பஞ்சவன்னத் தூது

ஆசிரியர்: சின்னத்தம்பிப் புலவர்
உசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

ஞ்சவன்னத் தூது இணுவைச் சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டதென்பர். இது இயற்றமிழ்ப் பாங்கும் நாடகத் தமிழ் முறையும் விரவச் செய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியக் கடவுள், வயிரவக் கடவுள், பத்திரை ஆகியோருக்கு வணக்கங் கூறித் தருவும் விருத்தமுங் கொண்டு நடக்கிறது. இடையிடையே கொச்சகக் கலிப்பாவும், இறுதி அகவலும் இடம் பெறுகின்றன.

காலிங்கராயனருள் பாலன் கயிலாயநாதன் இணுவையில் வீதியுலா வந்ததும், சந்திரமோகினி என்ற பெண் அவனைக் கண்டு காதல் கொண்டதும், அவல் வெண்ணிலாவையும், தென்றலையும், கிளியையும், அன்னத்தையும், தோழியையும் தூதனுப்பியதும், கயிலாயநாதன் அவளை மணந்துகொள்ளச் சம்மதித்ததாகத் தோழியிடஞ் சொல்லியனுப்பியதும் இதிற் கூறப்பட்டுள்ளன.

கயிலாயநாதனுக்கு இளந்தாரி யென்ற பெயருங் கூறப்பட்டுள்ளது. அவ் விளந்தாரி தென்னிணுவையூரை யென்றுங் காப்பவனாகக் காட்டப்பட்டிருக்கிறது. இணுவிலில் இளந்தாரி கோயில் உளது. அங்கு எழுந்தருளியிருக்கும் இளந்தாரியென்ற கைலாயநாதன் மீதே இத்தூது பாடப்பட்டிருக்கிற தென்பது, இன்றும் அங்கு விழாக்காலங்களில் இப்பாடல் பாடப்படுவதிலிருந்தறியலாம். இளந்தாரி கோயில் இணுவிலுக்கு மட்டுஞ் சிறப்பாக உரியதொன்றாகும்.

நதிக்குலத்தி லுதித்திடுகா லிங்க மன்னன்
நற்றவத்தாற் பெற்றசுதன் நவகண் டங்கள்
துதிக்குமிளந் தாரிகயி லாய நாத
துரை

என இந்நூலிற் காணப்படுவதால், இக்கயிலாயநாதன் கங்கைகுலத் துதித்த காலிங்கன் ஒருவனது சந்ததியினனெனத் தெரிகின்றது. மாகன் காலந் தொட்டுக் காலிங்க மன்னர்கள் யாழ்ப்பாணத்தி லரசுநடாத்தியவர்களாகையால், அவர்கள் சந்ததியிலுள்ள வீரனொருவனுக் கெழுந்ததாயிருக்கலா மிவ்விளந்தாரி கோயில்.