மறைசைக் கலம்பகம்

ஆசிரியர்: பீதாம்பரப்புலவர்
பதிப்பாசிரியர்: முத்துக்குமாரப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1883

வேதாரணீயம் என்னும் பெயருடைய திருமறைக்காட்டிலே எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் சிவபெருமானை துதிசெய்யும் கலம்பகமே மறைசைக் கலம்பகம் எனும் நூலாகும். கடவுளார்க்கு நூறு பாடல்கள் என்ற கலம்பக விதிக்கமைய நூறு பலவகைப்பட்ட பாடல்களால் அமைந்திருக்கிறது மறைசைக் கலம்பகம். இதனை வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் சிறப்புக் கவியாலறியலாம்.

சீர்கொண்ட நீர்வையெனும் பதியனுயர்
செழுந்தமிழின் செல்வன் வாய்த்த
பார்கொண்ட புகழினன்பீ தாம்பரவே
ளெனும்புலவன் பசும்பொற் கொன்றைத்
தார்கொண்ட சடையனமர் மறைசையாந்
தலத்தினருங் கலம்ப கத்தைப்
பேர்கொண்ட பாவாணர் பெட்புடனாய்ந்
திடவினிதிற் பேசி னானே.

யாழ்ப்பாணத்து நீர்வேலி பீதாம்பரப்புலவர் இயற்றிய இந்த கலம்பகத்தை அவருடைய மூத்த புதல்வர் முத்துக்குமாரப்பிள்ளை 1883ம் வருடம் அச்சிடுவித்து வெளியிட்டார்கள்.

இந்நூலுக்கு காப்புவிருத்தி செய்தவர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் அவர்கள். சிறப்புப் பாயிரம் செய்தவர் சிவசங்கர பண்டிதரிடம் சமஸ்கிருதமும் பீதாம்பரப்புலவரிடத்து செந்தமிழும் கற்றுக்கொண்ட சந்திரசேகரக் குருக்கள். கீரிமலைச் சிவன்கோயில் சபாபதிக்குருக்கள், சி. வை. தாமோதரம்பிள்ளை, வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலை சுந்தரம்பிள்ளை மற்றும் பலரும் இந்நூலுக்கு சிறப்புக் கவிகள் சொல்லியிருக்கிறார்கள்.

கலம்பகப் பாடல்கள் சிலவற்றை கீழே காணுங்கள்.

[கட்டளைக்கலித்துறை]
கஞ்சன் றலைமண்டை யோடாமை யோடு களத்தணிந்தான்
மிஞ்சன் றலைவிட முண்டான் மறைநகர் வெற்பினிற்கோ
வஞ்சன் றலைநல்கு மன்னமின் னேமயி லாடினகார்
மஞ்சன் றலைநிகர் நின்னோதி தன்னின் மகிழ்வுறவே. (௬௫)

[புலம்பல்-அறுசீர்-விருத்தம்]
வேதம டைந்தனை நாதநி றைந்தனை மேல்வளை யுந்தினைவெம்
பாதம லிந்தனை பாயலை விண்டனை பாரில டங்கிலையா
னாதனை நம்பனை மாதொரு பாங்கனை நான்மறை யம்பதிவா
ழாதிய கண்டனை நீயும்வி ரும்பினை யாகுமை யம்பரமே (௬௬)

[நேரிசைவெண்பா]
அம்பரத்தார் வேழவன வாரணநாட் டானமுத
வம்பரத்தான் மைந்த னடுத்தேவு – மம்பு
சருவாதை யோகத்திற் சார்ந்தான்றாட் கஞ்ச
மருவாதை யோநெஞ்ச வண்டு. (௬௭)