அம்பலவாண நாவலர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்கேணி என்னும் ஊரில் ஆறுமுகம்பிள்ளை சுந்தரவல்லி தம்பதியருக்கு புதல்வராக 1855இல் பிறந்தவர்தான் அம்பலவாணநாவலர். ஐந்தாவது வயதில் சங்கானை வேற்பிள்ளை ஆசிரியர் அவர்கள் அம்பலவாண நாவலருக்கு வித்தியாரம்பஞ் செய்து வைத்தார்கள். தொடர்ந்து அவர் மட்டுவில் வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதரிடம் சமஸ்கிருதத்தையும், சுழிபுரத்திலிருந்த ஸ்ரீமான் கனகரத்தின முதலியாரிடம் ஆங்கிலத்தையும் கற்று மும்மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். இந்நிலையில் தமது குலகுருவான விளைவேலி வேதக்குட்டிக் குருக்கள் மகன் அப்புத்துரைக்குருக்களிடம் அடிக்கடி சென்று வருவார். அத்தொடர்பு காரணமாகச் சிவதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை என்பவற்றையும் பெற்றுக்கொண்டார். சிவபூசை எழுந்தருளப்பண்ணுதலையுந் தமதாக்கி கொண்டார்.
இளமைக்காலத்திலே பிரசங்ஞ் செய்வதில் வல்லவராயிருந்தார். ஸ்ரீலஸ்ரீ நாவலர் பெருமானின் பிரசங்க வல்லமையை கேள்விப்பட்ட அம்பலவாண நாவலர் அவர் பிரசங்கங்களை கேட்க விரும்பினார். அவர் பிரசங்கம் தொடர்ந்து நடைபெறும் வண்ணார்பண்ணை சிவன் கோவில், வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் இடங்களுக்கு தவறாது சென்று வந்தார். தொடர்ந்த இந்த தொடர்பினால், ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் மீது இவருக்கு அன்பு பெருகியது. அவரைத்தம் மனசீக குருவாக ஏற்றுக்கொண்டார். அந்தப்பெருமகனார் அடிச்சுவட்டிலேயே சென்று கொண்டிருந்தவர், ஏற்றுக்கொண்ட பணிகளை இடையூறின்றிச் செய்து முடிக்க விரும்பி நாவலர் பெருமானைப்போன்று நைட்டிக பிரம்மச்சரிய விரதத்தை போற்றி வாழ்ந்தார். மதுரையிலுள்ள திருஞானசம்பந்தர் மடத்து மகா சந்நிதானத்திடத்து மந்திர கஷாயம் பெற்று நைட்டிகப்பிரமசரிய மாசந்நியாசியாய் விளங்கினார்.
ஆறுமுக நாவலருக்கு பின் அவரைப்போன்று இன்னொருவர் தோன்றியதில்லை. எனினும் அவர் ஞானபரம்பரையில் வந்த சிலர் அவர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அவர் வாழந்த முறையை பின்பற்றி வாழ முயன்றுள்ளனர். நாவலர் பெருமானை உள்ளத்தாற் போற்றி அவர் சென்ற நெறிகணின்று பணிகளை செய்துள்ளனர். அப்படியான வாழ்வியலைத் தமதாக்கிக்கொண்டு அவர் பணிகள் வழிச்சென்றவர்களுள் சித்தன்கேணி அம்பலவாணநாவலர் முதன்மையானவர் எனலாம்.
பாதிரிமார்களால் தாபிக்கப்பட்ட வித்தியாசாலைகளுக்குச் சென்று சைவப்பிள்ளைகள் கல்வி கற்பதைத் தடுக்கும்படி, நாவலர் பெருமான் செய்தது போன்றாதாயதொரு சைவத்தமிழ் பாடசாலையைத் தாபித்துச் சைவமும் தமிழும் தழைக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் தாமும் ஓராசிரியராய் இருந்து கற்பித்து வந்தார்.
சித்தன்கேணியைச் சேர்ந்த அம்பலவாணர் என்றொருவர் தம்மீது அபிமானங்கொண்டவராகித் தமது பணிகளைப் போற்றித் தாமும் அவ்வழி தொடர்கின்றார் என்பதைச் ஶ்ரீலஶ்ரீ நாவலர் பெருமான் அறிந்தார். அவரை அழைத்து அவர்மீது அன்பு பாராட்டி மேன்மைப்படுத்தி உற்சாகந் தந்தார். அம்பலவாணர் கல்வித்தொண்டையும் பாராட்டினார். அம்பலவாணருக்கு நாவலர் பெருமான் மீது பேரபிமானம் வளர்ந்தது. தமது கல்விப்பணி மீது மிகுந்த ஊக்கஞ் செலுத்தினார். அவர் கல்வித்தொண்டின் சின்னமாக விளங்குவதுதான் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி.
