மறைசையந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரால் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக்கலித்துறை யாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடாரை புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்றமடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை தழுவித் தலைவி, தோழி, தலைவன் ஆகியோர் கூற்றுக்களாக அமைந்த பாடல்களும் பல உள. இதன் நூற்சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ள
செந்தா தியன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்துச்
சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்
நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே
என்னும் செய்யுள், இதனை ஆக்கியோன் நல்லூர் வில்லவராயன் புதல்வன் சின்னத்தம்பி நாவலன் என்று தெரிவிக்கும். இந் நூற் சிறப்புப்பாயிரமளித்தவர் யாழ்ப்பாணம் வரதராசக் கவிராசர் என யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் பதிப்பிற் காணப்படுகின்றது.
கீழே இன்னூலின்றும் ஒரு பாடலைக் கண்டு சுவையுங்கள்
சித்திரவன்னிக ருங்கொங்கைபங்கர்செற் றார்புரமூன்
றத்திரவன்னிக் கருணகையார்கதிட மாகமநூன்
மித்திரவன்னியும் பூவையுங்கேட்டு வியந்துரைக்கும்
பத்திரவன்னி மரஞ்சேர் மறைசைப் பதியகமே.
சித்திரவல் நிகரும் கொங்கைபங்கர் – அழகிய சூதாடுகருவியையொத்த தனத்தினையுடைய உமாதேவியாரைப் பாதித் திருமேனியிலுடையவராகிய
செற்றாபுரம் மூன்று அத்திரவன்னிக்கு அருள்நகையார் – பகைவரது திரிபுரத்தைத் தமது அம்பின்முனையாகிய அக்கினிகொள்ளும்படி செய்தருளிய நகையினையுடைய சிவபெருமானுக்கு
இடம் – இடமாவது
ஆகமநூல் மித்திரவன்னியும் பூவையும் கெட்டு வியந்துஉரைக்கும் – சிவாகமநூல்களை நட்பினையுடைய கிளிகளும், நாகணவாய்ப்புட்களும் (பெரியோர் சொல்லக்) கேட்டதிசயித்துத் தாமும் சொல்லப்பெற்ற
பத்திரவன்னிமரஞ்சேர் மறைசைப்பதி அகமே -இலைகளையுடைய வன்னிவிருட்சங்கள் சூழப்பெற்ற திருமறைக்காடென்னும் திருப்பதியாகிய தானமேயாம்.