வண்ணைச்சிலேடை வெண்பா

ஆசிரியர்: மாணிக்கத்தியாகராச பண்டிதர்
பதிப்பாசிரியர்: பண்டிதர் மா. குமாரசுவாமி
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1989

சுன்னாகம் மாணிக்கத்தியாகராச பண்டிதர் வண்ணார்பண்ணையிலே எழுந்தருளியிருக்கின்ற வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமான் மீது வெண்பாக்களினாலே செய்த நூலே வண்ணைச் சிலேடை வெண்பா. (வேலணை பேரம்பலப்புலவரும் ஒரு வண்ணைச் சிலேடை வெண்பா செய்திருக்கிறார்கள்.)

மாவை. நவநீதகிருஸ்ண பாரதியார் இந்நூலுக்கு வெண்பாவால் சாற்றுகவி சொல்லியிருக்கிறார்கள்.

எந்தை கதிர்காமத் தெம்மான் திறல்பாடி
முந்தை வினைதீர்க்கு மூதறிஞன் – சந்தமிகுந்
தேனா ரிசைப்புலவன் தேர்தியாக ராஜனெனு
மானா பரணன் மதித்து.

யாழுந் துறைத்தமிழும் யாணர்த் திருநெறியுஞ்
சூழும்யாழ்ப் பாணத்துத் தொல்வண்ணை – வாழுமரன்
பொன்னா ரடிக்கே புனைந்தான் சிலேடைவெண்பா
நன்னா வலர்நயக்க நன்கு.

என்று நூலாசிரியர் பெயரையும் பாட்டுடைத் தலைவனையும் கூறிநிற்பார்.

அகவற்பாவால் சிறப்புப் பாயிரம் சொன்னவர் வித்துவ சிரோமணி கணேசையர் அவர்கள். பாயிரம் சொன்னவர் பிரபல வைத்தியரும் சித்தாந்த வித்தகருமாகிய ஏழானை ஐ. பொன்னையா அவர்கள்.

தும்பிமுகன் தம்பியுமை சோமேசன் வாணிகுரு
நம்பியுள முள்ளுருகி நாடுவேன் – அம்புவியில்
மன்னி விளங்கவுயர் வண்ணைச் சிலேடை வெண்பா
என்னிதயத் தேயிருத்தி யே.

என்கின்ற காப்புச்செய்யுளோடு ஆரம்பித்து நாற்பத்தொரு வெண்பாக்களினாலே இந்நூல் செய்யப்பட்டிருக்கின்றது. சில செய்யுட்களை கீழே காணுங்கள்

தேசுமட வார்பதத்தும் செவ்வீரர் தங்கரத்தும்
மாசிலம்பு சேருமெழில் வண்ணையே – பாசிலங்கு
தங்கமலைக் கையார் தகுமன்பி னார்தமனந்
தங்கமலைக் கையார் தலம்.

வண்டூர் மரைக்கணத்தும் வாள்வேந்தர் போர்க்களத்தும்
மண்டூடகஞ் சேருமெழில் வண்ணையே – தொண்டூரு
மஞ்சக் கரத்தா னனுதினமுந் தோத்திரிக்கு
மஞ்சக் கரத்தா னகம்

இந்நூலை பண்டிதரின் புதல்வர் பண்டிதர் மா. குமாரசுவாமி அவர்கள் 1989ம் வருடம் அச்சிடுவித்து வெளியிட்டார்கள்.