இந்நூலை வாசிக்க

Noolaham.org

மேலும் சில நூல்கள்

நியாய இலக்கணம் (Elements of Logic)

ஆசிரியர்: முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1850

ருக்க சாத்திரங்கள் வடமொழியில் நையாயிதம், வைசேடிகம், பிரமாணதீபிகை போன்ற பல நூற்களிலும் தமிழிலே அளவை, அளவைவிளக்கம் போன்ற பல பண்டைய நூல்களிலே திருத்தமாய் கூறப்பட்டிருப்பினும், மேலைத்தேய தருக்க சாத்திர நூல்களின் வருகை அவற்றை ஆழப்படுத்தியும் அதிவிரிவு படுத்தியுமிருந்தன.

இதனால் எம்பண்டைய தர்க்க சாத்திரங்களையும் மற்றும் புதிய மேலைத்தேய தர்க்க நூல்களையும் கற்றுத் தேர்ந்த அறிஞர் பலர் தமிழிலே புதிய தர்க்க சாத்திர நூல்களை செய்திருக்கிறார்கள். இவற்றுள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வில்லியம் நெவின்ஸ் என அழைக்கப்பட்ட முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை செய்த நூல் காலத்தால் முந்தியது. தொடர்ந்து தமிழிலே தர்க்க சாத்திர நூற்கள் வெளிவர அடித்தளமாயமைந்ததது.

நியாய இலக்கணத்தை எழுதுவதற்கு முக்கியதொரு காரணம் தர்க்க சாத்திரத்திலுள்ள புதிய ஆங்கிலச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொற்கள் இல்லாமையும் ஒரு காரணம் என நூலாசிரியர் பின்வருமாறு சொல்லுவார்.

There is also felt, among foreigners who speak the English language and have much to do with the natives, and among the natives who have been educated in European sciences, a deficiency in expressing the principles and conducting the process of reasoning in Tamil.

இதனை கருத்திற்கொண்டு ஆங்கில தொழிநுட்பச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் நூலின் ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றிற் சில சொற்களை நூலாசிரியரே உருவாக்கினார் என சுவாமி ஞானப்பிரகாசர் தான் பின்னர் எழுதிய தருக்கசாத்திர சுருக்கம் எனும் நூலிலே குறிப்பிட்டுள்ளார். கலித்துறைப்பாடல்களால் அமைந்திருக்கும் நியாய இலக்கணத்திற்கு பாடற் பொருட்களையும் நூலாசிரியரே எழுதியிருக்கின்றார். உவெற்றிலி என்பார் ஆங்கிலத்தில் எழுதிய தர்க்க நூலையே பெரிதும் ஆதாரமாய் இந்நூல் கொண்டிருப்பினும் தேவையான இடங்களிலெல்லாம் பண்டைத் தமிழ் நூல்களினின்றும், வடமொழி நூல்களினின்றும் கருத்துக்களை நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

நியாய இலக்கணம் என்கின்ற இந்த நூல் நியாயத்தின் நடைக்கு ஆதாரமாய் உலவுகின்ற இலக்கணங்களை ஆராய்கின்ற யுத்தித்தலின் கலையையும், புந்தி சுழலாமல் அனுமானஞ் செய்யும்படி விதிகளை ஆய்ந்து தருகின்ற யுத்தித்தலின் வித்தையையும் கூறும் என்று இதன் தற்சிறப்புப்பாயிரம் கூறும்.

உலகம்புகழு நியாய இலக்கணம்யுத்தியதன்
கலைவித்தையென்ப நியாய நடையினுக் காதரமாய
உலவுமிலக்கணமே தெளியுங்கலை வித்தையென்ப
தலமின்று புந்தி யனுமிக்கவே விதியாய்ந்திடுமே.

இந்நூலை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 1850ம் வருடம் யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்கள்.