கந்தப்பிள்ளை
கந்தப்பிள்ளை யாழ்ப்பாணத்து நல்லூரிலே கிறிஸ்தாப்தம் 1766ம் வருடம் பரமானந்தர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். பின் ஐந்தாம் வயதிலே வித்தியாரம்பஞ் செய்யப்பெற்றுச் சண்முகச் சட்டம்பியார் என்னும் ஒருவரிடங் கற்றுப் பின் வண்ணணார்பண்ணையிற் சென்று கூழங்கைத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்கள் கற்று வல்ல புலவராயினர். தமிழன்றி, ஆங்கிலம், போத்துக்கேயம், ஒல்லாந்தம் முதலிய பாசைகளும் நன்கு கற்றிந்தவர். 18 வருடகாலம் அரசினரிடம் ஆராய்ச்சி உத்தியோகத்திலிருந்தமையால் ஆராய்ச்சி கந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர்க்கு ஆறு புத்திரரும் ஆறுபுத்திரிகளுமுளர். இவருடைய கனிஸ்ட புத்திரரே ஆறுமுகநாவலர். வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை இவருக்குத் தௌகித்திரர். த. கயிலாயபிள்ளை பௌத்திரர்.
இவர் புலவராய் விளங்கியதன்றிப் பிரசித்திபெற்ற வைத்தியராயும் விளங்கினார். அதனால் இவருக்கு ஊரில் அதிக மதிப்பு உண்டு. இவர் பாடிய நாடகங்கள் இருபத்தொன்று. இறுதியிற் பாடிய நாடகம் இரத்தினவல்லி நாடகம். அதனைப் பாடிக்கொண்டிருக்கும்போதே இவர் உயிர் நீத்தார் என்பர். இவர் தேகவியோகமடைந்த காலம் 1842 –ம் ஆண்டு ஆடி மாதம் 2-ம் திகதி புதன்கிழமையாகும். அப்போது வயது 76.
இவர் தமது முற்றத்திலே நின்ற மாமரத்தின் காய்களை அரித்துக்கொண்டிருந்த ஓர் அணிலின் மீது அது விழுந்து இறக்கும்படி ஒரு செய்யுள் பாட உடனே அது விழுந்து இறந்தது என்பர்.
இவர் பாடற்றிறமறிய, இவர் பாடிய இராமவிலாசத்துள் ஒரு செய்யுள் காட்டுதும்-
தருவளர் வனஞ்சூ ழயோத்தியம் பதியிற்
றசரத னருள்பெறு ராமன்
றகுகவு சிகற்காய்த் தம்பிலட் சுமணன்
றன்னொடுந் தனிவனம் புகுந்து
செருவளர் படைகள் செலுத்துதா டகையைச்
சிதைத்துயா கமுநிறை வேற்றித்
திகழக லிகைதன் சிலையுரு வகற்றிச்
சீதையைக் கண்டுவின் முரித்து
மருவளர் மிதிலை மணம்புரிந் தேதம்
வளநகர்க் கேகுமவ் வழியில்
வரும்பர சிராமன் வலியொடும் வில்லு
வாங்கியே சென்றுவாழ்ந் திருந்த
திருவளர் கதையை விலாசம தாகச்
செப்பினேன் பிழையிருந் தாலும்
செந்தமிழ்ப் புலவீ ரவைபொறுத் தருள்வீர்
தேவச ரித்திர மெனவே.