Menu

புலியூர்ப் புராணம்

ஆசிரியர்: வித்துவான் சிவானந்தையர்
பதிப்பாசிரியர்: ஏழாலை ஐ. பொன்னையாபிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1936

புலியூர் என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்திலே இருக்கின்ற நடராஜப் பெருமானுடைய பெருமைகளை சொல்லி பாடப்பட்டதே புலியூர்ப் புராணம். இப்புராணத்தை பாடியவர் தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையர்.

சிவானந்தையர் அவர்கள் சிதம்பரத்திலே இருந்த பச்சையப்பன் கலாசாலை என அழைக்கப்பட்ட ஆங்கில பாடசாலையிலே தமிழ்ப் பண்டிதராக இருந்த சிலகாலம் தமிழ் கற்பித்து வந்தார். அப்பொழுது மாலை வேளைகளில் நடராஜப்பெருமானை சென்று தரிசித்து வரும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். அக்காலத்திலே நடராஜப் பெருமான் மீது கொண்டு பக்தியினாலே புலியூர் யமகஅந்தாதி எனும் ஒரு அந்தாதியினை பாடினார். அதனை சிதம்பரம் நீங்கி மீண்டும் யாழப்பாணம் வந்து தம் ஊரிலே இருந்த காலத்தே, தமிழறிஞரும் சட்டநூலறிஞருமாய் விழங்கிய இவரது நண்பர் க. தம்பையாப்பிள்ளை அவர்களிடத்தே காண்பித்தார். தம்பையாப்பிள்ளை அவர்களும் ஐயரவர்களுடைய பாடற்றிறமையை வியந்து, இத்தலத்தின் மேல் ஒரு புராணம் பாடின் அது தங்கள் பிறந்த திசைக்கு பெரும்புகழாகும் என்று வேண்டிக் கொண்டார். அதற்குடன்பட்டு ஐயரவர்களும் புலியூர்ப் புராணத்தை பாடினார்.

அதனை அவையடக்கத்துள்

நலமுறு பன்னூ லாய்ந்து நயந்திடு முணர்வி னோடு
மலைவறு சைவ நுலின் வாய்மைநன் குணர்ந்த சீரான்
குலமுறு குடிக ளோங்கிக் குலவிய வீணா கானத்
தலமுறு தெல்லி யாளுந் தம்பைய மகிபன் கேட்ப

பாடினேன் என கூறியிருத்தலால் அறியலாம்.

புலியூர்ப் புராணத்திற்கு முதனூல்களாக இருந்தவை சூதசங்கிதையும், வாசிட்டலிங்கமும், பவிடியோத்தரபுராணமும் மற்றும் காந்தமுமாம்.

இதனை பாயிரம் இவ்வாறு சொல்கிறது

ஒத நின்றபத் தொன்பதாம் படலங்க ளுள்ளுஞ்
சூத சங்கிதை யுட்படு முற்படச் சொல்லு
மேதந் தீர்வுறு மீராறு படலமு மென்பார்
மூதக் கோர்புகழ் வாசிட்ட லிங்கம்பன் மூன்றே

மன்று ளாடுவா ரூர்த்துவ தாண்டவ மாண்பு
நின்றி டும்பவி டியோத்தர புராணத்து நிகழ்ச்சி
நன்று பன்னைந்து காந்தத்து நவின்றது நயப்பா
டொன்று மேனைய நான்குமப் புராணத்து ளுறுமால்

இப்புராணத்துள் நாட்டுப்படலம் முதலியன ஒழியப் பத்தொன்பது படலங்களாக வகுத்துப் பாடியதாக ஐயரவர்கள் கூறியுள்ளார். இந்நூலை எழுதி முடிக்க முன்னரே அவர் தேகவியோகமாயினமையினாலோ அல்லது வேறு காரணத்தாலேயோ, இந்நூலை பதிப்பித்த ஏழாலை சுதேசவைத்தியர் ஐ. பொன்னையாபிள்ளை அவர்கள் பதினேழு படலங்களையே பதிப்பித்திருக்கின்றார்.

செய்யுட்களை நயம்பட புனைந்து பாடும் சிவானந்தையர் அவர்களின் திறனை வியந்து நோக்க கீழிருக்கும் செய்யுளை நோக்குவோம்.

ஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின் ரழிப்பார்
தேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சிதைப்பார்
சாம்பு மெல்லியர் மகளிரென் றுரைப்பது சழக்கோ
நாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலோ நவிற்றீர்.

இச்செய்யுளில் உழத்தியர்கள் பற்பல ஆம்பல்களை ஒரு கையாற் பற்றி அழிப்பார்கள். அது மாத்திரமோ புண்டரீகங்கள் பற்பலவற்றையும் ஒரு கையாற் பற்றி அழித்துவிடுவார்கள். இங்ஙனம் ஆம்பல்களையும் புண்டரீகங்களையும் அழிக்கும் வலியோர்களாகிய உழத்தியர்களை மெல்லியர்கள் என்று கூறுவது பொய்யோ அல்லது நாம் புகன்றது பொய்யுரையாமோ சொல்வீர். என்னும் பொருளில் ஆம்பல் புண்டரீகம் என்பனவற்றை முறையே தொனியானே யானைகள் எனவும் புலிகள் எனவும் பொருள்பட வைத்து அதனாலே பெண்களுக்கு வலிமையைக் கற்பித்து அதனாலே பெண்களை மெல்லியர் என்று கூறும் வழக்கை பொய்யெனக் கற்பித்துக் கூறியது மிகவும் இன்பம் பயப்பது.

இந்நூலை பூரணப்படுத்த முன்னரே ஐயர் அவர்கள் தேகவியோகமாகியிருந்தாலும், இந்நூற்பிரதியை அவர் இப்புராணத்தை பாட ஊக்குவித்த தம்பையாப்பிள்ளை அவர்களிடத்தே கொடுத்திருந்தார். பிள்ளையவர்களும் காத்திராப்பிரகாரம் தேகவியோகமாகிவிட பலகாலம் யாரும் அறியாது இப்புராணம் மறைந்திருந்தது. பின்னர் பிள்ளை அவர்களின் மனைவியார் பவளநாயகி அம்மையார் இதனை பதிப்பித்து தன் கணவர் நினைவாக வெளிப்படுத்தியிருந்தார்.

இப்புராணத்தை பதிப்பித்த போது அதற்கு சிறப்புப் பாயிரம் செய்தவர் சுன்னாகம் காவிய பாடசாலை தலைமை தமிழாசிரியராக இருந்த சி. கணேசையர் அவர்கள்.