Menu

யேசுமத சங்கற்ப நிராகரணம்

ஆசிரியர்: சபாபதி நாவலர்
எழுதப்பட்ட வருடம்: 1879
பதிப்பாசிரியர்: சிற். கைலாசபிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1882

யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதி நாவலர் அவர்கள் ஆறுமுக நாவலரின் காலத்தில் உருவான சைவசித்தாந்த மறுமலர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர். சைவசித்தாந்தம் ஒன்றையே மெய்மையாக் கருதி வாழ்ந்தவர். வைதிக சமயங்கள் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இவர் சைவசித்தாந்தம் ஒன்றே மெய்மையென்று தர்க்கத்தினாற் சொல்லி யாத்த நூலே யேசுமத சங்கற்ப நிராகரணம் எனும் நூலாம். இதனை சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் பின்வரும் சிறப்புப் பாயிரச் செய்யுள்களா லறியலாம்.

சுத்தசைவ சித்தாந்த நீடுறைக் கடற்படிந்து
மெய்த்தவைந் தெழுத்தே பொருளெனக் கொண்டமேலோன்
தத்துவத்திய றெரிந்தவன் றமிழ்வட மொழிதேர்
வித்துவான் சபைகளுக்கொரு பதியென மிளிர்வோன்

சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப்
பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப
மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனூல்
தெய்வஞா யிறொன் றெழுந்தெனத் திகழ்ந்ததையன்றே.

இந்நூல் கிறீத்துவ மத கொள்கைகளை கூறும் யேசுவாதி சங்கற்பம் என்ற அதிகாரத்தில் முப்பத்திரண்டு பாடல்களையும் அவற்றை நியாயத்தால் மறுத்துரைக்கும் யேசுவாதி சங்கற்ப நிராகரணம் என்ற அதிகாரத்தில் 151 பாடல்களையும், தற்சிறப்புப்பாயிரம் ஒன்றினையும் நூல்வரலாறு பதின்னான்கும் கொண்டு மொத்தமாய் 198 செய்யுள்கள் கொண்டமைந்திருக்கின்றது. சைவசித்தாந்தமே மேற்சமயாய் வீற்றிருக்கும் என்று கூறுகிறது இந்நூல்வரலாறு.

திருவிளங்கு வேதாகமச் செம்பொரு டெளித்துக்
கருவிளங்கு பல்லுயிர்க்கு நற்கதியினைக் காட்டிப்
பொருள்விளங்கு சித்தாந்த மெஞ்ஞான்றுமிப் புவியில்
லருள்விளங்கு மேற்சமயமா யரசுவீற்றி ருக்கும்.

கீழே யேசுவாதி சங்கற்ப அதிகாரத்திலிருந்து ஒரு பாடலை கீழே காணுங்கள்.

பற்பலவூர்தொறும் புக்குப்பயின்றினிய மொழியினால் யார்க்குமேற்ற
கற்புரையினுய்யு நெறிகடைப்பிடிக்க வுபதேசித்தி றைமைதேற
வற்புதங்களாண்டா ண்டுகாட்புபே துருவாதிய துலஞானப்
பொற்புமிகுசீடர்களை யாய்ந்தெடுத்துப் போதகா சிரியராக்கி. (25)

இந்நூலுக்கு சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் சபாபதி நாவலரவர்களுடைய மாணாக்கர் ச. சிவப்பிரகாசபிள்ளையும் சிறப்புப் பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள். 1879ம் வருடம் இயற்றப்பெற்ற இந்நூலை நல்லூர் சிற். கைலாசபிள்ளை அவர்கள் 1882ம் வருடம் அச்சிட்டு வெளியிடுவித்தார்கள்.