அப்பழுக்கற்ற அம்பலவாணநாவலரின் சிந்தனைகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் வழி சமூக சீர்திருத்தங்களிலும் ஈடுபடவைத்தன. அந்தக்காலத்தில் ஆலயங்களில் தாசியர் நடனம் இடம்பெறுவதுண்டு. பலியிடும் முறைமையும் இருந்தது. இவ்வண்ணமாய் சமூக சீர்கேடுகளை தன் ஆசிரியர்களுடனாகி அன்பாக வேண்டித்த தவிர்க்கும்படி செய்தார். இவற்றையெல்லாம் நாவலர் பெருமானுக்கு செய்யும் தொண்டாகவே கருதினார்.
ஆறுமுக நாவலர் அவர்களை தெய்வமாக போற்றியவர் அம்பலவாண நாவலர். அற்புதமான அந்தக் குருபக்தியின் விளைவுதான் நாவலர் சற்குரு மணிமாலை என்னும் அருமருந்தன்ன நூல். ஆறுமுக நாவலரிடம் அவர் வைத்திருந்த பக்தி நூல்முழுமையும் வியாபித்திருத்தலை நூலைப்படிப்பவர்கள் கண்டுகொள்ள முடியும்.
நாயேனை யாளவொர் மானுடக் கோல நயந்துபெற்ற
தாயே யெனைநனி பாராட்டி யன்பிற் றழீஇயெடுத்து
மாயா வறிவமு தூட்டினை யேயின்ப வாழ்வுறுவான்
கூயாளெம் மாறு முகநா வலசற் குருமணியேஏத்தாத நாவு மிறைஞ்சாத் தலையுமெண் ணாதநெஞ்சுங்
காத்தாண்ட நின்னுருக் காணாத கண்ணுங் கருக்கடந்த
மீத்தான மாள்பொரு ளேயெளி யேற்கு விதித்தனையே
கூத்தாவெம் மாறு முகநாவலசற் குருமணியே
இவை நாவலர் சற்குருமணிமாலையிலிருந்து பெறப்பட்டவை. தம்மை ஆள்வதற்காகவே மானுடனாகி வந்தார் என்று காட்டுகின்றார்.
ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும்
தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே
என்பது அந்நூலின் இறுதியிடத்து வருவதொரு பாடற்பகுதி.
அம்பலவாண நாவலர் அவர்கள் இந்தியா சென்று தமிழக்த்திலே தரித்துப் புராணங்களுக்கு பயன்சொல்லல், பிரசங்கமாரி பொழிதல் ஐயந்தெளிவிக்கும் வகுப்புக்கள் நடத்துதல் முதலான முயற்சிகளில் ஈடுபட்டுப் பலவாண்டுகளை அங்கு செலவிட்டுள்ளார். பாண்டித்துரைத் தேவரினால் மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். சைவத்தையும் தமிழையும் வளர்கக்கூடிய சில நிறுவனங்களையும் உருவாக்கினார்.
தமிழகத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு அணித்தாக அமைக்கப்பட்ட திருஞானசம்பந்த மாடலமும், சிதம்பரத்தில் நிறுவிய திருஞானசம்பந்த சுவாமிகள் கோயில் திருப்பணிகளும் அம்பலவாணநாவலர் நாமத்தை என்றும் நினைவூட்டி நிற்பன.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானுக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்த திருவாடுதுறை ஆதீனம், சித்தங்கேணி அம்பலவாண சுவாமிகளுக்கும் நாவலர் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமிகள் நாவலர் சற்குருமணிமாலை, திருவாதிரைச் திருநாள் மகிமைப் பிரபாவம், அருணாசல மான்மியம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். பெரியபுராண பாடியம், ஆரிய திராவிடப் பிரகாசிகை முதலியன அச்சேறவில்லை. மக்கள் வாழ்வு வாழ அரும்பெருஞ் செயல்கள் செய்த அம்பலவாண நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் ஆங்கீராச வருடம் சித்திரை இருபத்து மூன்றாம் நாள் வியாழக்கிழமை கிறீஸ்தாப்தம் 1932இல் கூத்தப்பெருமான் குரைகழலுடனானார்.