ஆறுமுக நாவலர்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது குழந்தையாக பிறந்த இவர் ஐந்து வயதில் வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று சுப்பிரமணியர் என்னும் உபாத்தியாயரிடம் கல்வி கற்று, அப்பால் பன்னிரு வயதில் அவ்வூரிலிருந்த வேலாயுதமுதலியாரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களை வாசித்து, மறுபடி இருபாலையிலிருந்த வித்துவசிரோமணியாகிய சேனாதிராச முதலியாரிடமும், வண்ணார்பண்ணையிலிருந்த மனப்புவி முதலியார் சரவணமுத்துப்புலவரிடமும் அரிய நூல்களை கற்றுத்தேர்ந்தார். இவர் தமிழ் வித்துவான்களின் சகாயத்தால் அரிய தமிழ் நூல்களை கற்றுத்தெளிந்து தமிழில் பாண்டித்தியம் பெற்றதோடன்றி சமஸ்கிருதத்திலும் மிகு பயிற்சியுடையவராய் உவெஸலியன் மிசன் பாடசாலையில் ஆங்கில பாசையும் கற்று 20 வயதிலே அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ்ப்பண்டிதராகி வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகியாகி விளங்கினார்.
1845ம் வருடம் வரை அவருடன் துணையாயிருந்து வந்த ஆறுமுக நாவலர் அதன்பின் அந்தவேலையை விட்டுவிட்டு தம்மூரிலே சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை தாபிக்கவும், பிரசங்கஞ்செய்யவும், கருத்துட்கொண்டாராகி ஏறத்தாள 32 வருடங்கள் அம்முயற்சியிலேய தன் வாழ்நாளை செலவிட்டார். வண்ணார்பண்ணை புலோலி முதயில இடங்களின் மட்டுமன்றி, தென்னிந்தியாவிலே சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை தாபித்தார். இவர் சைவரிடம் காணும் குற்றங்களை வழக்கமாக கண்டிப்பாராதலால் அவருட்பலபேர் இவருக்கு சத்துருக்களானார்கள். அத்தோடு மட்டுமன்றி இவர் தம்மத்ததை சிரமேற்கொண்டு கிறீத்துவத மதத்தையும் சாடுவாராகி அம்மதத்துக்கு விரோதமாய் பல புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். நாவலர் அவர்கள் வண்ணார்பண்ணையிலும் பின் சென்னையிலும் அச்சிந்திரசாலைகளை தாபித்தார்.
கந்தபுராணம், சேதுபுராணம், பிரயோக விவேகவுரை, திருவள்ளுவர் பரிமேலழக ருரை, தொல்காப்பியம் சேனாவரையருரை, நன்னூல் காண்டிகையுரை விருத்தியுரை, நிகண்டு சூடாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, கோயிற் புராணவுரை ஆகிய சிறயனவும் பெரியனவுமான அறுபதுக்கு மேற்பட்ட புத்தகங்களை திருத்தி அச்சிட்டு பிரசுரித்தார். இவர் பழையபாடல்கள் உரைகளை திருத்தி அச்சிடுவித்ததோடு மட்டுமன்றிச் சிலவற்றிற்கு புத்துரைகள் எழுதியும், பாலபாடம், சைவவினாவிடை, இலங்கை பூமிசாத்திரம், இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடசாலைப்புத்தகங்கள் பலவற்றை புதிதாயுமியற்றினார். பெரிய புராணத்தோடு சிதம்பர மான்மியத்தை வசனநடையில் செய்தார். பாடுந்திறனிலும் இவர் சளைத்தோரல்லர். இவர் பாடிய கீர்த்தனங்கள் சில கதிரையாத்திரை விளக்கத்திற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. கீர்த்தனங்களன்றித் தனிப்பாக்களும் பாடினார். இரகுவம்சத்தை பதிப்பிக்க முயன்றார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டிகள் சிலரின் வேண்டுகொளுக்கிணங்கி தேவகோட்டை தலபுராணத்தை ஐநூறு செய்யுள்வரையும் பாடினாரென்றும் கேள்வி.
இவர் பாடிய ஒரு தனிவருத்தம் வருமாறு
சீர்பூத்தகருவி நூலுணர்ச்சிதேங்கச்சிவம் பூத்தபிரணவமோர் வடிவமானோன்
ஏர்பூத்தவடியர் செயன்முற்றுமாற்றானியல் பூத்ததிருவருள் செய்தெங்குநின்றோன்
பார்பூத்தவீழவள நாட்டின்மேவும்பயன் பூத்ததிருநல்வலப்பதியில் வாழுங்
கார்பூத்தகரிமுகவன் றனதுபாதங்கரம் பூத்தமலர்கொண்டே கருத்தில்வைப்பாம்.
சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ்நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திதழ்ந்த நல்லை நகர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தனது ஐம்பத்தாறாவது வயதில் தேகவியோகமாயினார். அவரது சிவபதத்தின் பேரிற் புலவர்கள் பலர் பற்பல சமரகவிகள் சொற்றனர். அவற்றுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையின் வினாவுத்தரவெண்பா.
ஐந்தின்பின்னாவதென்ன வானனத்தின் பேரென்ன
முந்துநடுவில் மொழியென்ன – இந்திரற்கு
மாறுகொண்டோன்பேரென்ன வாக்கில் மிகவல்ல
ஆறுமுகநாவலனேயாம்.
சிலகாலமாக பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையை ஆசிரியராக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சைவஉதயபானு பத்திரிகையும் ஆறுமுகநாவலர் செய்த முற்பிரயத்தனங்களை வித்தாய்க்கொண்டே உற்பத்திபெற்றது.