Menu

வையா பாடல்

ஆசிரியர்: வையாபுரி ஐயர்
எழுதப்பட்ட வருடம்: 1505 இற்கு 1519 இற்குமிடையில்
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

வையா பாடல் என்கின்ற நூல்

இலங்கை மாநகர் அரசியற்றிடு மரசன்றன்
குலங்களானதும், குடிகள் வந்திடு முறைதானும்

கூற எழுந்த ஒன்றென அதன் மூன்றாஞ் செய்யுள் உணர்த்தும். இந் நூலை யாழ்ப்பாண மன்னர்களுள் ஒருவனான செகராசசேகரனின் அவைப்புலவர் வையாபுரி ஐயர் இயற்றினார் என்று வையா பாடல் ஏட்டுப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் குறிக்கும். இதன் ஆசிரியர் பெயர்,

குலம்பெறு ததீசிமா முனிதன் கோத்திரத்
திலங்குவை யாவென விசைக்கு நாதனே

என்று இந்நூல் ஏழாஞ்செய்யுள் தரும். வையாபாடல் என்ற இந்நூல் ‘இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையினையும்’ கூற எழுந்த ஒன்றாகையால், நூலாசிரியன் காலத் தரசாண்ட பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தை காட்டுமுகத்தால் யாழ்ப்பாணத்து முதலரசனான கூழங்கைச்சக்கரவர்த்தியின் (காலிங்கச் சக்கரவர்த்தி) குலத்தையும், அவன் மைத்துனியாகிய மாருதப்பிரவையின் வரவையும் அவர்கள் அடங்காப்பற்றில் ஆதிக்குடிகளை அடக்கி ஆண்ட சம்பவங்களையும் விரிக்கும்.

வன்னியர் வரவைத்தொடர்ந்து பல்வேறு குடிகள் இந்தியா, சீனா, துருக்கி, ஆகிய நாடுகளிலிருந்து வந்தமையும், அவர்கள் மூலமாகப் பல்வகைத்தெய்வங்கள் கொண்டுவரப்பட்டமையும், இந்நூலிற் காணலாம். 104 விருத்தப்பாவாலான இதன் அமைப்பையும் பொருளையும் நோக்குமிடத்து, இது ஒரு வரலாற்று நூல் என்று தெரிகிறது.

‘வையாபாடல்’ என்று இந்நூலுக்கு இதன் ஆசிரியர் பெயரிட்டிருப்பார் என்பது சந்தேகமே. ஆக்கியோன் பெயர் கூறுஞ் செய்யுளில் இந்நூல் பற்றிய குறிப்பு ‘இலங்கையின் மண்டலத்தோர் தங்காதை’ என்றிருப்பதால், இந்நூலின் பெயர் ‘இலங்கை மண்டலக் காதை’ என்றிருந்ததாக கருதலாம். இதற்காதாரமாகக் காப்புச் செய்யுளில், இலங்கையின் சீரை யோதிட’ என்றும், இரண்டாவது செய்யுளில் ‘நாவிலங்கையின் நன்மொழி யுரைத்திட’ என்றுங் கூறியிருப்பதைக் காட்டலாம். காலப்போக்கில் நூலின் பெயர் மறைந்து போக பின்னர் ஆசிரியனின் பெயரால் இந்நூல் வழங்கப்பட்டதாதல் கூடும்.

இந்நூலின் காலத்தை அறிவதற்கு இதன் இறுதிச் செய்யுள்கள் சில உதவுகின்றன. தொண்ணூற் றொன்பதாஞ் செய்யுளாய,

எந்நாளு மிம்முறையே யாவரையும்
வாழ்வீரென் றிருத்தி யங்கண்
மன்னான விளவலெனுஞ் சங்கிலியை
வாவெட்டி சாரச் செய்து
முன்னோர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித்
தேமுள்ளி வளையா மூரில்
மன்னான விரவிகுலப் பரராச
சேகரனும் வாழ்ந்தா னன்றே

என்பதிலிருந்து, இந்நூலியற்றப்பட்டபோது சங்கிலி இளவரசனாக (முல்லைத்தீவைச் சேர்ந்த) வாவெட்டியென்ற இடத்தி லிருந்தானென்று தெரிகிறது. தொண்ணூற்றாறாவது செய்யுளில்,

அந்தவனை வோர்களையும் மன்னவர்கள்
மன்னவர்பார்த் தன்பி னோடு
கந்தமலி தாரிளவல் செகராச
சேகரனைக் கருணை கூர
இந்தயாழ்ப் பாணமதி லிருக்கவென்றே
சித்திரவே லரையு மீந்து
வந்துமுள்ளி மாநகரிற் கோட்டையும்நற்
சினகரமும் வகுப்பித் தானால்.

என்று கூறுவதிலிருந்து, இங்கு செகராசசேகரனெனக் கூறப்படுபவன் யாழ்ப்பாணத்திலிருந்தானெனவும், அவன் முள்ளியவளையிலிருந்த பரராசசேகரனின் இளவலும், சங்கிலியின் சகோதரனுமாவானெனவுந் தெரிகிறது. ‘இந்த யாழ்ப் பாணமதி லிருக்க வென்றே’ என்று குறிப்பிடுவதிலிருந்து இந்நூலாசிரியின், யாழ்ப்பாணத்திலே சங்கிலியின் சகோதரன் ஆட்சி செய்தபோது இந்நூலை அங்கிருந்தெழுதினானென கொள்ள இடமுண்டு. சங்கிலி யாழ்ப்பாண அரசனானது கி. பி. 1519 ஆம் ஆண்டிலென்பது வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்ட முடிவாகும். அதுபற்றி இதிற் கூறாதமையால் இந்நூல் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். எவ்வாறாயினும், பறங்கியர் மன்னார்ப்பகுதியிலிருந்தமை பற்றிய குறிப்பும் இந்நூலிற் காணப்படுவதால் அவர்கள் இலங்கைக்கு வந்த காலமாய கி. பி. 1505ஆம் ஆண்டுக்கு பிந்தியதே இதன் காலம் எனலாம்.