பாற்கர சேதுபதி நான்மணிமாலை

ஆசிரியர்: சிவசம்புப் புலவர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1895

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி மகாவித்துவான் அ. சிவசம்புப் புலவர் அவர்கள் செந்தமிழ்மொழி அபிமான சீலரும் பெரும் புரவலருமாகிய இராமநாதபுரம் இரவிகுலமுத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி மகாராசாவின் மீது வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவற்பாவும் கொண்டு நான்மணி மாலையாக செய்த நூலே பாற்கர சேதுபதி நான்மணிமாலையாம். இந்நூலை புலவரவர்கள் மகாராசாவின் சமஸ்தானத்திலே அரங்கேற்றி பெரும்பரிசிலும் பெற்றவர்.

இந்நூல் இராமநாதபுரம் சமஸ்தான முத்திராக்ஷர சாலையில் 1895ம் வருடம் அச்சிடப்பெற்று வெளிவந்தது.

இதன் காப்புச்செய்யுள்கள் வருமாறு

மன்னியசீர்ப் பாற்கரனா மாராசற் கோர்மாலை
துன்னியிடு நான்மணியாய்ச் சூட்டுவிக்க – வென்னுளமேற்
கோவத் திரத்தான் குருமுன் னுதித்தமத
மாவத் திரத்தான் வரும்

பாலப் பருவமுதற் பட்டவற்றி லெல்லாமுற்
சாலப் பரிவினெனைத் தாங்கிநின்ற – வேலப்ப
னார்த்தியினார் நெஞ்சகலா வாறுமுகத் தேவேயிவ்
வார்த்திகநா ளுந்தாங்கு வான்.

இனி மாலையிலிருந்து சில மணிகள்

வெண்பா

திருமேவு மார்பினனோ சீரளகைக் கோனோ
தருமேவு நாட்டரசன் றானோ – குருமேவு
வேற்கரனைத் தாளிறைஞ்சி மெய்ப்பத்தி மேயபுகழ்ப்
பாற்கரனாஞ் சேது பதி.

கலித்துறை

பதியிற் சிறந்திடுந் தேவையை யின்புறப் பாலித்திடுந்
துதியிற் சிறந்தநம் பாற்கர சாமித் துரைவள்ளலால்
விதியிற் சிறந்த தருமமு மேதகு மெய்ச்சைவமு
மதியிற் சிறந்த தமிழும் பெரிது வளர்வனவே

விருத்தம்

வளந்திக ழிராம லிங்கமா விலாச மாளிகை கண்டவான் புலவ
ருளந்திகழ் களியி னுட்புகா வாங்ங னுறைதரும் பாற்கர வுரவோன்
றளந்திகழ் கமலத் துணைக்கண்கண் டிவன்வா சவனல னாகவண் சுதன்மை
யளந்திகழ் நரலை யளக்கரி னடைந்த தார்தவ மென்னவாய் வாரே.

அகவல்

ஆய்வது புனித வாகமக் கலையே
வீவது போனக மிரணியங் கலையே
யின்புறப் புரப்ப தெழில்வளத் தேவையே
யன்புறப் பணிவ தற்களத் தேவையே
யணிவ துருத்திர னக்கப் பணியே
தணிவறப் புரிவது தளித்திருப் பணியே
மனமுறச் செபிப்பது மந்திர மைந்தே
தினமுற வவிப்பது தெறும்புல மைந்தே
பூசுவ தமல புண்ணிய சாந்தமே
யேசற வணிவ தினியமெய்ச் சாந்தமே
சூற்கரு முகிலெனத் துலங்கும்
பாற்கர சேது பதிமா தவனே.