Menu

மாவை யமக அந்தாதி

ஆசிரியர்: பூ. பொன்னம்பலபிள்ளை
பதிப்பாசிரியர்: 1888

சைவமும் தமிழும் தனிநடமிடும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் மாவிட்டபுரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மீது பூ. பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் நூறு பாடல்கள் கொண்டு எழுதிய அந்தாதியே மாவை யமக அந்தாதியாம். இதனை யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப்பிள்ளை சொன்ன செய்யுளாலறியலாம்.

அரசர்கை யால்இலங் கைநாயகமுத லிப்பெயர்க்கோத்
திரவுரித் தாற்பெற்றோர் தம்பியாந் தாமோ தரமுதலி
பிரபேளத் திரன்பூ தப்பிள்ளை சுதன் தெல்லிப் பொன்னம்பலம்
பரகுக னாமம் புகன்மாவை யந்தாதி பாடினனே.

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த கல்வளையந்தாதியில் கல்வளை எனும் சொல் யமகமாயமைந்திருத்தல் போலவே மாவை என்கின்ற சொல் இவ்வந்தாதியில் யமகமாய் அமைந்திருத்தல் காணலாம்.

மாவைய மாவைய முப்புரஞ் செற்றவர் மைந்ததரு
மாவைய மாவைய தாக்கிற் கடிகை வரைநிலைக்கு
மாவைய மாவைய மன்கொள வூண்ஞம லிந்நரிக்கா
மாவைய மாவைய வீதோநா னென்று வருந்தினனே. (௧௧)

இவ்வந்தாதியில் 99 பாடல்களில் முதலிரண்டு சீரிலும் மடக்கணி அமைந்துள்ளதோடு ஒரு பாடலில் முதல் நான்கு சீரிலும் மடக்கணி அமைந்துள்ளது.

கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காயொலிநே
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுமாவைக்
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காண்கிலக்கீ
கந்தரங் கந்தரங் கந்தரங் கந்தரங் காட்டுவரே. (௪௭)

இதற்கு உரையாசிரியர் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு உரை சொல்கிறார்கள்.

கந்து – பலவாச்சியங்கள் முழங்கும், அரங்கு – தேவசபையில், அந்தரம் கந்தரம் – தேவகாந்தாரமென்னும் இசையை, கந்தர் – கந்தருவர், ஆங்கு ஆய் ஒலி – அவ்விடத்தே ஆராயும் இசையோசைகள், அநேகம் – பலவாகவுடைய, தரங்கம் – அலைகள், தரம் – மலைபோல் எழுந்து, கம்தரங்கு – வான் செல்லுதற்கு வழியிது என்று, அந்தரம் காட்டும் – மேனோக்கிக் காட்டும், மாவைக்கந்தர் – மாவைப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற முருகக்கடவுள், அங்கம் – உடல் முதலியனவும், தரம் – மனைநிலம் பொன் முதலியனவும், கந்து – கெடுகின்ற, அரு அங்கு – அரிய நிலைமையாகிய அப்பொழுதில், அந்தரம் – நிலையாது கெடுவதை, காண்கில் – கண்டு தம்மை நிரந்தரமாக அடையின் அடைபவர்க்கு, அக்கு – உருத்திரக் கண்மணியும், கம் – தேவர் பொருட்டு, ஈ – அவர்கள் கொடுத்த, தரம் – நஞ்சினையுண்டு தரித்த, கந்தர் – கழுத்தையுமுடைய, கந்தர் – எப்பொருட்டும் கருத்தராயுள்ள சிவபெருமான் உபதேசிக்கப்பெற்ற, அந்தரம் – மறைமுடிவான நுண்பொருளை, காட்டுவர் – காட்டியருளுவார்.

கந்தர் அந்தரம் சுந்தரம் அங்கு ஆய் ஒலி அநேகமுடைய மாவையெனவும், தரங்கம் சும்தரங்கு(என்று) காட்டும் மாவையெனவும் இயையும். கத்து – கந்து என மெலிந்து. காந்தாரம், கந்தரம் எனக் குறுகிற்று. தரங்கு, வழி கந்துதல், கெடுதல். கருத்தர் என்னும் சொல்லின் சிதைவாகிய கத்தர் என்பது கந்தர் என மலிந்தது. கந்தர் என்றே கொண்டு எப்பொருட்டும் பற்றுக்கொடாயுள்ள இறைவர் என்று உரைப்பினுமாம்.

1888ம் வருடம் பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் மாவையந்தாதி எனும் பெயரில் இதனை அச்சிட்டு வெளியிட்டார்கள். இதனை பின்னர் அவரது மருகர் அ.சின்னத்தம்பி அவர்கள் 1940 இலும், 1977ம் வருடம் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்களுடைய உரையுடனும் பதிப்பித்து வெளியிட்டார்கள். இவ்வந்தாதியில் முதலாம் எழுத்து முதல் பல எழுத்துக்களும் ஒன்றுபட்டு அமைந்து யமகமா யிருத்தல் கண்டு 1977ம் பதிப்பில் இது மாவை யமக அந்தாதி எனும் பெயருடன் பதிக்கப்பெற்றிருக்கின்றது.