மயிலை மும்மணிமாலை

ஆசிரியர்: க. மயில்வாகனப் புலவர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1897

யாழ்ப்பாணத்து வடபால் மயிலிட்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற விநாயகப் பெருமான் மீது க. மயில்வாகனப்புலவர் செய்த நூலே மயிலை மும்மணிமாலை. காங்கேசன் துறையிலே புலவரவர்கள் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இந்நூலினைச் செய்து 1897ம் வருடம் அச்சுவேலி ஞானப்பிரகாச அச்சகத்தில் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

சீரார் மயிலைக் கணபதி மீது செழுந்தமிழாற்
பாரார் புகழ்பெறு மும்மணி மாலை பணிந்தணிய
வாரார் முலைக்குற வள்ளியை வேள்பெற வந்துதவுங்
காரார் கரிமுகப் பிள்ளை திருவடி காப்பதுவே

என்ற காப்புச் செய்யுளோடு ஆரம்பித்து, மும்மணிமாலை நூல்களின் இலக்கணத்திற்கமைவாய் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் கொண்டு அந்தாதியாய் முப்பது பாடல்களில் அமைந்திருக்கின்றது இந்நூல். சில பாடல்களில் விநாயகப் பெருமானிடம் விமோசனம் வேண்டியும், சிலவற்றில் விநாயகப் பெருமானின் பெருமைகள் கூறியும், ஏனையவற்றில் விநாயகனை வணங்கினால் பேறும் பெறுகள் பறற்றியும் இம்மும்மணிமாலை கூறிநிற்கின்றது. கீழே நூலிலிருந்து சில பாடல்களை காணுங்கள்.

அகவல்
பித்தன் மகனமக் கெத்தவத் தருள்வான்
மித்தைக் குரித்தென் றித்திறம் புகலுன
மத்தர் காணவென் மம்ம ரகற்றாய்
பத்தரார் மயிலைப் பதியமர் முக்கணா
நித்த மனத்தி னிமைப்பவர் தமக்குச்
சித்தி புத்தி சிறந்தரு டேவே. (3)

வெண்பா
தேவா தமைக்காப்பச் சீறுங் கயமுகனைத்
தாவித் தடிந்த தனிப்புதல்வன் – மேவிவளர்
தண்மயிலைத் தேவன் றனைச்சூழ்ந்து போற்றுதற்கு
நண்ணுறுமோ யாக்கை நயந்து (4)

கலித்துறை
இயம்பு முறையறஞ் செய்தே மலர்க ளிடவறியேன்
ஞயம்படத் தீவினை நீக்கறி யேனிரு ணண்ணுலகிற்
குயம்படு மாதர் மயக்கில் வருந்துங் கொடியவனான்
சயம்பெறு மோர்வழி யுண்டோ மயிலையிற் றற்பரனே. (14)