பிள்ளையார் கதை

ஆசிரியர்: வரத பண்டிதர்
எழுதப்பட்ட வருடம்: 18ம் நூற்றாண்டு
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

பிள்ளையார் கதை “ஐங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மிய” முரைப்பதற்காக எழுந்ததென அதன் சிறப்புப் பாயிரங் கூறும். அகவல் யாப்பினாற் செய்யப்பட்ட இந் நூற்கான பொருள்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கவிதையி லுள்ள துவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டி

எடுக்கப்பட்டதெனவும், இதனைச் செய்தோன்

துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதன்

எனவும் அச்சிறப்புப்பாயிரத்தினால் அறியலாம்.

ஆனைமுகன் பிறந்த வரலாறும், அவன் கயமுகாசுரனை அழித்து மூஷிகத்தை வாகனமாக்கியதும், திருச்செங்காட்டின் சிவனை யர்ச்சித்துக் கணபதீச்சுர மாக்கியதும், ஆவணிச் சதுர்த்தி விரதச் சிறப்பும், மார்கழி விநாயக சஷ்டி விரத மகிமையும், விநாயகனை கருமத் தொடக்கத்தில் வணங்கவேண்டிய அவசியமும், சண்முகன் பிறந்த கதையும், திருமால் பாம்புருவானதும், கார்த்திகைக்குக் கார்த்திகையாந் திருக்கார்த்திகையின் பின்வரும் விரதச் சிறப்பும், அதனைப் பாம்புருவான திருமாலும் இலக்கணசுந்தரி என்பாளும் அனுஷ்டித்துச் சாப விமோசனம் பெற்றதும் இதிற் கூறப்படுகின்றன.

இதனை வரத பண்டிதர் செய்தமையால் இதுவும் 18ம் நூற்றாண்டுக்குரிதென்று கொள்ளலாம்.