பறாளை விநாயகர் பள்ளு

ஆசிரியர்: சின்னத்தம்பிப் புலவர்

றாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த மற்றொரு நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளாய் என்னுந் தலத்தில் ஏழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகைய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக் கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப்பள்ளியாகவும், இளைய பள்ளி சோழமண்டல பள்ளியாகவும் காட்சியளித்து, ஈழநாட்டுப்பெருமையையும் சோழநாட்டுப்பெருமையையும் முறையே பேசிக்கொள்ளுகின்றார்கள்.

இந்நூலிற் காப்புச் செய்யுள் வழக்கத்துக்கு மாறாகக் ‘கண்ணனே காப்பு” என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது. அதன்பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றன. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்தபள்ளியை வேண்டல், மூத்தபள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் ஆண்டைக்கு கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்தபள்ளி யிரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.

சின்னத்தம்பிப் புலவர் பேரில் இந்நூல் வழங்குவதைத்தவிர இதனை அவர் செய்தா ரென்பதற்கான சான்றெதுவும் நூலகத்தில்லை. தன் தந்தையின் சகபாடியும் தன் காலத்து வாழ்ந்தவருமான சந்திரசேகர மானா முதலியென்ற பிரபுவை இவர் இந்நூலின் 121ஆவது செய்யுளில் வாழ்த்தி யிருப்பது, சின்னத்தம்பிப் புலவர் இந்நூலைச் செய்திருக்கலாமென்ற கருத்துக்குச் சாதகமாயுள்ளது.