வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.

ஆசிரியர்: கணபதிஐயர்
உசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

ட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல் அவ்வூரைச்சேர்ந்த கணபதிஐயராற் செய்யப்பட்ட தென்பர். இது எண்சீர் விருத்தப் பாக்கள் பத்துக் கொண்டு விளங்குகின்றது. அவற்றுள் முதல் விருத்தங் காப்புச் செய்யுளாகவும், இறுதி விருத்தம் வாழிகூறும் செய்யுளாகவுமமைய, ஏனைய எட்டும் ‘ஆடீ ரூஞ்சல்” எனப் பத்திரகாளியம்மையின் புகழ்கூறி ஊஞ்சலாட்டுவனவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு விருத்தத்தின் பின்னும் பத்திரகாளியம்மைக்கான வெவ்வேறு நிவேதனப்பொருள்கள் அச்சான பிரதிகளிற் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிட்டியம்பதியிற் பத்திரகாளியம்மை சமேதரராய் வீரபத்திரக் கடவுளும் கோயில்கொண்டெழுந்தருளியுள்ளார். அதனாற் கணபதிஐயர் அவ் வீரபத்திரர் பேரிலும் பத்திரகாளியம்மை பேரிலும் பதிகங்கள் பாடியுள்ளாரென்பர். அவையிப்பொழுது சிதைந்துபோய் இரண்டொரு பாடல்களே கிடைக்கக் கூடியனவாயுள்ளன. அப்பாடல்களும் அப்பதிகங்களுக்குரியன வெனத் தெரியவில்லை.

இவ்வூஞ்சல் 18ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதிக்குரியதென்று கொள்வது பொருந்தும்.