Menu

வண்ணையந்தாதி சிங்கைநகரந்தாதி

ஆசிரியர்: சி. ந. சதாசிவபண்டிதர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1887

ண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி, சித்திரக்கவிகள் என்பன யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை சி. ந. சதாசிவபண்டிதர் அவர்களாலே செய்யப்பட்ட நூற்கள். அவற்றை பண்டிதர் அவர்கள் ஒரே நூாலாக 1887ம் வருடம் சிங்கப்பூரில் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

வண்ணையந்தாதியும் வண்ணைநகரூஞ்சலும் நாச்சிமார் கோயில் எனப்படுகின்ற வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் மீதும் சிங்கைநகரந்தாதியும், சித்திரக்கவிகளும் சிங்கப்பூரில் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியப்பெருமான் மீதும் பாடப்பட்டவை. இந்நூலிற்கு சிதம்பரம் அப்பியாசமட தலைவர் முத்துக்குமாரசுவாமிகளும், வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் மாணாக்கர் செல்லையர் அவர்களும் சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள்.

வண்ணையந்தாதி காப்புச்செய்யுள் ஐந்தும் நூலில் ஐம்பது அந்தாதிச் செய்யுள்களும் வாழிச் செய்யுள் ஒன்றும் கொண்டு இருவிகற்ப நேரிசை வெண்பாக்களினால் அந்தாதியாய் அமைந்துள்ளது. இதினின்று சில வெண்பாக்களை கீழே காணுங்கள்.

சீராருஞ் செல்வி திகழ்வண்ணைக் காமாட்சி
காராரும் பூஞ்சோலைக் கற்பகமே – நேராருங்
காமாட்சி யீஸ்வரியே காஞ்சிபுர மெய்ப்பொருளே
காமாட்சி தந்தருள்வாய் காண்.

காண்டற் கரியவண்ணைக் காமாட்சி யீஸ்வரியே
வேண்டி யுனைப்பணிய விண்ணவர்க – ளீண்டியிங்ஙன்
வந்துநிதம் போவரெனின் மாநிலத்தோர் செய்கையினை
யெந்தவிதஞ் சொல்வே னிணைத்து.

வண்ணைநகரூஞ்சல் குறள் வெண்பாவால் அமைந்த தேவி மகத்துவமும், காப்பும், பன்னிரு ஊஞ்சற் பாடல்களும், எச்சரீக்கை, பராக்கு மற்றும் மங்களப் பாடலும் கொண்டு அமைந்திருக்கன்றன. இதன் காப்புச் செய்யுளை கீழே காணுங்கள்.

சீர்கொண்ட பலமணியுண்டாகி மின்னுஞ்
    செம்மைதிக ழீழவள நாட்டி னோர்பால்
நீர்கொண்ட செந்நெல்வயல் வண்ணை வாழும்
    நிலைவிளங்கு காமாட்சி யூஞ்சல் பாட
ஏர்கொண்ட பொன்னுலகை யாளு மிந்த்ர
    னிமையவரோ டெல்லோரும் வணங்கி வாழ்த்துங்
கார்கொண்ட திருக்கரங்க ளைந்து பெற்ற
    கணபதிதா ளெந்நாளுங் காப்ப தாமே.

சிங்கைநகரந்தாதி காப்பு, நூற்பயன், அவையடக்கம், ஆக்கியோன் பெயர் நீங்கலாக நூறு கட்டளைக் கலித்துறைகளை கொண்டுள்ளது. இந்நூலைப் படிப்போர் எப்போதும் மங்களத்தோடு இருப்பார்கள் என இதன் நூற்பயன் கூறும்.

முத்திதரும் பத்திதரு மும்மலத்தை யோட்டுமருட்
சத்திதருஞ் சண்முகனைச் சார்விக்குஞ் – சித்திதருஞ்
சிங்கைநக ரந்தாதி சிந்தையிலே வைப்போர்கண்
மங்களமோ டெங்கணும்வாழ் வார்.

சித்திரக்கவிகள்; மாலைமாற்று வெண்பா, அஷ்டநாகவெண்பா, துவிநாகவிருத்தம், இரதவெண்பா, கமலவெண்பா, சதுரங்க வெண்பா, துவிவெண்பா, நிரனிறைக்கட்டளைக்கலித்துறை, திரிவெண்பா, கரந்துறை வெண்பா, தனுவெண்பா, வினாவிடைவெண்பா போன்றவற்றால் அமைந்திருக்கின்றன. கீழே அஷ்டநாகவெண்பாவால் அமைந்த செய்யுளை காணுங்கள்.

நீதா குகாதே சிகனியம சாதனா
தாதா ளதித தனிவாகை – போதக்
களப புளகிதவா காகுமரா சிங்கை
வளவா கதிர்வேல வா.