Menu

வண்ணைவைத்தீசர் ஒருதுறைக்கோவை

ஆசிரியர்: வைத்தியலிங்கம்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1913

மிழ் மொழியினிலிருக்கும் சிற்றிலக்கியங்கள் 96 இல் கோவை இலக்கியமும் ஒன்று. அகப்பொருள் இலக்கியங்கள் எல்லாம் இக்கோவைத் துறையுனுள் அமையும். அவற்றினுள்ளே “நாணிக்கண் புதைத்தல்” எனும் ஒரு துறையை மட்டும் கொண்டு தோன்றியதே ஒருதுறைக் கோவையாம்.

வண்ணார்பண்ணையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் வண்ணை வைத்தீசுவரப் பெருமானை உள்ளத்திலே யிருத்தி வண்ணைநகர் வைத்தியலிங்கபிள்ளை அவர்கள் செய்த ஒருதுறைக்கோவையே வண்ணை வைத்தீசுவரர் ஒரு துறைக்கோவையாம். ஒருதுறைக்கோவை பற்றி வைத்தியலிங்கம்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்கள்.

இத்துறைமேற் புலவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு செய்யுளே பாடிப் போயினர். அமிர்தகவிராயர் நானூறு பாடல் பாடியதும் இத்துறையேயாம். பரகவியாகிய அவர்க்கு அஃதரிதன்று. நம்போன்றார்க்கு அரிதினும் அரிதாம்.

நாணிக்கண்புதைத்தல் எனும் துறைபற்றி பினவருமாறு கூறுகின்றார்.

ஒத்தகுலமும், ஒத்தபருவமும், ஒத்தநலமும், ஒத்தகுணமுமுடையாராகிய ஒரு கோமகனும் ஒரு கன்னிகையும் தத்தம் பரிவாரஞ்சூழப் புறப்பட்டுத் தெய்வச்செயலாய் ஒரு பூஞ்சோலையை யடைந்தனர். அங்கே இருவரும் தமியராய்த் தெய்வச் செயலின்வழி எதிர்ப்பட் டொருவரையொருவர் நோக்கினர். நோக்கினவளவில் இருவர்மாட்டும் கழிபெருங் காதலுண்டாவதாயிற்று. இளங்குமரன் கண்டு இவள் தெய்வமாதோவென்று ஐயுற்றுப் பின் மாநுடமகளெனத் துணிந்து, அவள் குறிப்புணர்ந்து தன்வசமின்றிக் கலந்து, பலதுறைப்பட்ட அன்பின் செய்திகளை நிகழ்த்தினன். இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாராயினும், பரிவாரமறியாது களவிலொழுகுவதன்றி வெளிப்படவொழுகுதலை தவிர்த்தனர். மெய்தொட்டுப் பயிலுவர். புனைந்துரைப்பர். இடம்பெற்றுத் தழுவுவர். தலைவன் வழிபாடு செய்வன். தலைவி மறுப்பள். தலைவன் அவள் கூட்டத்தை விரும்புவன். தலைவி மறுத்து நாணத்தாற் றனது கண்களை பொத்துவள். இதுவே நாணிக்கண்புதைத்த லென்னும் துறையாம்.

பெரும்பாலும் புலவர்கள் இத்துறையில் ஒவ்வொரு செய்யுளே பாடிப்போவார்கள். இவ் வண்ணைவைத்தீசர் ஒருதுறைக்கோவையோ சொற்சுவை பொருட்சுவையோடு யாப்பணி தோன்ற அற்புத நவரச அலங்காரங்களமைந்த நூறு கட்டளைக்கலித்துறைகளால் அமைந்து சிறந்திருக்கின்றது. அகத்திணைப்பாடல்கள் விரும்பி கற்போருக்கு இந்நூல் ஒரு பெருவிருந்தாயமையும். இந்நூலின் சிறப்பை பின்வரும் பாடல் சொல்லிநிற்கும்.

துறையொன்றினினூறு கவியமைந்துக் காசினியொர் துதித்துநிற்பத்
துறையின்றுதந்தனை நீயமிழ்தனைய தமிழ்மொழியிற் றுலங்குகல்வித்
துறைநன்றுகடந்தநின் பெரும்புலமை யென்னென்பேன் சுத்தசைவத்
துறைசென்று திளைக்கும் வைதியலிங்கநாவலனாந் தூய்மையோனே

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் கனிஷ்ட புத்திரர் சி. வை. சின்னப்பாபிள்ளை, பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை யவர்கள், சைவப்பிரகாச வித்தியாசாலை ஆசிரியர் கிருஷ்ணப்பிள்ளையவர்கள், வண்ணைநகர் நாகமுத்துப்பிள்ளையவர்கள், இணுவில் பாஸ்கர ஞானோதய சைவகலாசாலைத் தலைமை ஆசிரியர் வைத்தியலிங்க பிள்ளையவர்கள், சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர்கள், நாவலர்கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை ஆகியோர் இந்நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்திருக்கின்றார்கள்.

குமாரசுவாமிப்புலவர் அவர்கள் செய்த விருத்தத்தை கீழே பாருங்கள்.

நானூறு மொருதுறையாய் வருங்கோவைக் கிணையென்று ஞாலங் கொள்ளத்
தானூறு செய்யுளொரு துறையமைய வொருகோவை தானுந் தந்தான்
கானூறு குவளைமலவர் புனைமார்பன் செந்தமிழ்சேர் கலைகள் வல்லோன்
தேனூறு பொழில்வண்ணை நகரவயித் தியலிங்கச் செல்வன் மாதோ.