இணுவைச் சின்னத்தம்பிப் புலவர்
சிறுகுறிப்பு
உசாத்துணை : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்இவர் இணுவில் என்னுமூரில் வேளாளர் மரபிலே ஏறக்குறைய 1740ம் ஆண்டளவில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் சிதம்பரநாதர். இளமையிலேயே பாடும் சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் ஒல்லாந்த அரசினரிடம் சாசானம் எழுதும் உத்தியோகத்தில் இருந்தவரென்றும், அவ்வுத்தியோகத்தில் நேர்ந்த யாதோ ஒரு பிழை காரணமாகச் சிறைச்சாலையிலே வைக்கப்பட்டனரென்றும், அப்போது இவர் அச்சிறைச்சாலையில் கதவு திறக்க தன் வழிபடு தெய்வமாகிய இணுவைச் சிவகாம சுந்தரியம்மை பேரில் ஒரு பதிகம் பாடினரென்றும் கூறுவர். அப்பதிகத்துள் ஒரு செய்யுள் தருதும்.
தரவுகொச்சகம்
பெற்றவணீ யானுனது பிள்ளையுல கோரறிய
அற்றமிலாச் செல்வ மருளிவளர்த் தன்புதந்தாய்
இற்றைவரை யுந்தனியே யான்வருந்த வெங்கொளித்தாய்
சிற்றிடைமின் னன்னை சிவகாம சுந்தரியே
இன்னும் இவர், கலிங்கராயன் என்னும் ஒல்லாந்த அரசமந்திரியின் மகனாகிய கயிலாயநாதன் பேரில் பஞ்சவர்ணத்தூது என்னும் பிரபந்தம் பாடியுள்ளார். அதனுள் ஒரு செய்யுள் காட்டுதும்:-
விநாயகர் துதி
திங்கண்முக நங்கையுமை திருத்தாட் கன்பு
சேர்ந்தநதி குலக்காலிங் கேந்த்ரன் சேயாந்
குங்கமிகு கயிலாய நாதன் சீர்த்தி
துலங்கு செஞ்சொற் பஞ்சவன்னத் தூதுபாட
வெங்கயசே கரனையொரு கோட்டாற் கீன்ற
விண்ணவர்சே கரனைமலை வேந்தன் மாது
பங்கில்வைத்த சந்திரசே கரன்றா னீன்ற
பரராச சேகரனைப் பணிகு வோமே.
இச் செய்யுளில் கயசேகரன் என்றது யானைத்தலையுடைய கயமுகனை. பரராசசேகரன் என்றது பரராசசேகரப் பிள்ளையாரென்னும் பெயரைக் குறித்து நின்றது.
இவர் செய்யுட்களை நோக்கும் போது இவரொறு இலக்கணப்புலவர் அல்லரென்பது புலப்படுகின்றது.