெய்வானை குறவள்ளி கணவமுப்
புரதகன சிவகு மரசீர்
பொலிகாவை யுறுமாவை நகர்வாச முருகேச
புகழாறு முகதேவ னே.
ஆசுகவியின் அன்பு மனைவி ஆச்சிக்குட்டியின் மறைவின் போது அவர்
நீர்க்குமிழி வாழ்க்கையென நெஞ்சறிந்தோர் சொன்னவந்த
வார்த்தைக குதாரணமாய் மாண்டாயோ – பூத்தவரி
பாடுங் குயிலேயென் பைங்கிளியே நானிருந்து
வாடுவதோ நிற்கு மனம்.
என்று நெஞ்சுருகிப் பாடினார்.
நியாயவாதி ஒருவர் இருபுறமும் பணம்பெற்று செய்த அநியாயத்தை பொறுக்கலாற்றாது ஆசுகவி
குலமெழிய நீசனோ குடிவெறிய னோகெறுக்
கொண்ட நட்டா முட்டியோ
கோதில் சிறீ ராமர் தூதுவனோ குணங்கெட்ட
குட்டு ணிக்கா வாலியோ
நலமிலா மூதேவி ஏறுவா கனமோ
நடப் பெண்கள் மனையில் நாயோ
நன்றியறி யாத வொரு பூதமோ
உயிர்கொலும் குழுப்பன் றியோ
உலகெலாம் நகையோட ஓடேந்தி உண்கின்ற
உணர்வில் பிச்சைக் காரனோ
உடையற்ற பித்தனோ லுத்னோ பிறரை
யூம்பிச்சீ வனஞ்செய் பவனோ
அளவிலா தேழைகளை ஏய்த்துவயி றோம்புமொரு
அசடனோ அதிப கலிலே
அறிவிலார் பொருள்கவரும் கள்வனோ வென்று
அறைகுவை குமர வேளே.
என்று கண்டனம் தீட்டினார்.
ஆசுகவி தன் வாழ்நாளில் இருபதிற்கு மேற்பட்ட நூல்களைச் யாத்தார். யாழ்ப்பாண மக்களின் சமூக முறைகூறும் யாழ்ப்பாண வைபவ கௌமுதி, கதிரமலை பேரின்பக்காதல், உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் பேரின்பக் காதல், உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப்பாமாலை, மேலைத்தேய மதுபான வேடிக்கைக் கும்மி போன்றன அவற்றில் சில.
கொள்கைப்படிப்பில் தளராது வாழ்ந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் 1944ம் ஆண்டு இயற்கையெய்தினார்.